Tuesday, April 27, 2010

காய்க்காத மரத்தின் விலை ஒரு லட்சம்

சவுதி அரேபியா பெட்ரோல் வளம் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிடத்தக்க ஒரு நாடு.

இங்குள்ள சவுதிகள் ( நாம் இந்தியர்கள் என்பது போல் அவர்கள் சவுதிகள் ) பெருமையாக சொல்லிக்கொள்வார்கள், உன் காலுக்கு அடியில் தோண்டினால் தண்ணீர் வராது பெட்ரோல்தான் வரும் என்று.

அந்த வளம்தான் அவர்களை பணக்கார நாடுகளின் வரிசையில் இன்றும் வைத்திருக்கிறது. நமக்கு வேலை வாய்ப்பையும் அளித்திருக்கிறது.

ஆனால் இவ்வளவு வசதியிருந்தும் அவர்கள் ஏங்குவது எதற்கு தெரியுமா? இயற்கைக்கு.

ஆம் இங்கு நம் நாட்டை போல் பச்சை பசேலென புல்வெளிகளோ, அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளோ எதுவுமே கிடையாது. பேரிச்சம் மரங்களும் ஒரு சில ஏரியாவில்தான் நன்கு வளர்கின்றன.

வருடத்திற்கு 5 நாட்கள் அல்லது பத்து நாட்கள் மழை பெய்யும் அதுவும் ஒரு சில வருடங்கள் பெய்யாது. மழை நேரங்களில் யாரிடமாவது என்ன இப்படி ஒரே நசநசன்னு சொல்லிவிட்டால் போதும் அவர்களுக்கு கோபம் வந்து விடும். அப்படி சொல்லக் கூடாது, மழை இறைவனின் அருட்கொடை இன்னும் நிறைய பெய்யட்டும். அதுதான் நல்லது என்பார்கள்.

இங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 6 ரூபாய் ஆனால் ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரின் விலை 24 ரூபாய். வீட்டிற்கு வந்து சப்ளை செய்பவர்களிடம் வேண்டுமானால் விலை குறைவாக இருக்கும்.

அவர்களுக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும். காரணம் இங்குள்ள இயற்கை வளங்கள். மூணாறு பற்றியும் ஊட்டி பற்றியும் நிறைய சவுதிகள் பெருமையாக பேச கேட்டிருக்கிறேன்.

போலவே சவுதி அரசும் செயற்கையாக இயற்கையை உருவாக்கி வருகிறது இது போல‌


இந்த கார்டன் அமைக்க ஆன செலவு மட்டும் 5 கோடி (தோராயமாக)இருக்கும். அனைத்தும் செயற்கை புல்வெளிகள். தினமும் இரு வேளை நீர் தெளிக்க பைப் வசதிகள் என்று மிக அழகாக திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

இதை திறந்து 2 மாதமாகிறது. தினமும் மாலையில் இருந்து இரவு 12 மணிவரை கூட்டம் கூட்டமாக ஏசி வீட்டை விட்டு இங்கு வந்து இளைப்பாறுகிறார்கள்.

மேலும் ரோட்டிற்கு நடுவே இது போல மரங்களை நட்டு தினமும் லாரிகள் மூலம் நீர் பாய்ச்சுகிறார்கள்.
ஏதாவது தருணத்தில் விபத்து ஏற்பட்டு இந்த மரங்கள் ஒடிந்தால் ஒரு மரத்திற்கு ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் வீதம் அவரிடம் அபராதம் விதிக்கப்படும்.

காய்க்காத, நிழல்தராத அந்த மரத்திற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்து தெரிந்திருக்கும் இயற்கைக்கு எவ்வளவு ஏங்குகிறார்கள் என்று.

ஆனால் நாம்?

இருக்கிற இயற்கை வளங்களை அழித்து கான்க்ரீட் காடுகளாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினர் மரங்கள் வளர்க்காவிட்டாலும் மரங்களை அழித்து நான் பார்த்ததில்லை. ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் இயற்கை வளங்கள் அதிகமாக சுரண்டப்படுகிறது.

இந்த பூமிக்கு நம்மாலான சிறிய உதவி அல்லது கடமை. வாழ் நாளில் ஒரு மரமாவது நட்டு, பெரிதாக வளரும் வரை அதை பராமரிப்பதுதான்.

என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை.

,

Sunday, April 25, 2010

யூத்ஃபுல் விகடனில் எனது கவிதை

வெளிநாட்டு வாசியின் லீவு நாட்கள் என்ற எனது கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது. அந்த கவிதை இதோ.

வெளிநாட்டுவாசியின் லீவு நாட்கள்.

கத்தை கத்தையாக

பணம் அழித்தவன்


கை
யில் எஞ்சி இருக்கும்

சில்லறை காசுகளின்


மு
க்கியத்துவத்தை

பெற்று விடுகின்றன


ஊர் வந்
தவனின்

இறுதி விடுமுறை நாட்கள்.


என்னை அனுப்ப சொல்லி உற்சாகப்படுத்திய நண்பர் சரவணனுக்கும், முகவரி தந்து அனுப்ப சொன்ன பா.ரா. அண்ணனுக்கும், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் ஸ்டார்ஜன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Saturday, April 17, 2010

வெளிநாட்டுவாசியின் புலம்பல்கள்

இரு நாட்கள் முன்பு பா.ரா அண்ணனிடம் இருந்து போன். என்ன அக்பர் எப்படியிருக்கீங்க, சரவணன் எப்ப வாரார் என்று கேட்டார். அண்ணனின் எழுத்துகளை போலவே பேச்சிலும் தனித்தன்மை உண்டு.

எனக்கு சின்ன சந்தேகம் இது அவரின் குரல் நடை (எழுத்து நடை மாதிரி:)) இல்லையே என்று நினைத்துக்கொண்டே, நேற்றே வருவதா சொன்னாரு போனுக்கு அடிச்சா எடுக்க மாட்டேங்குது என்றேன்.

இப்போ யாருட்ட பேசிட்டு இருக்கீங்களாம்ன்னாரு அட! இது நம்ம சரவணன்!! எப்படியிருக்கீங்க சரவணன் ஊரில் அனைவரும் நலமா என்று ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டோம். இந்த வாரத்தில் சந்திப்பதாக கூறினார். பின்பு பா.ரா அண்ணனிடம் சிறிது நேரம் பேசினேன்.

நண்பரை சந்திக்கும் மகிழ்ச்சியை சொல்லி அறிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இந்த வெள்ளியன்று ஐந்து மணி பஸ்ஸில் வருவதாக செல்லினார். சரியாக ஆறு மணிக்கு இறங்கியவரை அழைக்க பஸ் நிலையம் சென்றேன்.சிறிது தூரத்தில் வாசலில் ஒருவர் அவரைப்போலவே சற்று குண்டாக நின்று கொண்டிருந்தார்.

ஊருக்கு சென்ற சரவணனுக்கு உடம்பு வைத்துவிட்டதா என்று நினைத்துக்கொண்டே வாசலுக்கு அருகில் சென்றேன் அவர் இல்லை. போனடித்தேன். அக்பர் நான் உள்ளேதான் இருக்கேன் உங்களை பார்த்துட்டேன். அங்கே நில்லுங்க நான் வெளியில் வாரேன்னார்.

ஸ்லைடிங்க் டோர் ஓப்பனாக ஹீரோ என்ட்ரி. கட்டித்தழுவ முடியவில்லை கையில் டீ கப்புடன் இருந்ததால்.ஓரத்தில் டீ கப்பை கைவிட்டு என் கைகுலுக்கினார். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு கடைக்கு வந்தோம்.

சரவணன் ஒரு புத்தக தகவல் களஞ்சியம். எப்போதோ படித்த புத்தகத்தின் பேரைச் சொன்னாலே போதும். அதை எழுதியவர். எந்த சூழ்நிலையில் எழுதினார். அதற்கு முன்னும் பின்னும் என்ன புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பதை சொல்லுமளவுக்கு ஞாபக சக்தி. கூடவே புத்தக நேசிப்பும் வெளிப்பட்டு விடுகிறது.

சரவணன், ஸ்டார்ஜன் , நான் மூவரும் பேசிக்கொண்டேயிருந்தோம் நேரம் போவது தெரியாமல். காலை 6 மணிக்கு பணிக்கு செல்லவிருந்ததால் விடை பெற்றார். மீண்டும் காத்திருக்கிறோம் மற்றுமொரு வெள்ளிக்காக.

பா.ரா அண்ணனின் பணிச்சூழல் காரணமாக சந்திப்பது தள்ளிக்கொண்டே போகிறது. அதுவும் ஒரு நாள் நிறைவேறும்.

===========================

போன வாரத்தில் பின் தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது மனதை நெகிழ வைத்தது. பின் தொடரும் நண்பர்களுக்கும் , தொடர்ந்து என்னை வாசித்து உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

============================

ஒரு கவிதை.

வெளிநாடுவாசியின் லீவு நாட்கள்.

கத்தை கத்தையாக

பணம் அழித்தவன்

கையில் எஞ்சி இருக்கும்

சில்லறை காசுகளின்

முக்கியத்துவத்தை

பெற்று விடுகின்றன

ஊர் வந்தவனின்

இறுதி விடுமுறை நாட்கள்.

,

Thursday, April 1, 2010

மாறாத கறைகள் ( ஏப்ரல் 1 சிற(ரி)ப்பு பதிவு)

இந்த வருடம் ஏப்ரல் ஒன்னில் யாருகிட்டயும் ஏமாறாம‌ இருக்கனும், குறிப்பா சட்டையில மை படாமா பார்த்துக்கிடனும். இது என் குறிக்கோள்.

காரணம் இருக்கிறது. சென்ற வருடங்களில் நான் பட்ட பாடு அப்படி. என்னதான் பழைய சட்டை போட்டாலும். நம் மக்கள் முதுகில் குத்துவதில் வல்லவர்கள் முன்னாடி சிரிச்சுகிட்டே போவாங்க, பின்னடி திரும்புனாலும் சிரிப்பாங்க. ஆனா வீட்டுல வந்து பார்த்த முதுகெல்லாம் மையா இருக்கும்.

ஒரு முறை இவர்களை மூக்கூடைக்க மை கலரில் சட்டை போட்டு வெளியில் சுற்றினேன். வெற்றிக்களிப்பில் வீட்டுக்கு வந்து சட்டையை கழற்றினால் பச்சை மை கருமையாக படர்ந்திருந்து.

கழுவினால் போய்விடுகிறது ஏன் இந்த அலப்பறை என்பது காதில் விழுகிறது. அவர்கள் மை தயாரிக்கும் விதமே தனி. மையில் வாழைச்சாறை கலக்கினால். சட்டை கலர் போனாலும் போகும் மை போகாது.

எனவேதான் இந்த ஆண்டு இவ்வளவு வைராக்கியம். வீட்டுக்குள்ளேயே இருந்தால் பயந்தங்கோளி என்று பட்டம் பெற வாய்ப்பிருந்ததால் மிக அடர் கலரில் பழைய சட்டையை மாட்டிக்கொண்டு தெருவை கவனமாக சுற்றினேன். எதிர்படும் நண்பர்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு, வீடு வந்து சட்டையை கழட்டினேன். வெற்றி இன்று ஒரு கறை இல்லை.

சந்தோசத்துடன் திரைச்சிலை விலக்கி சமையலறைக்குள் செல்ல முயன்ற போது. டம் தடார்!

" அடப்பாவி பயலே கொதிக்கிற ஆனச் சட்டியில வந்து விழுந்துட்டியே. பிள்ளையை பிடிங்கம்மா" பெரியம்மா கத்துகிறார்கள்.

நெஞ்சு வயிற்றுப்பகுதியில் மீன் குழம்பு மணம் சுடச்சுட.

குளிர்ந்த நீரில் கழுவி மருந்து எடுத்து போடப்போனார்கள்.

"வேணாம் " அலறினேன். பின்னே எந்த மை படாமல் இன்று தப்பி வந்தேனோ அந்த மை உடம்பு பூராவும் தேய்த்தால் சும்மாவா இருக்க முடியும்?

" சும்மா கிட‌ புண்ணு ஆறவேணாம. புள்ளைக்கு பொத்து போயிலோ கிடக்கு. நீ பார்த்து புடிச்சிட்டு போக கூடாதாக்கா" இது அம்மா.

" அவம்தாம்ளா வேகமா வந்து விழுந்துட்டான்" பெரியம்மா.

சிறிது நேரம் கழித்து அந்த வேதனையிலும் சிரித்துக்கொன்டிருந்தேன். அம்மாம்மா வந்து கேட்டார்கள்

"ஏம்மா வலிக்குதா".

வலிக்காம? நல்லாவே வலிக்குது.

" சரி எதுக்கு சிரிச்சே".

இல்லை இதுக்கு சட்டை முழுக்க மையா ஆனா நல்லாயிருந்துருக்குமேன்னு தோணுச்சு அதுதான்.

"என் ராசா ஒன்னும் ஆவாது நீ வீரன்லடா. "

இன்னொன்னுக்கும் சிரிச்சேன். நல்ல வேளை இப்ப‌ பத்து வயசா இருக்கும் போது நெஞ்சுல,வயத்துல பட்டுச்சு. வளர்ந்த பிறகு பட்டா என்ன ஆயிருக்கும்.

" அடி படுவா. வக்கனைப்பேச்சுக்கு குறை இல்லை அப்படியே அவரு மாதிரியே. "

இப்போது எழுதும் போதும் வயிற்றை தடவிப்பார்த்து சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.


,

Monday, March 29, 2010

வலைச்சரத்தில் உங்கள் அக்பர்

அன்பு நண்பர்களே!

நம் சீனா ஐயா வலைச்சரத்தில் எழுத வாய்ப்பளித்துள்ளார். எனவே இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் எழுதுகிறேன்.

எப்போதும் போல தங்கள கருத்துக்களையும், வாழ்த்துகளையும் வலைச்சரத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே.

அன்புடன்

அக்பர்.

Thursday, March 25, 2010

இந்த இடுகைகள் உங்களுக்கும் பிடிக்கும்.

படித்ததில் பிடித்த இடுகைகளை (பதிவுகளை பற்றி அல்ல) போன வாரம் எழுதினேன். அதற்கு தாங்கள் அளித்த வரவேற்பு என்னை இந்த வாரமும் தொடரவைக்கிறது. இதோ இந்த வாரம் படித்ததில் பிடித்தது.

இதில் உங்களுக்கு பிடித்த , பிரபலமான பதிவர்கள் வரலாம். எனவே "சூரியனுக்கே டார்ச் லைட்டா"ன்னு கம்பு தூக்க வேண்டாம். :)

அண்ணன் உண்மைதமிழன் "மக்கள் நித்தியானந்தன்களைத் தேடி ஏன் ஓட வேண்டும்..?" அப்படின்னு கேள்வி கேட்டு அவர் ஸ்டைலிலேயே அருமையாக விளக்கமும் கொடுத்திருக்கிறார். பதிவு எவ்வளவு நீளமாக இருந்தாலும் படித்து விட்டு போக வைப்பது அவர் எழுத்தின் சிறப்பு.

நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் ‍ 4 மனோ எழுதிய இந்த தலைப்பே வாசிக்கத்தூண்டிகிறது. விரும்பும் காரணத்தை விளக்குவதோடு மட்டுமில்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவரையும் தொடரவும் சொல்லியிருக்கிறார். வாசியுங்கள் தொடருங்கள்.

நம்ம சஞ்சய் காந்தி அவர்கள் My Name is Bloody Blogger ன்னு அதிரடியா ஒரு பதிவு போட்டிருக்கார். ஏன் ஆங்கிலத்துல தலைப்பு வைக்கணும்னு யாராவது கேட்டிங்கன்னா , அதற்கும் பதில் சொல்லியிருக்கிறார். போய்த்தான் பாருங்களேன்.

நம்ம க. பாலாசி அவர்கள் திராட்சை என்றும் இனிப்புதான்.... என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை எழுதியிருக்கிறார். ஆனால் அதற்கு சொல்லும் காரணம் மிக சுவாரஸ்யம். நீங்களும் திராட்சையின் சுவையை உணர வாசித்துப் பாருங்கள்.

முகுந்த் அம்மா அவர்கள் தமிழ் பதிவர்களுக்கு பிடிக்காத ஒரு கேள்வியை கேட்டிருக்காங்க அது போட்டி மனப்பான்மை நல்லதா? என்பதுதான். ஆனால் அவங்களோட நியாயமான ஆதங்கத்தை நாம் பாராட்டியே ஆகணும்.

எடக்கு மடக்கா தலைப்பு வைக்கிறதுல நிகர் நம்ம பழமைபேசி அண்ணாச்சிதான். அம்மணம் ன்னு தலைப்பு வச்சி நெத்தியடியா ஒரு கவிதை எழுதியிருக்காரு பாருங்க.

வானம்பாடிகள் ஐயா தானும் யூத்துதான் என்று அடிக்கடி எழுதி நிறுபிப்பார் அதுல ஒன்னுதான் கலாய்க்கப்போவது யாரு -2 பதிவுலக நண்பர்களை கலக்கலாய் கலாய்ச்சு எடுத்திருக்கிறார். அவசியம் போய் பாருங்க.

இது நான் படித்த இடுகைகள். படிக்காமல் விட்டது நிறைய இருக்கலாம். நீங்க படித்ததில் பிடித்த‌தையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

.

Sunday, March 21, 2010

நீரின்றி அமையாது இவ்வுலகு !

அப்போ 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் (இப்பவும் அவ்வளவுதானே படிச்சிருக்கேன்னு யாருங்க அங்க சத்தம் கொடுக்கிறது). உறவினர் கல்யாணத்திற்கு சில சொந்தங்களுடன் கொங்கராயகுறிச்சி சென்றோம். மெயின் ரோட்டில் இறங்கி ஆற்றை கடந்து கடந்தோம்.

அப்ப செந்திலுக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது. நான் அப்பாவிடம் கேட்டேன் இந்த தண்ணியை அப்படியே குடிக்கலாமா என்று (ஏன்னா பள்ளியில் சுத்திகரிப்பு முறைகளை பற்றி பாடம் நடத்தியிருந்தாங்க). எல்லோரும் சிரித்தார்கள்.

அப்பாவுக்கு வந்ததே கோபம். போலே.. போலே.. கேவலப்படுத்துறதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கான் பாரு.. குடிக்கிற தண்ணிய குடிக்கலாமான்னு கேட்ட முதல் ஆளு நீதான் என்றார்கள் என் கேள்வியின் அர்த்தம் புரியாமலே.

இப்போது அதே கேள்வியை கேட்டால் குடிக்க வேண்டாம்னு சொல்லுவார்கள். ஆறு அவ்வளவு அசுத்தம்.

தண்ணீரை திறந்து விட்டுக்கொண்டே பல் தேய்க்காதீர்கள். குளிக்கும் போது சவரில் குளிக்காதீர்கள். 4 பக்கெட்டுக்கு பதில் 2 பக்கெட் குளித்தால் போதும். இப்படி அப்படின்னு தண்ணீரை சேமிக்க நிறைய வழிகள் சொல்றாங்க. இந்த வழிகளில் தண்ணீரை சேமிக்க முடியும்கிறது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் சாயப்பட்டறை, பேப்பர் மில், தொழிற்சாலை போன்றவற்றின் கழிவுகளை ஆறு,குளம்,ஏரிகளில் கலந்து. நாம் மேற்சொன்ன வழிகளில் சேமித்த நீரை மொத்தமாக மாசுபடுத்துபவர்களை தடுக்க என்ன வழிகள் உள்ளன?

சிங்கப்பூர் நிறுவனத்துடன் சேர்ந்து கூவத்தை சுத்தப்படுத்துவது நல்ல விசயம்தான். ஆனால் தமிழகத்தில் உள்ள மற்ற நதிகள் எல்லாம் கூவமாகிக்கொண்டு வருவதை யார் தடுப்பது?

இறைவன் நாம் வாழ்வதற்கு தேவையான வசதிகளை அருமையாக அளித்திருக்கிறான். அவற்றை நம் சுய நலத்திற்காக பாழ்படுத்தி விட்டு பிறகு புலம்புவது எந்தவிதத்தில் நியாயம்?

இருக்குற நீர் வளங்களை அசுத்தபடுத்திவிட்டு சந்திரன்ல நீர் இருக்கா, செவ்வாய்ல நீர் இருக்கான்னு தேடிக்கிட்டு இருக்கோம். அங்கேயும் போய் மாசுபடுத்தவா?

மழை நீர் சேகரிப்பு திட்டம் ஒரு அருமையான திட்டம். ஆனால் அதற்கு கட்டபட்ட தொட்டிகள் இன்று எங்கு ? நிலத்தடி நீர் உயர மாற்று வழிகள் ஏதேனும் உள்ளனவா?

தண்ணீரை சிக்கனமாக செலவழித்தால் மட்டும் போதாது முதலில் அதை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும்.

நெல்லையில் இருக்கும் வரைக்கும் குடிப்பது முதற்கொண்டு அனைத்துக்கும் ஆற்று நீர்தான். என்று சென்னை சென்றேனோ அப்போதுதான் தண்ணீரோட அருமை தெரிஞ்சது. குளிப்பதற்கு 1 பக்கெட் உப்பு நீர், குடிப்பத்ற்கு கேன் வாட்டர். சென்னையை ஒப்பிடும் போது பாலைவன நாடான சவுதியில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்று சொல்லலாம்.

சென்னையில் ஒரு நண்பனிடம் கேட்டேன். இங்கு நல்ல குடிநீர் வழங்குவது அரசுக்கு அவ்வளவு கஷ்டமா? அவன் சொன்னன். அப்புறம் தண்ணி வியாபாரிங்கள்லாம் எங்க போவாங்க?

என்று வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதை வியாபாரமாக்கினோமோ அன்றே அதை பாதுகாக்கும் தகுதியை நாம் இழந்து விட்டோம்.

இன்று உலகம் முழுக்க தண்ணீர் மிகச்சிறந்த வியாபார பொருள்.

என்று ஆளும்வர்க்கம் இதை தடுத்து, வீணாக கடலில் கலக்கும் நன்னீரை முறைபடுத்தி சேமித்து மக்களுக்கு முறையாக வினியோகம் செய்கிறதோ அன்றே பாதி பிரச்சனை தீர்ந்து விடும் என்று நம்புகிறேன். நீர் வளம் நிறைந்த நம் நாட்டில் விலைக்கு வாங்கி குடிப்பது வெட்கக்கேடானது.

தினம் தினம் பயன்படுத்தும் தண்ணீருக்காக ஒரு தினம் அவசியம்தான். நாளை 22 மார்ச் உலக தண்ணீர் தினம்! எனவே மக்களே தண்ணீரை சேமியுங்கள் , தொழிலதிபர்களே தண்ணீரை மாசுபடுத்தாதீர்கள்.

,

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails