Saturday, February 27, 2010

பதின்ம வயதில் பட்டவை (தொடர் பதிவு )


அண்ணன் கோவி கண்ணன் பதின்ம வயதின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு, என்னையும் தொடரச்சொல்லி அழைத்துள்ளார். அவருக்கு மகிழ்ச்சிகளும் நன்றிகளும்.

கொசுவர்த்தி சுருளை 18 வருடம் பின்னோக்கி சுற்றினால்...

சிங்கார வேலனில் நம்ம கமல் சென்னைக்கு கிளம்பும்போது பக்கத்து வீட்டு அம்மா, கருவாடு கூடையை தன் மகன்கிட்ட சேர்க்க சொல்லி கொடுப்பாங்க.

கூடவே ஒரு டயலாக்கும் " இந்த ஊருல யார் பேச்சையும் தட்டாத நல்ல புள்ள நீதான்"னு

அந்த மாதிரிதான் என் நிலமையும். சுற்றியுள்ள மக்கள் சொன்னால் தட்ட முடியாத அளவுக்கு அன்பை வைத்திருந்தார்கள்.

பதிமூன்றாம் வயதின் தொடக்கம் ஏழாம் வகுப்பின் ஆரம்பம். ஆசிரியர்களும் என் மீது பிரியமாகவே இருந்தார்கள். உடம்பு சரியில்லாமல் அடிக்கடி லீவு எடுப்பது போன்ற நல்ல பழக்கங்களும் உண்டு. ஆனால் என்னிடமிருந்த ஒரே கெட்ட பழக்கம் (?) கிரிக்கெட். அண்ணன்களுடன் கிரிக்கெட் விளையாடுவதில் அவ்வளவு விருப்பம்.

ஒரு முறை கிரிக்கெட் விளையாட லீவு எடுத்தது தெரிந்து போய் இமேஜ் டேமேஜ் ஆகியது.

வாத்தியார் கேட்ட ஒரே கேள்வி " அந்த வெள்ளைக்காரனுங்கதான் வெயிலுக்காக விளையாடினாங்க. நீ இருக்குற நிலமைக்கு இந்த வேகாத வெயில்ல விளையாடனுமா? போ ராசா, போய் படி" இதுக்கு அவர் நாலு அடி அடித்திருக்கலாம்.

அன்றிலிருந்து உடம்பு சரியில்லைனா கூட வீட்டிலிருந்து ஆள் வந்தா தான் விடுவாங்க.

இருபாலர் பள்ளியாகையால் வீட்டிலிருந்து நல்ல குளித்து விட்டு , தலை சீவி நீட்டா ட்ரெஸ் பண்ணிதான் கிளம்புவோம்.

எங்கள் (புனித அந்தோனியார் நடுநிலை) பள்ளியில் ஒவ்வொரு மாதமும் தேர்வு வைத்து ராங்க் கொடுப்பது வழக்கம். லட்சுமி சங்கர். 6ம் வகுப்பிலிருந்து எனக்கு போட்டியாக இருந்த ஒரே ஆள். நல்ல நண்பன்(இனிய எதிரி).அவன்தான் லீடர். எப்போதும் முதல் ராங்க் எடுப்பவன்.எனக்கு ரெண்டாமிடம்.ஏழாம் வகுப்பில் ஒரு முறை அவனை முந்தி முதல் இடத்துக்கு வந்த ஒரு மாதமும் பேசமால் இருந்தான். அவ்வளவு வைராக்கியம்.

எட்டாம் வகுப்பு தொடக்கத்தில் சங்கர் வேறு ஸ்கூல் மாறி சென்றதால், பள்ளி மாணவர் தலைவன் (SPL ) பொறுப்பை தலைமையாசிரியர் ஏற்க சொன்னார். அதிலுள்ள தலைவலி (ஒன்னுமில்லை ஃபிரியா இருக்க முடியாது) அறிந்து மறுத்துவிட்டேன்.

SPL ன் வேலை காலை அசெம்ப்ளியில் உறுதிமொழி எடுப்பது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது இப்படி பல...

பின்பு, நம்ம ஸ்டார்ஜன் மற்றும் பலரை அந்த பொறுப்பு சுற்றி, குரல் சரியாக செட்டாகாததால் பின்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டது ( நான் நல்லா கத்துவேன்).

ஸ்கூலில் சவ் மிட்டாய் விற்கும் அக்காவைச்சுற்றி எப்பவும் கூட்டம் இருக்கும். நம்ம ஸ்டார்ஜன் தான் அதிகமா வாங்கி தின்பாரு. அதனால மேலதிக விவரங்களுக்கு காண்டக்ட் ஸ்டார்ஜன் ப்ளீஸ்.

எங்கள் அம்மாவின் அம்மா ஊருக்கு சென்றால் ற்றில் குளிக்க செல்வது வழக்கம்( வீட்டிலும் குளிப்பேங்க). சகோதரி மற்றும் உறவினர் பெண்களுடன் தான் நானும் தம்பிகளும் செல்வோம். அவங்களுக்கெல்லாம் நாங்கதான் பாதுகாப்புன்னு ஒரு நெனப்பு(எங்களுக்குத்தான்). ஆற்றுக்கு செல்லும் வரை சந்தோசமாக பேசிக்கொண்டே செல்வது, குளித்து வரும் வழியில் வெள்ளரி, பதநீர், வடை என்று எதாவது சாப்பிட்டுக்கொண்டே போவதை நினைத்தால் நாக்கில் நீர் சுரக்கிறது.

யாராவது ஃபாலோ பண்ணுற மாதிரியோ, பார்த்துகிட்டே இருக்குற மாதிரியோ தெரிஞ்சா. நாங்க களத்துல இறங்கி ஒரே முறைப்புதான். அப்புறம் எப்படி பின்னாடி வருவாங்க?

அது மழை நேரம். வாய்க்கால் (கால்வாய்) நிறைய நீர். நானும் தம்பியும் குளித்து கொண்டிருக்கும் போது அடித்துச்செல்லப்பட்டோம். அடுத்த படித்துறையில் குளித்து கொண்டிருந்த அக்காமார்கள் பிடித்து இழுத்து காப்பாற்றி விட்டார்கள்.

வீட்டில் ஒரே பாராட்டு, நீ தம்பியை பிடிக்கலைன்னா அவன் தனியா போயிருப்பான்னு. நான் சொன்னேன், என் கையைப்பிடிச்சது அவன். தண்ணி அவனை இழுத்ததால் என்னை அவன் இழுத்து விட்டான் என்று.

கோபப்பட்டு ஏதாவது கத்தினால் அம்மம்மா சொல்லுவா. "பொறுமைக்கடல்ப்பா நீ(அவ்வ்வ்), இப்படி கோபப்பட மாட்டியே. ஒருத்தரை மாடு மாதிரி இருக்கியேன்னா கோபப்படுவான். அதையே பசு மாதிரி இருக்கியேன்னா சந்தோசப்படுவான். சொல் ஒன்னுதாம்ப அது தர்ற அர்த்தத்தை பார்த்தியா.யார்ட்ட பேசினாலும் பண்பா பேசணும். பொறுமைக்கு அழிவேயில்லைப்பா" என்று.

ஒன்பது , பத்தாம் வகுப்பை நெல்லை சாப்டர் மேல்நிலை பள்ளியில் படித்தேன். பஸ்காரர்கள் மாணவர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்ததால் நாங்கள் ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து கோயில் வாசலில் ஸ் ஏறுவோம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் (1995) 423 மார்க் எடுத்திருந்தேன். கணக்கில் 100. சாக்லெட் வாங்கி கொண்டு, பழைய பள்ளிக்கு சென்றேன். மிக்க மகிழ்ந்தார்கள். அன்றைய அசெம்ப்ளியில் அறிவிப்பும் செய்தது பெருமையாக இருந்தது.

வகுப்பு வாரியாக ஆசிரியர்களுக்கு சாக்லெட் கொடுத்துக்கொண்டே வந்தேன். 6ம் வகுப்பு டீச்சர் நான் படிக்கும் காலத்திலேயே ரொம்ப கண்டிப்பானவர். அவரிடம் கொடுத்ததும் அவர் சொன்னார். " தம்பி மார்க் எடுத்தது சந்தோசம், எனக்கு சாக்லெட் வேணாம்பா. அப்புறம் இன்னொன்னு, யாருக்கு கொடுத்தாலும் சாக்லெட்டை நீ எடுத்து கொடுக்காதே , அவங்களிடம் நீட்டு தேவையானதை எடுத்துப்பாங்க. யாரும் அள்ளிற மாட்டாங்க. அதுதான் மரியாதை" என்று. அப்போது நினைத்தேன் கற்று கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று.

இந்த கால கட்டங்களில் பெண்களுடன் சேர்ந்து ஆற்றுக்கு செல்வதை நிறுத்திக்கொண்டேன் (அல்லது நிறுத்திவிட்டார்கள்). பெண்களுடனான பழக்கம் குறைந்து ஆண்களின் பழக்கம் அதிகமாகியது.

ம்ம்ம்ம்ம்ம்..... அந்த காலம் மாதிரி வராது :)
பின்பு நெல்லை IRT பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.

வாழ்க்கையில் சில சிறப்பு தருணங்கள் அமையும் என்பார்களே அது ரெண்டாமாண்டில் ராதை மேடத்தின் மூலமாக் அமைந்தது. அப்போதுதான் B.E.,முடித்து விட்டு ட்ரைனிங் லெக்ட்சரராக சேர்ந்திருந்தார். நாலைந்து வயது வித்தியாசம் இருக்கும். அக்காக்களின் சரசரியான தோற்றம்.

வந்த முதல் நாளே பேச்சின் மூலம் எங்களை கவர்ந்து விட்டார். பெயர் விபரம் கேட்டவர். பின்பு கேட்ட கேள்வி "உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்" ஆளாளுக்கு பலரைச்சொல்ல. கடைசியில் "உங்களுக்கு பிடிச்ச ஹீரோ நீங்கதான். உலகத்தில் உங்களை நீங்கள் விரும்புகிற அளவுக்கு வேறு யாரையும் விரும்புவதில்லை. உங்களை நீங்கள் அறிந்து கொண்டால் எல்லோரும் விரும்புவராக மாறலாம்" என்று அவர் சொன்னார்.

எத்தனை பெரிய உண்மை. அன்றிலிருந்து எங்களில் ஒருவராக, எங்கள் வழிகாட்டியாக நாங்கள் பார்க்கத்தொடங்கினோம். அறிவுரை ஏதும் சொல்லவில்லை ஆனால் வாழ்ந்தார்கள். (எளிதாக சொல்லவேண்டும் என்றால் 3 idiots அமீர்கான் மாதிரி)

இருபாலர் கல்லூரியில் ஒன்றாக படித்தாலும். ஆண்களும் பெண்களும் அவரர்க்கான உலகங்களில் தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். "விலகி இருந்தால் தான் பிரச்சனை வரும். இருவரும் சேர்ந்து பழகி நண்பார்களாகி விடுங்கள். எந்த தப்பான எண்ணமும் வராது" என்று தெளிவு படுத்தியவர். அதன் பிறகு இருபாலரும் அருகில் அமர்ந்தாலும் நட்பைத்தவிர வேறெந்த எண்ணமும் வந்ததில்லை.

இன்றும் எந்த ஒரு செயலிலும் அவர்களின் பாதிப்பு தெரிகிறது. அது தான் அவர் நோக்கத்தின் வெற்றி.


பெருங்கடலில் ஒரு துளி போல நான் இங்கு சிலவற்றை மட்டுமே சொல்லமுடிந்தது.

சொன்னதெல்லாம் உண்மை. சொல்லாததும் உண்மை.

பதிவின் நீளம் , உங்கள் நேரம் இரண்டையும் கருதி இத்துடன் முற்றும்.


இந்த பதின்ம நினைவுகளை தொடர நான் அன்புடன் அழைப்பது.

கண்ணா

ஜெகநாதன்

நாடோடி

ஷங்கி

செ.சரவணகுமார்

,

Wednesday, February 3, 2010

டிவி வாங்க போகிறீர்களா ?

சில (பல?) வருடங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதியான சோனி, பானாசோனிக், சார்ப், சான்யோ, நேஷனல் போன்ற டிவிக்களை டெக்குடன் (அப்படின்னா என்னவா) வாடகைக்கு விடுவார்கள். இரண்டு மாதத்திற்கு முன் வந்த புத்தம் புதிய படம் திரையிடப்படும்.

வாடகைக்கு கொண்டு வரும் நபருக்கு அந்த ஏரியாவில் இருக்கும் மரியாதையே தனி. கூடவே இருந்து படம் முடிந்தவுடன் கழட்டி கொண்டிபோய்விடுவார்( யாராவது ரெண்டாம் தடவை போட்டு பார்த்துட்டா). சொல்ல மறந்துட்டேன் அதுக்கு முன்னாடி அரை மணி நேரம் ஒலியும் ஒளியும் ஓடும். ராமராஜனும், மோகனும் கொடிகட்டி பறந்த நேரம் அது.

முதன் முதலில் கருப்பு‍ வெள்ளை சாலிடர் (இப்ப எங்க கண்ணா இருக்கே) டிவி வாங்கி, ஆண்டனா செட்பண்ணி, பூஸ்டரை திருகி புள்ளிகளுடன் தூர்தர்சன் உருண்டை டோன்டோன்டொடடோன் என்ற சத்தத்துடன் உருண்டதை பார்க்கும் போது ஏற்பட்ட பரவசம் உங்களில் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அத்துடன் சில சமயம் ரூபவாஹினி சேனலும் தெரிந்துவிட்டால் வரும் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை.

செவ்வாய்க்கிழமை நாடகம், வெள்ளிக்கிழமை ஒளியும்/ஒலியும், ஞாயிற்றுக்கிழமை திரைப்படம். இந்த மூன்றையும் பார்க்காதவர்களை மற்றவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். வெள்ளி கிழமை பள்ளி விடும் போது சனி, ஞாயிறு லீவு என்பதை விட அன்று இரவு வரும் ஒளியும்/ஒலியையும் நினைத்துதான் மனது சந்தோசப்படும்.

பின்பு கேபிள் கனெக்ஷன் வந்த பிறகு. டிவி/டெக் கலாச்சாரம் மெல்ல குறையத்தொடங்கியது. அவர்களே பழைய படம் , புதுப்படம் என்று நேரத்துக்கு ஏற்ப போட்டுவிடுவார்கள். அப்பவே பன்னிரெண்டு மணிக்கு மேல் மிட்நைட் மசாலா போட்ட புண்ணியவான்களும் உண்டு.

தொலைக்காட்சி வரலாற்றில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது சன் டிவியின் வருகைக்கு பிறகுதான். அதற்கு முன் பூமாலை என்ற வீடியோ பத்திரிக்கை கேசட் வெளிவந்துகொண்டிருந்தது. சன் டிவியின் நிகழ்ச்சி தரமும் துள்ளியமும். காய்ந்து கிடந்த மாட்டுக்கு வைக்கோல் கிடைத்த மாதிரி மக்களை அதனுடன் கட்டி போட்டுவிட்டது. இன்று ஆயிரம் சேனல் வந்தாலும் ரிமோட்டின் முதல் தேர்வாக சன் டிவி இருப்பது அதனால்தான்.

இன்று ஒரே டிவியில் 200 சேனல்கள் என்பது சர்வசாதாரணமாக போய் விட்ட வேலையில். டிவி கம்பெனிகளும் அதற்கு தகந்தாற்போல் புதுப்புது மாடல்களை வெளியிட்டு வருகின்றனர். மெக்கானிக்கல் , எலெக்ட்ரானிக் , டிஜிட்டல் டியூனர்கள் ஃப்ளாட் டியூப் என்று காலத்திற்கேற்ப டிவி தொழில் நுட்பத்தில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதில் த‌ற்போது வந்திருக்கும் LCD டிவிக்கள். டிவியின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன.


இதன் பயன்கள்:

நாம் முன்பு பார்த்த / பார்த்துக்கொண்டிருக்கும் CRT மாடல் டிவிக்களில் படங்கள் ஒளிபரப்பாகும்போது மேலும் கீழும் கருப்புப்பட்டை வருவதை பார்த்திருப்பீர்கள் அதற்கு காரணம். நமது திரை 4:3 என்ற விகிதத்தில் இருப்பதால்தான் LCD டிவிக்களில் இதன் விகிதம் 16:9 என்று இருப்பதால் அந்த கரும்பட்டைகள் இல்லாமல் திரைமுழுவதும் படம் தெரியும் அல்லது கரும்பட்டையின் அளவு குறைந்து விடும்.

ஆனால் சேனல்கள் பார்க்கும்போது பழைய டிவிக்களை போல அல்லாமல் இதில் முகம் அகன்று தெரியும். இதற்கு காரணம் நமது கேபிள் டிவியின் ஒளிப்பரப்பு முறைதான் (4:3). வருங்காலங்களில் இது சரிசெய்யப்பட்டுவிடும். செட் டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. அதில் உள்ள மெனுவின் மூலம் நாம் 16:9 க்கு மாற்றி கொள்ளலாம் (மேலதிக விபரங்களுக்கு செட் டாப் பாக்ஸ் பயனர் கையேட்டை பார்க்கவும்)

பழைய CRT டிவிக்களைவிட இதில் படத்தின் கலரும் துள்ளியமும் அருமையாக இருக்கும் (DVD Blu-ray Disc படம் பார்க்கும் போது)
வெளிப்புற வெளிச்சங்கள் படம் பார்ப்பதை பாதிக்காது.

சரி LCD TV வாங்க முடிவு செய்து விட்டீர்களா அதற்கு முன் கீழுள்ளவற்றை மனதில் கொள்ளுங்கள்.

1. முதல் விசயம் டிவியின் அளவு. இப்போது எல்லோருடைய தேர்வும் 32 ல் இருந்தே ஆரம்பம் ஆகிறது. உங்கள் வீட்டின் அளவை பொறுத்து 37,42,50 என்று தேர்ந்தெடுக்கலாம். சின்ன அறைக‌ளில் பெரிய திரை வைத்தால் படம் தெளிவாக தெரியாது. திரையின் அளவுக்கு இருமடங்கு தூரத்தில் இருந்து பார்ப்பது நல்லது. உதாரணமாக 32" டிவி வாங்கினால் ஐந்து அடி தூரம் தள்ளி அமர்ந்து பார்க்கவும்.


2. திரையில் ஒரு புள்ளி தோன்றி மறைய ஆகும் நேரத்தை ரெஸ்பான்ஸ்டைம் என்று சொல்வார்கள். இது எந்த அளவிற்கு குறைவாக உள்ளதோ அதைப்பொறுத்து வேகமாக நகரும் காட்சிகள் துள்ளியமாக தெரியும். உதாரணத்திற்கு வேகமாக செல்லும் கார், நகரும் எழுத்துக்கள் போன்றவை. இப்பொழுது 5ms மற்றும் அதற்கு குறைவான ரெஸ்பான்ஸ்டைம் உள்ள டிவிக்கள் வரத்தொடங்கியுள்ளன. சரி பார்த்து வாங்கவும்.

3. எல் சி டி டிவிக்களில் அதிகம் குழப்பும் விசயம் HD Ready, Full HD எளிதாக சொல்வதானால் நாம் தற்போது பார்க்கும் சேனல்களுக்கும், DVD களுக்கும் HD Ready போதுமானது. Games, Blu-ray Disc போன்றவைகள் பயன்படுத்த Full HD டிவிக்கள் பொருத்தமாக இருக்கும். இதில் முடிவெடுப்பது உங்கள் பட்ஜெட்டை பொறுத்தது.

4. அது போல LED LCD TV களுக்கு விலை அதிகம். LED என்பதும் LCD TV தான். ஆனால் இதன் பேக் லைட்டிங்கில் ஃப்ளொரசன்ட் க்கு பதில் LED பயன் படுத்தப்படுகிறது. எனவே இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை.எனவே அதிக பணம் செலவழித்து LED LCD TV வாங்க வேண்டாம்.

5. பிரபலமான கம்பெனிகளின் டிவிக்களையே வாங்குங்கள் (தற்போது சோனியும், சாம்சாங்கும் முன்னணியில் உள்ளது). அதுபோல‌ விற்பனைக்கு பிந்தைய‌ சேவை எந்த பிராண்டில் அதிகம் என்பதை உறுதிப்படுத்திவிட்டு வாங்குங்கள்.சில பேர் ஒரு மாதம் ரெண்டுமாதம் என்று இழுத்து விடுவார்கள்.


6. எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பழைய டிவியை மாற்றவேண்டிய கட்டாயம் இருந்தாலோ, புது டிவி வாங்க வேண்டிய அத்தியாவசியம் இருந்தாலோ மட்டுமே LCD TV வாங்குங்கள். ஏனெனில் இப்போதைய சேனல் ஒளிப்பரப்பில் பழைய டிவிக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது.

7. வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊர் செல்வதற்கு ஒரு மாதம் இருக்கும் போது வாங்கினால் போதுமானது. காசு இருக்கிறது என்று 6 மாதத்துக்கு முன்பே வாங்கி வைத்துகொண்டால் நீங்கள் ஊர் செல்லும் நேரத்தில் நீங்கள் வாங்கிய மாடலை விட புதிய மாடல் விலை குறைவாக வந்து இருக்கும். இது அனைத்து எலெக்ட்ரனிக் சாதனங்களுக்கும் பொருந்தும்.

வெளி நாடுகளில் இருந்து ஊருக்கு கொண்டு செல்லும் டிவிக்கு (சைஸ் வாரியாக ) ஏர்போர்டில் எவ்வளவு Tax (வரி) கட்டவேண்டும் என்பதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.
,

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails