Wednesday, December 15, 2010

சவுதி அரேபியா !

சகோதரர் எம்.அப்துல்காதர் சவுதியை பற்றி ஒரு இடுகை எழுதியிருந்தார். இன்னும் சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருக்கிறதே என கேட்டதற்கு, அதையே தொடர்பதிவாக எழுத அழைத்து விட்டார். அவருக்கு எனது நன்றிகள்.

சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருந்தாலும், சவுதியில் நான் இருக்கும் பகுதியின் அடிப்படை வசதிகளைப் பற்றி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பல தலைமுறைகளாக இங்கு மன்னராட்சிதான் நடக்கிறது.

இதனால் இங்கு சுவற்றில் எழுதுவது, போஸ்டர் அடித்து ஒட்டுவது, பேனர்கள் வைப்பது, போராட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம் என நமது ஜனநாயக கடமைகளை இங்கு ஆற்ற முடியாது. எல்லாவற்றிற்கும் தடை.ஆள்பவர்களை விமர்சனம் செய்ய முடியாது.

பத்திரிகைகள் முதற்கொண்டு தணிக்கை செய்த பிறகே வெளிவருகிறது.

என்னதான் அடக்குமுறைகள் செய்தாலும், ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரம் செய்து மக்களை கொள்ளையடிப்பதை விட மன்னராட்சி மூலம் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது மேலாக தெரிகிறது. எந்த வகையான ஆட்சி முறையாக இருந்தாலும் ஆள்பவரை பொருத்துதான் மக்களுக்கு நன்மையும் தீமையும் நடக்கும் போலும்.

அப்படி பார்க்கையில், சவுதி அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அருமையாகவே செய்து கொடுத்துள்ளது. நீங்கள் சவுதி பிரஜையாக இருந்து ஓரளவு நன்றாக படிப்பவராக இருந்தால், நீங்கள் அமெரிக்காவில் சென்று படிக்க ஆகும் செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிற‌து.

அனைத்து மக்களுக்கும் ஒரே கல்வி முறைதான். தமிழ் வழி, ஆங்கில வழி என பகல் கொள்ளைகள் இல்லை.

இங்கு முதலில் பாராட்டவேண்டிய விசயம் தண்ணீர்!. நான் இங்கிருக்கும் இந்த ஏழு வருடத்தில் ஒரு முறை கூட தண்ணீர் பிரச்சனை வந்ததே இல்லை. கடலில் இருந்து எடுத்து சுத்திகரிப்பு செய்து கொடுக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. அவ்வளவு சுத்தமாக இருக்கிறது.இங்கு இதை ஸ்வீட் வாட்டர் என அழைக்கிறார்கள்.

இங்குள்ள போலீஸ் அதிகாரிகளை பற்றி சொல்லியே ஆகவேண்டும். யாரை விசாரித்தாலும் முதலில் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லி நலம் விசாரித்துக்கொண்டு பின்புதான் பிரச்சனையைப் பற்றி பேசுவார்கள். மிரட்டுவது, லஞ்சம் கேட்பது போன்றவை பெரும்பாலும் இல்லை. கடைகளில் மாமூல் கேட்பது, சலுகை எதிர்ப்பார்ப்பது போன்றவை சுத்தமாக இல்லை.

அதுபோல இங்குள்ள ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகளை கண்காணிப்பதற்கென்றே இருக்கும் அதிகாரிகள். ஒரு சிறு அசுத்தம் இருந்தாலும் ஃபைன் போட்டு விடுகிறார்கள். தொடர்ந்து அது போல் இருந்தால் உரிமத்தை ரத்து செய்து விடுகிறார்கள். இந்த விசயத்தில் அரசு கடுமையான விதிகளை பின்பற்றுகிறது.

பக்காலா என்று சொல்லப்படும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இது போன்று கடுமையான சட்டங்களை பின்பற்றுவதால் தரம் குறைந்த பொருட்கள் விற்பதற்கு வாய்ப்பு இல்லை. அனைத்து பொருட்களின் மீதும் காலாவதியாகும் நாள் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் இதில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு வருடாவருடம் மருத்துவ பரிசோதனை செய்து தகுதியிருந்தால் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கிறார்கள்.

சலூன் கடைகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும் அது போக ஒருவருக்கு செய்யும் கருவிகளை ஸ்டெரிலைஸ் செய்த பிறகே அடுத்தவருக்கு செய்ய‌ வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய கத்திகளையே உபயோகிக்க வேண்டும் . வெள்ளை உடுப்புதான் உடுத்த வேண்டும். மீறினால் அபராதம், உரிமம் ரத்து என்று மக்கள் சுகாதாரம் சம்மந்தப்பட்ட விசயங்களில் முழு அக்கறை எடுக்கிறார்கள்.

சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுவதால் ரௌடியிஸம், கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களை செய்ய மக்கள் பயந்தே உள்ளனர். ஏனெனில் நமது நாட்டை போல் பணம் கொடுத்து சட்டத்தை விலைக்கு வாங்க முடியாது.

எல்லா வெளிநாடுகளைப் போலவே இங்கும் மலையாளிகளே அனைத்து வேலைகளிலும் அதிகமாக இருக்கிறார்கள். என்னதான் அவர்களை பற்றி ஆயிரம் குறைகள் சொன்னாலும் ஒற்றுமையிலும், சுத்தமாக இருப்பதிலும், துணிச்சலிலும், பிரச்சனை ஏற்படும் போது உதவுவதிலும் ஒரு அடி முன்னே நிற்கிறார்கள்.

நம்ப வைத்து கழுத்தருப்பவன் மலையாளி என்று சொன்னாலும் அதையும் தாண்டி அவர்களிடம் திறமை இருக்கிறது என்பது எனது கருத்து. ( இது பற்றி விரிவாக எழுத‌ இந்த இடுகை போதாது. பின்னொரு முறை பேசலாம்)

நம்மூரைப் போலவே சவுதியில் உள்ளவர்களிடமும் ஆங்கிலத்தில் பேசினால் சைலண்ட் ஆகி விடுவார்கள். ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்கள், பிறர் முன்பு நம்மிடத்தில் ஆங்கிலத்தில் பேசி பெருமை பட்டுக்கொள்வார்கள்.

இங்கு விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருக்கும். அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவார்கள் பேதம் பார்ப்பதில்லை. செஹ‌ன் எனப்படும் பெரிய தட்டுகளில் நான்கைந்து பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது மிக அழகாக இருக்கும்.

இங்கும் கஷ்டப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், பட்டினி கிடந்தாலும்,யாரும் பிச்சை எடுப்பதில்லை. முடிந்தவரை உழைத்து சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு தேவையானதை அவர்களை சுற்றியுள்ள பணக்காரர்கள் நடத்தும் சமுதாய நல அமைப்புகள் செய்து கொடுத்து அவர்களது வறுமையை போக்குகிறார்கள்.

இங்கு நல்ல விசயங்கள் பல இருந்தாலும், குறைகளும் இல்லாமல் இல்லை.

ரோட்டோரத்தில் செல்லும் போது காரிலிருந்து பெப்ஸி டின் போன்ற பொருட்களை தூக்கி எறிவது, நம் மேல் எச்சில் துப்புவது. திடீரென கார் கதவை திறந்து இடிப்பது போன்ற அபாயகரமான வேலைகளில் இங்குள்ள பதின்ம வயதினரே ஈடுபடுகின்றனர். பெரியவர்கள் இது போன்ற காரியங்களை ஆதரிப்பதில்லை.

கூட்டி வந்த பணியாளர்களை கொடுமைப்படுத்துவது, ஊருக்கு அனுப்ப மறுப்பது, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவது என ஆங்காங்கே சில இடங்களில் நடக்கிறது. அதுவும் எங்களைப்போல் கடைகளில் வேலை செய்யாமல் கண்ஸ்ட்ரக்ஷ்ன், ரோடு பணிகளில் உள்ளவர்கள் நிறைய கஷ்டங்கள் படுகிறார்கள்.இவன் சாதாரண வேலைக்காரன் தானே என்ற முதலாளித்துவ மனோபாவம் இல்லாமல் இல்லை.

இன்னும் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் பதிவின் நீளம் கருதி முடித்துக்கொள்கிறேன். இது போன்ற தங்களின் வெளி நாட்டு வாழ்க்கை அனுபவத்தையும் எழுதலாமே நண்பர்களே!

,

Thursday, December 9, 2010

திருநெல்வேலி !

ஊரிலிருந்து திரும்பி வந்தாலும் ஊர் நினைவுகள் இன்னும் விடாதபடியால் பதிவுகளின் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை. அதனால் பின்னூட்டமிட முடியாததற்கு மன்னிக்கவும்.

ஊர் நிலவரங்களைப்பற்றி விரிவாக எழுதவேண்டுமென்பதே ஆசை. அதை நேரம் கிடைக்கும் போது பின்னொரு சமயத்தில் எழுதலாம். நம்மூரில் நான் பார்த்தவற்றிலிருந்து சில சுருக்கமாக.

************

பழுப்பு மண்ணையே பார்த்து வறண்டு போயிருந்த கண்களை திருவனந்தபுரத்திலிருந்து ஊர் வரும்வரை எங்கு பார்த்தாலும் பச்சைப்பாசேலெனக் வயல்வெளிகளும் , மலைக்குன்றுகளும் வரவேற்பளித்து கண்களை குளுமையாக்கியது மனதுக்கு இதமாக இருந்தது. கூடவே இதை விட்டுட்டு ஏன் வெளி நாடு போகிறோம் என்ற கேள்வியும்? எல்லாவற்றிற்கும் பணம்தான் காரணம்.

************

நம்மூரை விட வெளிநாட்டில் சம்பளம் அதிகம் என்ற எண்ணத்தையும் உடைத்து சுக்கு நூறாக்கியது சந்தித்த சில‌ நண்பர்களின் சம்பள விவரம். ஆம் ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் முதலில் சவுதிக்கு வந்த போது இருந்ததை விட மூணு மடங்கு சம்பளம் அதிகமாக வாங்குகிறார்கள். எனக்கு கொஞ்சங்கொஞ்சமாக இப்போதுதான் அரை மடங்கு உயர்ந்திருக்கிறது.

வெளிநாட்டு சம்பளத்துக்கும் ஊரில் வாங்கும் சம்பளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அடுத்த முறை வரும் போது ஊரிலேயே இருந்துவிட வேண்டும்.

*************

இலவச கலர் டிவி எங்கள் ஏரியாவில் எல்லா வீட்டுக்கும் கிடைத்துள்ளது. இப்போதெல்லாம் ஒரு வீட்டில் ஹால், ரூம்கள் என ரெண்டு மூணு டிவி இருக்கிறது. சில வீடுகளில் ஸ்பேர் டிவியாக பரணில் வைத்துள்ளார்கள் :). பின்னே ஏன் அதிக மின்சாரம் செலவாகாது.

அனேகமாக வரும் தேர்தலில் வாஷிங்மெஷின் கொடுப்பதாக பேச்சு. அப்படிக் கொடுத்தால் இப்போது தினமும் ரெண்டுமணி நேர பவர்கட் நாலு மணி நேரமாக வாய்ப்புகள் அதிகம்.

**************

ஊரில் வாட்டர் ஃபில்டர் விற்பனை படு ஜோராக நடக்கிறது. ஒரு காலத்தில் ஆற்றில் ஓடும் தண்ணியை அப்படியே பிடித்துக்குடிக்கலாம். அவ்வளவு சுத்தமாக இருக்கும். இப்போது வீட்டு பைப்புகளில் வரும் தண்ணீர் பழுப்பு கலரில் வருகிறது. சுத்திகரிப்பு செய்கிறார்களா என தெரியவில்லை.

ஒருவேளை வாட்டர் ஃபில்டர் தயாரிப்பாளர்களுக்கும் மாநகராட்சிக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. மக்களின் அலட்சியமும் இதற்கு காரணம். ஒன்று சேர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்காமல், வீட்டுக்கு வீடு வாட்டர் ஃபில்டர் வாங்கி வைக்கின்ற‌னர்.

**************

ஊரில் உள்ள விலைவாசிக்கு நூறு ரூபாயெல்லாம் பத்து ரூபாய் மாதிரி (ஒரு வேளை வெளிநாட்டில் இருப்பதால் அப்படி தெரியலாம்). எனக்கு உதய கீதம் படத்தில் கவுண்ட மணி தேங்காய் விலை அதிகமாயிருக்கு என்று சொல்லும் போது என்ன உள்ளே இருந்துட்டு வந்தியான்னு கடைக்காரர் கேட்பார். அது போல எந்த கடையிலாவது ரேட் ரொம்ப ஜாஸ்தியாயிருச்சு போலன்னு கேட்டால் ஆறு மாசமா இந்த ரேட்டுதான் அப்படிங்கிறார். நாம ஊர் வந்து ஒரு வருஷமானது அவருக்கு எப்படி தெரியும்.

ஆனாலும் ஊரில் உள்ளவர்கள் இதற்கெல்லாம் கவலைப்படுகிறமாதிரி தெரியவில்லை. அவர்களுக்கு பழகிவிட்டது போலும்.

**************

என்னதான் பொருளாதரப்பிரச்சனைகள் இருந்தாலும். நம்ம மக்களோட அருமை அவர்களை பிரிஞ்சு இருக்கும் போதுதான் தெரியுது. ஆள் நடமாட்டமே இல்லாத ஏரியாவில் வாழ்ந்து விட்டு. ஊரில் கடைவீதிகளில் மக்களை கூட்டம் கூட்டமாக பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருந்தது.

குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று அரசனில் டீயும் பப்ஸுமோ, அல்லது சரவண பவ வில் ஒரு தோசையோ சாப்பிட்டு வரும் சந்தோசத்துக்கு விலை ஏது?

***************

இன்னும் பகிர்ந்து கொள்வதற்கான விஷ‌யங்கள் நிறைய இருக்கிறது. அவை பிரிதொரு சந்தர்ப்பத்தில்.

இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் ஸ்டார்ஜன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Sunday, November 28, 2010

மதிப்பிற்குரிய பொ .ம . ராசமணி அவர்கள் !

நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். விடுமுறை நாளில் பள்ளியில் நடந்த ஒரு விழாவிற்கு சிறப்பு பேச்சாளர் ஒருவரை பாளையங்கோட்டையில் இருந்து அழைத்து வந்திருந்தனர்.

பொதுவாகவே இதுமாதிரி நிகழ்ச்சிகளை முடிந்தவரை தவிர்த்துவிட்டு கிரிக்கெட் விளையாட சென்று விடுவது வழக்கம்.ஆனால் எங்கள் தமிழாசிரியர் "வருபவர் பேசினால் நேரம் போவதே தெரியாது அவ்வளவு இனிமையா இருக்கும் யாரும் வராமல் இருக்கவேண்டாம் " என்று கேட்டுக் கொண்டதற்கிண‌ங்க அன்று காலை அனைவரும் ஆஜரானோம். பேச்சாளர் வந்தவுடன் விழா ஆரம்பமானது.

இப்போது இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பவர்க்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. மக்களின் சிந்தனையைத்தூண்டும் விதமாக நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் பல மேடைகளிலும் , வானொலியிலும் பேசி இருக்கிறார் அண்ணன் பொ.ம.ராசமணி அவர்கள். அவர்களை சிறப்புரை ஆற்றுமாறு அழைக்கிறேன் என தமிழாசிரியர் அறிமுகப்படுத்தினார்.

உண்மையிலேயே ஆசிரியர் சொன்னது போல் அந்த ஒரு மணி நேரம் அவர் பேசிய பேச்சு வாழ்க்கையில் மறக்க முடியாததாக அமைந்தது. அவர் சொன்ன சிறந்த ஜோக்குகள் ஏற்கனவே என் அப்பா சொல்லி கேட்டவையாக இருந்தது.

வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அப்பா " அந்த ஜோக்குகள் அனைத்தும் அவர் பேசியதிலிருந்து கேட்டு சொன்னதுதான்" என்று சொன்னபோது அவரின் அருமையை உணர்ந்தேன். அவர் பேச்சாளர் மட்டுமல்ல பல நல்ல நூல்களை எழுதிய எழுத்தாளர் என்று பின்பு வந்த நாட்களில் அவரைப்பற்றி அறிந்துகொண்டேன்.

சமீபத்தில் பா.ரா வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டபோது அண்ணன் ஜெரி ஈசானந்தாவை சந்தித்தேன். பதிவுலகம் பற்றிய பேச்சு வந்தபோது , நீங்கள் ஏன் நெல்லை பதிவர்களை வைத்து மீட்டிங் போடக்கூடாது எனக்கேட்டார். யாரெல்லாம் இருக்கிறார்கள் எனக்கேட்டபோது, நம்ம சித்ரா போன்றவர்களை வைத்து ஆரம்பிக்கலாமே என்று சொன்னவர். மேலும் ஒரு சந்தோச தகவலை சொன்னார். சித்ராவின் அப்பா பெரிய பேச்சாளர் என்று.

யாரெனக் கேட்டபோது சொன்னார். த கிரேட் பொ.ம.ராசமணி. எனக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. ராசமணி சார் பொண்ணா அவங்க என ஆச்சரியப்பட்டேன். அப்போது நினைத்துக்கொண்டேன் அவரின் பக்குவப்பட்ட எழுத்துக்கள் எங்கிருந்து வந்திருக்கும் என்று.

அன்றிலிருந்தே இந்த விசயத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது. சரி சித்ராவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு தெரியப்படுத்தலாம் என்றிருந்தேன். இன்று காலை அவரின் பதிவைப் பார்த்த போதுதான் தெரிந்தது. இன்று ராசமணி சாரின் முதலாமாண்டு நினைவு தினம் என்று.

அந்த சிறந்த மனிதருக்கு உங்களுடன் சேர்ந்து எங்களது அஞ்சலிகளை செலுத்துகிறோம் சித்ரா. தந்தை விட்ட இடத்திலிருந்து நீங்கள் தொடங்கி மென்மேலும் புகழடைய வாழ்த்துகிறோம்.

,

Thursday, September 9, 2010

ஈத் முபாரக் - இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகள்

இந்த ஒரு மாதமும் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. இப்போதுதான் நோன்பு நோற்க ஆராம்பித்தது போல் இருக்கிறது. அதற்கு முப்பது நோன்பும் முடிந்து விட்டது வியப்பாக இருக்கிறது.

உண்மையைச்சொல்லப்போனால் அனைவரின் மனதிலும் ஒரே விதமான மகிழ்ச்சி குடியேறியிருக்கும் போது நேரம் போவது தெரியாதுதானே.

சந்தோசத்தில் மிகப்பெரிய சந்தோசமே மற்றவர்களை சந்தோசப்படுத்திப் பார்ப்பதுதான் என்று சொல்வது போல். இந்த ரமலானில் நம்மால் இயன்ற அளவு, நம்மை சுற்றி ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்து, அவர்களும் பெருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு உதவ‌ வாய்ப்பளித்த இறைவனுக்கு அனைத்து நன்றிகளும்.

இதே மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.

இந்த நன்னாளில் நாமும், நமது குடும்பமும் மற்றும் நம்மை சுற்றியுள்ள அனைவரும் அனைத்து வளங்களையும் பெறவும், நமக்கு வரும் பிரச்சனைகளை லேசாக்கி, தீர்த்து வைக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

,

Saturday, July 24, 2010

அன்புச்செல்வன் : பா. ரா. அண்ணன்

(காக்க காக்க சூர்யா ஸ்டைலில் படிக்கவும்)

கைகால் வலியோட, உடம்பு முழுக்க அசதியோடா தூக்க கலக்கத்துல உட்கார்ந்து இதை எழுதக் காரணம் நேத்து நடந்த சந்திப்புதான்.

என் பேர் அக்பர், அக்பர் PPS ( பிரபல பதிவர் சிரிப்பு பிரிவு ) ன் பேருக்கு பின்னாடி இருக்கிற மூனெழுத்து நான் படிச்சி வாங்கின பட்டமோ, என்னோட லட்சியமோ இல்லை. நம்மூருல ரொம்ப மலிவா கிடைக்கிறது அடை மொழி ஒன்னுதான். அதனால அதை நாங்களே சேர்த்துகிட்டோம். :)

வியாழன் இரவு செல்லில் சரவணன் அழைத்தார்.

சரவணகுமார் PPS : அக்பர் நாளை காலையில நான், ஆறுமுகம் PPS, முடிவிலிசங்கர் PPS, மற்றும் எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பா.ரா அண்ணா நாலு பேரும் வாறோம் ஸ்டார்ஜன் PPS மற்றும் டீமோட ரெடியா இருங்க ஒரு வேட்டைக்கு போக வேண்டியிருக்கு.

அக்பர் : அட பா.ரா அண்ணனா! அவரு வர்றதே பெரிய விசயம் ஆச்சே. இந்த தடவை எப்படியாவது கூட்டி வந்துடுங்க நாங்க ரெடியா இருக்கோம்.

மறுநாள் மதியம் பன்னிரெண்டு மணிக்கு சொன்ன படியே நால்வரும் ஆஜராகிறார்கள்.

ஆறுமுகம் : இதுதான் பா.ரா.! எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். இதுவரைக்கும் 150 எண்கவுண்டர் பண்ணியிருக்கார். எல்லாமே சக்சஸ். ஆனா ஒருத்தருக்கும் பாதிப்பில்லை.

ஸ்டார்ஜன் : அதெப்படி ?

சரவணன் : அவர் குறியே வேற.

சங்கர் : அதனாலதான் எல்லோரும் தப்பிச்சிட்டாங்களா?

ஆறுமுகம் : சீரியஸா பேசிட்டு இருக்கும்போது அங்கே என்ன ஜோக். இவருதான் நம்ம ஐந்து பேருக்கும் டிரைனிங் கொடுக்கப் போற ஆபிஸர். ஸார் இவரு அக்பர் அவரு ஸ்டார்ஜன் இன்னைக்கு வேட்டைக்குப் போற இடம் இவங்களுக்குத்தான் தெரியும். இவங்களோட போய் நாம சூட் பண்ணபோறோம்.

பா.ரா : அப்படியா! எல்லோருக்கும் வணக்கம். மொத்தம் 150 எண்கவுண்டர். ஒன்னு கூட மிஸ்ஸாகலை. ஏன்னா எல்லாமே அன்பால சுட்டது. அந்த சமயத்துல எல்லோர் கண்ணும் நம்ம மேலதான் இருக்கும். ரொம்ப கவனமா ஹாண்டில் பண்ணனும். சரி நீங்க நம்மாளுதான்னு தெரிஞ்சிக்க எல்லோரும் டி கார்டை காட்டுங்க.

எல்லோரும் காட்டுகிறார்கள். ஆறுமுகத்தோட கார்டை பார்த்தவுடன் ஷாக்காகும் பா.ரா.

பா.ரா : என்னாதிது. சிகரெட் குடிக்கிறபோஸ். அதுக்கு கீழே "சிகரெட் குடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது" ன்னு சப்டைட்டில் வேற.

ஆறுமுகம் : யெஸ் சார். சிகரெட் குடிக்கிறமாதிரி படம் எடுத்தா அதுக்கு கீழே சப்டைட்டில் போடணும்கிறது அரசாங்கத்தோட உத்தரவு சார்.

பா.ரா : உங்க கடமை உணர்ச்சியை பாராட்டுறேன். ங்க வாழ்க்கையில எத்தனை தடைகற்கள் வந்தாலும் அதை தூசி மாதிரி நினைச்சி தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கணும் புரிஞ்சுதா. ஆமா உங்களையெல்லாம் யாராச்சும் ஃபாலோ பண்ணுறாங்களா.

ஸ்டார்ஜன் : என்னை 125 பேர் ஃபாலோ பண்ணுறாங்க. சில்வர் ஜூபிளி சார்.

அக்பர் : 125 ஃபாலோயர் 500 ஆக வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

சரவணன் : அருமை ஸ்டார்ஜன். தொடருங்கள்.

சங்கர் : இது முடிவில்லாமல் தொடர வாழ்த்துகள்.

ஆறுமுகம் : ம்ம்ம். ரைட்டு. நடத்துங்க. :)

பா.ரா : இங்கே என்ன நடக்குது?

சங்கர் : அவருக்கு 125 ஃபாலோயர் சேர்ந்ததை ஊக்கப்படுத்துறோம் சார்.

பா.ரா : அடப்பாவிங்களா. நாம செய்யுற வேலைக்கு யாரும் நம்மை ஃபலோ பண்ணாம பார்த்துக்கணும். அது சரி எண்கவுண்டர்னா என்னான்னு தெரியுமா.

அக்பர் : எங்களுக்கு ஹிட் கவுண்டர்தாண்ணே தெரியும். எண்கவுண்டர்ன்னு புதுசா ஏதாச்சும் வந்திருக்கா என்னா. அப்ப உடனே விட்ஜெட் சேர்த்தாகணுமே.

பா.ரா : சரி சரி அதப்பத்தி பின்னாடி சொல்றேன். அப்புறம் என்னை அண்ணேன்னு கூப்பிட்டது ரொம்ப பிடிக்குது. இனி உறவைச்சொல்லியே கூப்பிடுங்க. இப்ப க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுங்க.

சங்கர் : ஆனா அதை பதிவுல போடாதிங்க. அண்ணன் முகம் வெளியாட்களுக்கு தெரியக்கூடாதுன்னு அரசாங்க ஆர்டர்.

எல்லோரும் போஸ் கொடுத்து படம் எடுத்தோம். அதை எடுத்தது அக்பரோட மச்சினன் அர்க்கம். அதுக்கு பக்கத்துல நின்னது அக்பர் தம்பி ஜெயினுலாபிதீன் என்று அப்போ உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் கேமராவுக்கு பின்னாடி நின்னாங்க.

எல்லோரும் சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு ரெடியாகி ஆறுமுகத்தின் நிஸ்ஸான் காரில் ஏறினோம்.

( முடிந்தால் இந்த மூடுக்கு கில்லில வர்ற "அர்ஜுனரு வில்லு" பாட்டை நினைத்து கொள்ளவும் )

ஆறுமுகம் ஆக்ஸிலேட்டரில் வைத்த காலை எடுக்காமல் 100 கடந்து போகிறார். எந்த ஸ்பீடு பிரேக்கரிலும் பிரேக் பிடிக்கவில்லை.

பா.ரா : என்ன மாப்ள ஆறுமுகம் அப்படி ஒன்னும் அவசரமில்லையே ஏன் இவ்வளவு வேகம்.

ஆறுமுகம் : நீங்க சொன்னதை நீங்க மறக்கலாம். நான் மறக்கமாட்டேன் மாமா. எத்தனை தடைக்கற்கள் வந்தாலும் தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கணும்னு நீங்கதானே சொன்னீங்க. நான் கடமையில கண்ணா இருப்பேன் மாமா. ( உண்மையைச் சொன்னா பின்னாடி ஒன்னு நோட் பண்ணிக்கிட்டே இருந்து பதிவெழுதி ஹிட் வாங்கிடும் விடக்கூடாது)

பா.ரா : ஓட்டணும்னு முடிவு பண்ணிட்டே. நீ ஓட்டு மாப்ளே.

ஆறுமுகம் : மாமா!

பா.ரா : நான் காரைச்சொன்னேன். :)

அக்பர் : ஸ்டார்ஜன் இந்த சிக்னல்ல இருந்து ரைட்ல போயி லெஃப்ட் போகணுமா?

ஸ்டார்ஜன் : இல்லை லெஃப்ட்ல போயிட்டு அப்புறம்தான் ரைட்டு.

சங்கர் : எனக்கு இது ரைட்டா தெரியலையே.

அக்பர் : ஆமா சங்கர். அது லெஃப்டுதான்.

சரவணன் : (மனதுக்குள்) இவங்க காட்டுற வழியில போறதுக்குள்ளே ரெண்டு புத்தகம் படிச்சி விமர்சனம் எழுதியிருக்கலாம்.

அக்பர் : சாரிண்ணே ரொம்ப நாளைக்கு முன்னாடி வந்ததா. இப்ப சிக்னல் , ஒன்வேன்னு நிறைய விசயங்கள் மாறியிருக்கு. அதான் குழப்பமா இருக்கு.

ஆறுமுகம் : (அடப்பாவி) கோட்டையாவது அதே இடத்துல இருக்கா.

ஸ்டார்ஜன் : என்ன இப்படி கேட்டுட்டிங்க. அங்கேயேதான் இருக்கு. ஆனா அது எங்கே இருக்குன்னுதான் மறந்து போச்சு.

ரோட்டோரமா பல இடங்களில் நிறுத்தி வழி கேட்டு, பல இடங்களை சுற்றி கடைசியில் ஜபுல்காரா எனப்படும் அந்த ழமை வாய்ந்த குன்று குகையை அடைகிறார்கள்.

பா.ரா : சூட்டிங்கை வெளியே வச்சுக்கவா. இல்லை குகைக்குள்ளே வைக்கலாமா.

சங்கர் : முதல்ல வெளியே வச்சுக்குவோம். சில நேரம் குகைக்குள்ள லைட்டிங் கம்மியா இருக்கலாம். ஆறுமுகம் கேமராவை கொடுங்க.

பா.ரா : ரொம்ப அருமையா இருக்கு இடம். மத்த இடங்கள்ல கடும் வெயில் அடிக்கும் போது இந்த இடம் மட்டும் நல்ல கூலிங்கா இருக்கே. சரி இனிமே சுட்டுத்தள்ளுங்க.

அங்கே பிடித்தது இங்கே.


(அர்க்கம், ஜெயினுலாப்தீன்,சங்கர், செ.சரவணக்குமார்,ஸ்டார்ஜன், ஆறுமுகம், அக்பர்)

நண்பர்களே நேற்று பா.ரா அண்ணன், செ.சரவணகுமார், ஆறுமுகம் முருகேசன், முடிவிலி சங்கர் நால்வரும் எங்களை சந்திக்க வந்திருந்தனர். நேற்று மறக்க முடியாத ஒரு இனிய நாளாக அமைந்து விட்டது. எந்த கவலையும் இல்லாமல் சிலமணி நேரங்கள் மகிழ்ந்திருந்தோம். ஜபுல்காரா என்ற குன்று குகைக்கு சென்று சுற்றிப்பார்த்தோம்.

சில காட்சிகளை சிலிக்கான் சிப்பில் புகைப்படங்களாகவும், அந்த சந்திப்பை எங்களது மூளையின் அடுக்குகளிடையே நீங்காத நினைவுகளாகவும் சேமித்து வைத்துள்ளோம் உங்களோடு பகிர்ந்து கொள்ள. அது பற்றிய விரிவான இடுகையை மற்ற பதிவர்கள் இன்னும் அழகாக எழுதுவார்கள். இது சும்மா ஜாலிக்கு. மீண்டும் சந்திப்போம்.

Wednesday, June 23, 2010

உண்மையான வீரர்

இந்தப்பிரச்சனைக்காக இப்படியொரு முடிவை எடுக்க வேண்டியிருந்தால் அவர்கள் எவ்வளவு மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில் இதை நினைத்துப்பார்க்கையில் மனது கஷ்டமாக உள்ளது.

விசயம் இதுதான்.

கல்விக்கடன் கொடுக்கும் வங்கிகளின் சட்டதிட்டங்களை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நியாயமான தகுதிகள் இருந்தும் வங்கிகள் கடன் வழங்காமல் போனால் உங்களால் என்ன செய்ய முடியும்?

நம் பதிவுலகில் ஆயிரம் பதிவுகள் வந்தாலும் உண்மையிலே இது பற்றிய‌ விளக்கங்களுடன் சமுதாயத்திற்கு பயன்படும் பதிவுகள் எத்தனை வந்துள்ளன?

அப்படி வரும் பதிவுகள் எத்தனை பேரை சரியாக சென்றடைந்துள்ளன?

அப்படி சரியாக சென்றடைய வழி என்ன என்று யோசித்ததின் விளைவே இப்படி ஒரு பதிவும்.

சட்டம் சம்பந்தப்பட்ட பல நல்ல பதிவுகளை எழுதிவரும் திரவியம் நடராஜன் சாரின் இந்த இடுகை கண்டிப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டிய ஒன்றுதான் என்று நீங்கள் நினைத்தால். படித்து வாக்களியுங்கள்.

,

Monday, June 21, 2010

வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா?

இரு நாட்களுக்கு முன் ந‌ண்ப‌ர் செ.ச‌ர‌வ‌ண‌க்குமாரிட‌ம் பேசும் போது வெப்ப‌ம் தாங்காம‌ல் கால் பொத்து விட்ட‌தாக‌வும். அத‌னால் அன்று ப‌ணிக்கு செல்ல‌வில்லை என்றும் சொன்னார். ம‌ன‌து க‌ன‌த்துப்போய் விட்ட‌து.

சரவணன் சொன்னது போல் கோடைகாலத்தில் இங்கு வெயில் மிக மிக அதிகம். நான் வந்த இந்த ஏழு வருடத்தில் இப்போது அடிக்கும் வெயில் போல் இதுவரை கண்டதில்லை. 53 டிகிரி செல்சியஸிற்கு மேல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

காலை எட்டு மணிக்கு அடிக்கும் வெயில் நம்மூர் மதிய வெயிலை விட அதிகம்.ரூமிலிருந்து கடை 500 மீட்டர் தூரம் இருக்கும். அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த அளவு அனல்.

இங்கு க‌டை, வீடு, கார் அனைத்திலும் ஏசி வ‌ச‌தி இருப்ப‌தால். க‌டைக‌ளில் வேலைப்பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு அதிக‌ பாதிப்பில்லை. ஆனால் க‌ட்டிட‌வேலை, சாலைப்ப‌ணி, பாலை நில‌ங்க‌ளில் இயந்திர நிர்மாண‌ ப‌ணிக‌ளை மேற்கொள்ப‌வ‌ர்க‌ளின் நில‌மை ப‌டுமோச‌ம்.

ச‌வுதிக்கு வேலைக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் எதிர்கொள்ள‌வேண்டிய‌ முக்கிய‌ ச‌வால் இங்குள்ள‌ ப‌ருவ‌ நிலைதான். க‌டும் குளிர், சுடும் வெயில். இது இர‌ண்டையும் தாக்கு பிடிக்க‌ முடிய‌வில்லை என்றால் ஊருக்குப் போய்விட‌ வேண்டிய‌துதான்.

அதே போல் ம‌ற்றொரு ச‌வால் குடும்ப‌ங்க‌ளை பிரிந்திருப்ப‌து. வீட்டில் அனைவ‌ரிட‌மும் பேசும் போதே இங்கு ந‌ம் ம‌ன‌க்க‌ண்ணில் அவ‌ர்க‌ள் என்ன‌ செய்து கொண்டிருப்பார்க‌ள் என்ப‌து தெரியும். குழ‌ந்தை ந‌ட‌ப்ப‌தையும், விளையாடுவதையும், அதற்கு பல் முளைத்ததையும் அவ்வாறே நாம் உணர முடியும்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு குழப்பம் வரலாம். இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌த்தையும் தாங்கிக்கொண்டு எத‌ற்கு வேலைப்பார்க்க‌ வேண்டும் ஊருக்கு வ‌ந்து விட‌ வேண்டிய‌து தானே. ஆனால் வருடா வருடம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டல்லவா இருக்கிறது என்று நீங்க‌ள் நினைப்ப‌து நியாய‌ம் தான்.

இங்கு வாழ்ப‌வ‌ர்க‌ளை ஊருக்கு வ‌ர‌விடாம‌ல் த‌டுப்ப‌து எது, யார் என்ன சொன்னாலும் ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ள் இன்னும் வெளிநாடு வ‌ர‌ துடிப்ப‌துக்கு எது கார‌ண‌ம்.

எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.

சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.

பொதுவாக வெளிநாடு செல்பவர்களின் நிலை புலி வாலை பிடித்த கதைதான். நாம் விட நினைத்தாலும் ஊர் சூழலும், பிரச்சனைகளும், ஊரில் போய் என்ன வேலை செய்ய என்ற பயமும் நம்மை ஊர் திரும்ப விடாது.

இங்குள்ளவர்களின் வாழ்க்கை நிலையை அலசுவதற்கு முன், முதலில் இங்குள்ள வேலை வாய்ப்புகளை பார்த்து விடலாம்.

வீட்டுப்பணி பெண்கள், வீட்டு டிரைவர்கள் இவர்கள் வீட்டுப்பணிக்கு மட்டும் வெளியில் வேலை பார்க்க கூடாது. இவர்களது அடையாள அட்டையில் அது குறிப்பிடப்பட்டு இருக்கும். ( ஆனால் பெரும்பாலான‌ டிரைவர்கள் வெளியிலும் வாடகைக்கு வண்டி ஓட்டுவார்கள் அது அவர்களின் சாமர்த்தியத்தை பொறுத்தது)

கடைகள் , சோரூம்கள், கம்பெனிகளுக்கு சேல்ஸ்மேன், டெக்னீசியன், டிரைவர், கேசியர் இன்னும் பல பணிகளுக்கு ஆள் எடுப்பார்கள். இங்கு ஓவர்டைம், போனஸ் மற்றும் இன்ன பிற சலுகைகள் ( இருந்தால்! ) கிடைக்கும். நமக்கு அமையும் இடத்தை பொறுத்து இதெல்லாம் மாறுபடும்.

சாலைப்பணி, கட்டிடப் பணி, இயந்திர நிர்மாண பணி, மற்றும் இது போன்ற புறச்சூழல் பணிக்கு வருபவர்களின் பாடுதான் கஷ்டம். இங்குள்ள கடும் குளிரையும், வெயிலையும் நேரடியாக சந்திப்பது இவர்கள்தான்.

இங்கு குறிப்பிட்டது போக மேலும் இது போல பல பணிகள் உள்ளன.

ஏஜெண்ட் மூலமாகவோ அல்லது சொந்தங்கள், நண்பர்கள் மூலமாகவோ விசா பெற்று இங்கு வருபவர்கள்தான் அதிகம்.

வீட்டிலுள்ள நகை நட்டையெல்லாம் விற்று , கடன் வாங்கி அல்லது சொந்த சேமிப்பைக்கொண்டு வெளிநாட்டுக்கு விமானம் ஏறி மேலே குறிப்பிட்ட எந்த வேலைக்கு வருபவர்களுக்கும் மூன்று வகையான‌ வாழ்க்கை காத்திருக்கிறது.

முதல் வகை ( ஏமாற்றம் )

ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு , சொன்ன சம்பளம் கிடைக்காமல், சொன்ன வேலைக்கு பதில் வேறு கஷ்டமான வேலை கிடைப்பது. கொடுமையான முதலாளி அடிமை போல நடத்துவது என்று இவர்களுடைய கதைகளைதான் அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள்.இதிலிருந்து இவர்கள் மீள்வது ஆயுள் தண்டனை கைதி சிறையிலிருந்து தப்புவதற்கு சமம்.

சிலபேர் பணம் போனால் போகிறது எனக்கு வேலை வேண்டாம் என்று ஊர் திரும்பிவிடுவார்கள் (அதுவும் முதலாளி அனுமதித்தால்தான்). எல்லா சொத்தையும் விற்று வருபவர்களின் கதி? அதோ கதிதான். ஊருக்கு சென்றால் கடன் கழுத்தை நெரிக்கும். வேறு வழிகிடையாது. கிடைக்கும் சொற்ப பணத்தையாவது ஊருக்கு அனுப்பி வைத்து இங்குள்ள சூழ்நிலையை மறைத்து வாழ்பவர்கள் நிறையபேர். இவர்களின் கதையைக்கேட்டால் கண்ணீர் வந்துவிடும்.

இரண்டாம் வகை ( நடுத்தரம் )

ஏஜெண்டுகள் , அல்லது விசா கொடுத்தவர்கள் சொன்ன மாதிரி வேலை கிடைக்கும், சம்பளமும் சொன்ன மாதிரி கிடைக்கும். ஆனால் பெரிய முன்னேற்றம் எதுவும் இருக்காது. கொடுத்த வேலையைப் பார்த்துக்கொண்டு கிடைத்த சம்பளத்தை ஊருக்கு அனுப்பி விட்டு வருடத்துக்கு ஒருமுறையோ , இரு வருடத்துக்கு ஒரு முறையோ முதலாளி செலவில் ஊர் சென்று திரும்பி வந்து மறுபடியும் செக்கிழுக்க வேண்டியதுதான். நான், ஸ்டார்ஜன், சரவணன் எல்லாம் இந்த பிரிவில்தான் இணைகிறோம் :)


மூன்றாம் வகை ( முன்னேற்றம் )

இது உண்மையிலேயே சவாலான சூழல். இந்த வாழ்க்கைக்கு ஏங்கித்தான் ஊரிலிருந்து கனவுகளோடு மக்கள் இங்கு வருவது. ஆம் சொந்தமாக கடைகள் சோரூம்கள் நடத்துவது. இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. நமக்கு வாய்த்த முதலாளி மாதா மாதம் இவ்வளவு பணம் கொடுத்து விடு என்று சொல்லி கடையை நம் கையில் கொடுத்து விடுவார். அதிலுள்ள லாபமும் நட்டமும் நம் பொறுப்பு. இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தவர்கள் தான் ஊரில் கோடீஸ்வரனாகி இருக்கிறார்கள். அது போல் வாய்ப்பை சரிவர பயன்படுத்த தெரியாமல் நஷ்டம் ஆனவர்களும் உண்டு. அது அவரர்களின் திறமை, அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

என்ன நண்பர்களே இப்போது சொல்லுங்கள் வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டமா? அல்லது இஷ்டமா?

டிஸ்கி : இங்கு முடிந்தவரை அனைவருக்கும் பொதுவான விசயங்களை குறிப்பிட முயன்றுள்ளேன். இது எனது கருத்து மட்டுமே. இங்கு வசிக்கும் பலருக்கு இதைவிட மோசமான் அல்லது நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கலாம்.

,

Wednesday, June 16, 2010

முதல் நாள் இன்று... (100வது இடுகை)

அன்புள்ள நண்பர்களே !

இத்தனை நாள் பழைய சட்டையுடன் (எனக்கும் விருப்பமான சட்டையும் கூட) வலம் வந்தவன் இன்று புதுச்சட்டை மாற்றி விட்டேன் நண்பர்களே.

ஆம் உங்களுடனான இந்த சிநேகம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வழியாக தட்டுத்தடுமாறி நூறாவது இடுகையும் இன்று எழுதிவிட்டதில் ரெட்டிப்பு மகிழ்ச்சி.

பயணம் செய்வது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அதுவும் இந்த இணையப்பயணத்தில் உங்களுடன் இணைந்து பயணிப்பதை எனது வாழ்வின் முக்கிய தருணமாக உணர்கிறேன்.

இந்த ஒருவருடத்திய பேலன்ஸ் சீட்டை அப்படியே உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். (இதெல்லாம் ஓவர்ன்னு எனக்கே தெரியுது.கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்)

வரவு

நல்ல நண்பர்கள், நல்ல எழுத்துக்கள், சமூக சிந்தனைகள் என்று பல நல்லவைகள்.

அதை விட மேலாய், முகம் தெரியாத நண்பர்களிடம் இவ்வளவு நேசமாய் இருக்க முடியுமென்றால். அன்றாடம் பழகும் நண்பர்களிடம் ஏன் இருக்கமுடியாது என்று உணர்ந்தது. ( மனிதரை விட்டு பிரியும் போதுதானே அவர்கள் செய்த நல்லவைகள் கண்ணுக்கு தெரிகிறது. நெருக்கமாயிருக்கும் போது தவறுகளே பெரிதாக தெரிகிறது)

தமிழில் புதிய வார்த்தைகள் அறியக்கிடைத்தது. கூடுமான வரை எழுத்துப்பிழை இல்லாமல் எழுதப்பழகியது என்று இங்கு நான் பெற்றதுஏராளம்.

செலவு

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. ஆனால் பணி செய்யும் இடத்தில் எழுதுவதால் நிறைய எழுத முடிவதில்லை. பின்னூட்டங்களும் இட முடிவதில்லை. அதையும் தாண்டி சில வேளைகளில் ஆர்வமிகுதியால் வலையைப்பார்த்துக்கொண்டே இருந்ததனால் சரியான நேரத்தில் டெலிவரி கொடுக்கமுடியாமல் சில வாடிக்கையாளர்களை இழந்ததும் நடந்திருக்கிறது.

அதன் பிறகுதான் சுயகட்டுப்பாட்டுடன் கையை கட்டிப்போட்டு வைத்திருக்கிறேன். மிகுதியான ஆர்வத்துடன் கலந்து கொண்டு பின்பு வெறுத்து ஒதுங்குவதை விட‌ மெதுவாகவே உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்.

பலன் (இதிலிருந்து நான் கற்றது)

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

‍==========

மாம்ஸ், மாப்ஸ், சித்த்ப்பா, பெரியப்பா, அண்ணன்மார்கள், சகோதரிகள் என்று இதில்தான் எத்தனை விதமான உறவுகளை பெற்றுள்ளேன், பெற்றுக்கொண்டு இருக்கிறேன். உங்களுடைய இந்த அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

நல்ல எழுத்தாளர்களும், கவிஞர்களும் பயணிக்கும் இந்த தளத்தில் நானும் இருப்பதை நினைத்து பெருமையடைகிறேன்.

எனக்கு இதுவரை உறுதுணையாக இருந்த அனைத்து பதிவுலக, படிக்கும் நண்பர்களுக்கும், கூகிளாருக்கும் மிக்க நன்றிகள்.

இன்றிலிருந்து மீண்டும் முதல் இடுகையாக நினைத்து எழுதத்தொடங்குகிறேன். உங்கள் ஆதர‌வுடன்...

நிறைகுறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

,

Wednesday, May 26, 2010

பதிவுலகிற்கு நன்றி !

இந்த சுப்ரமணி இருக்கானே பயங்கர குறும்புக்காரன். எனக்கு அவனை மிகவும் பிடிக்கும். எப்பவும் யாரைப்பற்றியாவது நக்கல் பண்ணிகொண்டே இருப்பான். சமயத்தில் என்னைப் பற்றியும்.

எனக்கு ஏழாம் வகுப்பிலிருந்து அவனை தெரியும். எட்டும் என் கூடத்தான் படித்தான். ஒன்பதுக்கு புனித அந்தோனியார் பள்ளியில் இருந்து டவுனில் உள்ள சாப்டர் மேனிலைப் ப‌ள்ளியில் அடுத்த அத்தியாயத்தை தொடங்கும் போதும் எங்கள் செட்டில் இருந்தான். ஆனால் வேறொரு பிரிவில்.

ஒன்பதில் சேக்தாவூது அறிமுகமானான். கே.டி. குஞ்சுமேனை விட பெரிய ஜென்டில்மேன். நல்லா படிப்பான். ஒரே ஊர்க்காரன். பள்ளி விட்டதும் சுப்ரமணி, சேக்தாவூது, பெருமாள், சண்முக நாதன் இவர்கள் யாருடனாவது இணைந்து பஸ் ஏற செல்வேன்.

பஸ்காரர்களுக்கு எங்களை கண்டால் பாசம் அதிகம். எங்களையும் பிடிக்காது பிரேக்கும் பிடிக்காது. அதனால் அருகிலுள்ள தாலுகா ஆபிஸில் நிற்காமல். ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் கோவில் வாசலில் போய் நிற்கும். சொந்தக்கதை, சுற்று வட்டார கதையைப்பேசி கோவில் வாசல் வரை நடப்போம். நண்பர்கள் இணைந்தால் தூரம் ஒரு பொருட்டல்லதானே.

எங்கள் வகுப்புக்கு சௌந்திரபாண்டியன் சார். சிரித்த முகம். சிரிப்பென்றால் அதிரும்படி சத்தமாக இல்லாமல் பூ மலர்வதைப்போல ஓசையில்லா சிரிப்பு. இவரே எல்லா வகுப்புக்கும் வாத்தியாராக மாட்டாரா என்று ஏங்க வைத்தவர்.

ஹிப்பி தலையுடனும் , பெல்பாட்டம் பேண்டுடனும் "சங்கர் சலீம் சைமன்" படத்தில் வரும் ஹீரோ போல இருந்த பக்கத்து வகுப்பு சாரும் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். எனக்கு அவரைப்பார்த்தவுடன் சிரிப்பு வந்து விடும்.

சில நாட்களில் நானும் சேக்தாவூதுவும் நல்ல நண்பர்களானோம். வகுப்பில் சேக்தாவூதுதான் எப்போதும் முதல் ராங்க். எனக்கு மட்டுமல்ல வகுப்பில் அனைவருக்கும் அவனை பிடிக்கும்.

இப்படியாக ஒன்பதை தாண்டி பத்தை தொட்டோம். அங்கு சுப்ரமணி மீண்டும் இணைந்து கொண்டான். மூவர் கூட்டணியில் அரட்டை அராஜகம் ஆரம்பமானது.

எங்களின் கணக்கு சாராக வந்தவர் வேறு யாருமல்ல அந்த ஹீரோதான். பிற்பாடு பழகும் போதுதான் தெரிந்தது அவர் உண்மையிலேயே ஹீரோ என்று அப்படி ஒரு ஆட்டிடியூட். மிக பண்பானவர். அருமையாக பாடம் நடத்துவார்.

ஆனால் வாத்தியார்களுக்கு பட்டப்பெயர் வைக்கவில்லை என்றால் அவன் என்ன மாணவன். அவருக்கும் பட்டப்பெயர் வைத்தார்கள். நாங்கள் மூவரும் பஸ் ஏறச்செல்லும் போது பலரைப்பற்றியும் பேசி கிண்டலடித்துக்கொண்டே செல்வோம்.

அப்படி பேசும் போது அன்று மாட்டியவர் கணக்கு சார். சுப்ரமணிதான் முதலில் ஆரம்பித்தான் நாங்கள் பிக்கப் செய்துகொண்டோம். அவரின் பேச்சு நடை உடை பாவணை என்று ஒன்றை விடவில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி. அந்த நேரம் அவர் எங்களை கடந்து சென்றது மாதிரி ஒரு ஃபீலிங்.

மறுநாள் வகுப்பில் கணக்கு நேரம் அது எங்களை கணக்கு பண்ணும் நேரம் என்பதை நாங்கள் உணர வில்லை.

வந்து உட்கார்ந்தவர். "நேத்து என்னை பற்றி பேசுன ரெண்டு பெரிய மனுஷனும் எந்திரிங்கடா" அப்படின்னார்.

வெடவெடத்து போய் விட்டது. அப்போ கடந்து சென்றது அவர்தானா?

"நீங்களா எந்திரிச்சா உங்களுக்கு நல்லது. நான் சொன்னேன்னா அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது."

வேறு வழியில்லை எழும்பிவிடுவோம் என்று நினைக்கும் போது புது குழப்பம். எந்த ரெண்டு பேர் . தப்பிச்ச மூணாவது ஆள் யாரு?

இந்த தயக்கத்துக்கிடையில் சம்பந்தமேயில்லாமல் ரெண்டு பேர் எழுந்தார்கள். இருவரும் அண்ணன் தம்பிகள்

"இந்த ரெண்டு பெரிய மனுஷங்களும் என்ன செஞ்சாங்கன்னு அவங்க வாயால‌யே இப்ப சொல்லுவாங்க."

ரெண்டு பேர் கண்களிலும் தாரை தாரையாக கண்ணீர். மூச்சு கூட விடாமல் நின்றார்கள்.

"அது என்ன பாட்டுடா. ஆத்தாடி பாவாடை காத்தாடவா. ராஸ்கல் வெளியூர்னா வர மாட்டேன்னு நினைச்சீங்களா."

"இவனுங்க கெட்ட நேரம் நான் அந்த ஊர் வழியா போக வேண்டியிருந்தது. ரெண்டும் ஆத்துல குளிச்சிட்டு துண்ட தலையில போட்டுட்டு என்னை கிண்டலடிச்சுக்கிட்டே போறாங்க இடையில பாட்டு வேற. என்னை பார்த்ததும் அவனுங்க மூஞ்சி போனதை பார்க்கணுமே. "

சார்.. சார்... தெரியாம செஞ்சுட்டோம் சார். மன்னிச்சுருங்க ஸ்ஸார்.. என்று அழுதுகொண்டே சொன்னார்கள்.

"என் கிளாஸுக்கு ரெண்டு பேரும் இனி வரக்கூடாது. போங்கடா வெளியில" என்று அனுப்பி விட்டார்.

அதிலிருந்து வெளியில் எங்க சொந்த கதையைக்கூட பேசப் பயந்தோம். ஒரு வாரத்தில் நிலைமை சகஜமாகியது வழக்கம்போல கேலிப்பேச்சு தொடங்கியது. அவர்களும் மன்னிக்கப்பட்டார்கள்.

பொதுத்தேர்வில் எங்களில் சிலர் கணக்கில் சென்டம் எடுத்து அவரை கிண்டல் பண்ணியதற்கு பரிகாரம் தேடிக்கொண்டோம்.

இதுல கொடுமை என்னான்னா அந்த ரெண்டு பேர் பேசுனதுக்கு தண்டனை கொடுத்தவர். இப்போ எல்லோரும் படிக்கிற மாதிரி எழுதுற என்னை வெளியே போக சொல்ல முடியாது பாருங்க அதுதான் டைமிங்.

என்னோட நோக்கப்படி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். டாக்டராக வேண்டுமென்பதால் சேக் தாவூது ப்ளஸ் ஒன்னில் சேர்ந்தான்.

பின்பு அவன் சென்னையில் BDS படித்துக்கொண்டிருக்கும் போது ஓரிரு முறை சென்னையில் வைத்து சந்தித்தேன். டாக்டர் பட்டம் வாங்கி அதே கல்லூரியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது நான் சவுதி வந்து விட்டேன்.

போன வாரம் ஒரு பதிவில் டாக்டர் எஸ் தாவூது என்று பெயரில் ஒரு பின்னூட்டம் வந்தது.

ஒரு வேளை நம்மாளாக இருக்குமோ எனக்கேட்டேன். அவனேதான்.

ஊரில் நலம் விசாரித்து மெயில் அனுப்பினேன்.

அவனிடம் இருந்து பதில் வந்தது.

"டேய்.. நானும் சவுதில, ஜித்தால தாண்டா இருக்கேன். இங்குள்ள டெண்டல் ஹாஸ்பிடலில் டாக்டரா இருக்கேன். முடிஞ்சா சந்திப்போம்."

என்ன கொடுமை சரவணன் இது !

,

Sunday, May 23, 2010

விமான விபத்தும் அதன் பாதிப்பும்

பதிவர் சந்திப்பு இரண்டாம் பாகத்தை வெள்ளி இரவு எழுதி முடித்து விட்டு சனி காலை பதிவிட எண்ணிக்கொண்டு தூங்கி விட்டேன்.

வழக்கமாக அலாரம் வைத்துதான் படுப்பேன். காலையில் டிவி சத்தம் கேட்டு அதற்குள் மணியாகிவிட்டதா என்று விழித்து மணி பார்த்தேன் மணி எட்டு. (எட்டரைக்குத்தான் எழும்புவது வழக்கம்) ரூமிலிருக்கும் கன்னட நண்பர் பார்த்துக்கொண்டிருந்தார். நானும் பார்க்கும் போதே புரிந்து போனது ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று.

160 பயணிகள் 6 விமான ஊழியர்களுடன் துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் 159 பேர் பலி.

என்ற இடி விழும் செய்தியை சொன்ன போது மனசு துடித்துப்போனது.

வீட்டை விட்டு பிரிந்து சில மாதங்கள் வெளியூரில் வேலை பார்த்து ஊர் திரும்பும் போது எத்தனை ஆர்வமாயிருக்கும். அதுவே ஒரு சில வருடங்கள் கழித்து திரும்புவது எப்படியிருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

விமானத்திலிருந்து ஊரை ஆவலுடன் பார்த்துக்கொண்டே இன்னும் சில நொடிகளில் விமானம் தரையைத்தொடப்போகிறது. அடுத்த ஐந்து நிமிடத்தில் தாய் மண்ணில் கால் வைக்கப்போகிறோம் என்று தானே அனைவரும் நினைத்திருப்பர். கரிக்கட்டையாகப்போகிறோம் என்பதை அறியாமல்.

இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் தன் தாயின் இறுதிச்சடங்குக்காக ஊர் திரும்பியவர். மற்றொருவர் அடுத்த மாதம் முதல் வாரம் நடக்கவிருக்கும் தனது திருமணத்துக்காக நாடு திரும்பியவர். இவர்களைப்போல ஒவ்வொருவருக்கும் நாடு திரும்புவதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும்.

ஏதாவது விபத்தில் ஒருவர் இறக்கும் போது இறப்பது அவர் மட்டுமல்ல அவர் கன‌வுகளும், அவரை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையும்தான். இந்த நூற்றி ஐம்பத்து ஒன்பது பேரும் சில‌ நிமிடங்கள் மரணத்தின் வலியை அனுபவித்து விட்டு போய் விட்டார்கள். அவர்களது குடும்பங்கள் இனி அந்த வலியை ஒவ்வொரு நாளும் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கப்போவதை நினைத்தால் துக்கம் தொண்டையை அடைத்துக்கொள்கிறது. இறைவன் அவர்களுக்கு மன நிம்மதியை விரைவில் மீட்டுக்கொடுப்பானாக.

வாழ்வில் ரிஸ்க் எடுப்பதே நன்றாக வாழத்தான். ஆனால் பிறரின் வாழ்க்கையை வைத்து ரிஸ்க் எடுப்பதன் அத்தியாவசியம் என்ன? ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் குறுகிய ஓடுதளத்தை கொண்ட விமான நிலையத்தை ரிஸ்க் எடுத்து சர்வதேச விமான நிலையமாக மாற்ற‌ வேண்டிய அவசியம் என்ன?

நல்ல விஸ்தாரணமான இடவசதி, தரமான ஓடுதளம் கொண்ட எத்தனையோ விமான நிலையங்கள் இருக்கும் போது. குறுகிய ஓடுதளத்தில் மிகச்சரியாக துல்லியமாக விமானத்தை இறக்காவிட்டால் பெரும் விபத்து ஏற்படும் என்று விமானிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது?

இன்னும் சில செய்திகளில் போயிங் 737 ரக விமானங்களின் விபத்து விகிதம் மற்ற‌ விமான மாடல்களை விட அதிகம் என்று சொல்லும் போது. மற்ற‌ நாடுகளை போல் தரம் வாய்ந்த ஏர்பஸ் விமானங்களை வாங்க என்ன தயக்கம்? பணம்தான் பிரச்சனையென்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏனெனில் எனக்கு தெரிந்து மற்ற‌ விமான சேவைகளை விட ஏர் இந்தியாவில் ஊர் திரும்ப 200 ரியால் அதிகம். டிக்கட்டுகளும் விரைவில் விற்று விடுகிற‌து.

ஆள்பவர்களே நீங்கள் எதில் வேண்டுமென்றாலும் ஊழல் செய்யுங்கள். எங்களுக்கு அது பழகிப்போய் விட்டது. ஆனால் மக்களின் உயிர் விசயத்தில் மட்டும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அது தரை வழிப்போக்குவரத்தாக இருந்தாலும், வான் வழிப் போக்குவரத்தாக, மருந்தாக இருந்தாலும் சரி. நடந்த பின் யார் மேல் குற்றம் சொல்லலாம் என்பதை விட்டு விட்டு. இனி இது போல் நடக்காமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை எந்த சமரசமும் இல்லாமல் உறுதியுடன் எடுப்பதே உங்களை பதவியில் வைத்த எங்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறாகும்.

இலவசங்களுக்கும் , சலுகைகளுக்கும் நீங்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதியை போக்குவரத்து பாதுகாப்புக்கும் செலவழித்து, சர்வதேச தரம் என்று பேச்சிலும், போர்டிலும் தொங்காமல் நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி உண்மையான சர்வதேச தரத்துக்கு உயர்த்துமாறு உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம்.

நேற்று இரவு அந்த கன்னட நண்பர் சொன்னார். எனது ரூமில் ஏசி மாட்டியவரின் தங்கையும் மச்சானும் ஒரு குழந்தையுடன் துபாயில்தான் இருக்கிறார்கள். நேற்றைய விபத்தில் தங்கையும் குழந்தையும் சிக்கிக்கொண்டார்கள் என்று. : (

,

Thursday, May 6, 2010

கல் சிலேட்டு , தேனீ உமர் தம்பி !

அப்போதெல்லாம் கல் சிலேட்டுகள் தான் பிரபலமாக இருந்தது. எனக்கான சிலேட் இரண்டாம் வகுப்பில்தான் வாங்க முடிந்தது. அதில் எழுதத்தொடங்கினால் எழுதிக்கொண்டே இருக்கணும் போல தோன்றும் அப்படி மாவு மாதிரி எழுதும். எழுத கடல் குச்சி கிடைத்துவிட்டால் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் போய் விடும்.

குச்சிகளை கடன் கொடுப்பதோடு நிறைய பேருக்கு நட்பையும் சேர்த்து கொடுத்திருக்கிறேன். பின்பு அவர்கள் நட்போடு சேர்த்து இருமடங்காக திருப்பித்தருவார்கள். இது பென்சிலுக்கும் நடக்கும்.

மூணாம் வகுப்பில் இருந்து பேனாவை பயன்படுத்தியதாக ஞாபகம். எனது அம்மாவின் அம்மா வாங்கிதந்த முதல் பேனா இன்னும் நினைவில் நிற்கிறது.

மை பேனா பயன்படுத்துவதில் ஒரு வசதி. மை தீர்ந்து விட்டால் அடுத்தவனை ரெண்டு சொட்டு பெஞ்சில் விடச்சொல்லி உறிஞ்சி விடலாம். இப்போதும் ஏதேனும் பள்ளிக்கு சென்று மை உறிஞ்சிய பெஞ்சுகளையும், டெஸ்க்குகளையும் பார்த்தால் அதில் ஆயிரமாயிரம் நட்பின் கதைகளையும் சேர்த்தே உறிஞ்சியிருப்பதாக தோன்றும்.

ஆறாம் வகுப்பில் பேனாக்களின் ஹீரோவான கரும்பச்சை ஹீரோ பேனா கிடைத்தது. கையில் நோகியா 97 வைத்திருப்பதை விட அதிக மகிழ்ச்சியை உணர்ந்த காலம் அது.

பின்பு ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் பால்பாயிண்ட் பேனாக்கள் சக்கை போடு போட்டன. கரைபடியும் கவலை இனி இல்லை உங்களுக்கு என்ற விளம்பர வாசகம் போல அதனால் கைகளில் கறை படிவது குறைந்தது.

பாலிடெக்னிக் படிக்கும் போது ஜெல் பேனாக்கள் பிரபலமாகின. நான் வைத்திருந்த ஸ்டிக் மைக்ரோ டிப் பேனாவை பார்த்த தோழி ஒருத்தி அது போல் ஒன்றுக்கு ஆசைப்பட்டாள்.

சரியென்று மறுநாள் வாங்கி வரும் போது நண்பன் சொன்னான் பேனா பரிசு கொடுத்தால் நட்பு முறிந்து விடும் என்று. அதைச் சொல்லி அவளிடம் பணம் வாங்கிக் கொண்டேன். கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அதனால் நட்பு இருமடங்கு வளர்ந்தது.

மனதில் பைனரியாக தோன்றும் எண்ணங்களை நமது மூளை கம்பைல் செய்து விரல்களின் வழியே அனுப்பி பேனாவில் வழியச்செய்வதால் கிடைப்பதுதான் நம் அழகழகான எழுத்துகள்.

நம் வாழ்வோடு ஆறாம் விரலாய் ஒட்டிக்கொண்டு வந்துள்ள‌ மை பேனாவை கண்டுபித்தவர் வாட்டர்மேன் என்றும் பால்பயிண்ட் பேனாவை கண்டுபிடித்தவர் லாய்ட் என்றும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். ஐந்து ரூபாய்க்கு வாங்கும் பேனாவை கண்டுபிடித்த ஒருவரின் வாழ்நாளின் பெரும் பகுதியை இந்த பேனாவே கரைத்திருக்கும் என்று உணர்ந்திருக்கிறோமா?

அது போலவே முன்பு பேனாவை எழுத பயன்படுத்தியது போல் இப்போது கணினியை பயன்படுத்துகிறோம். இதில் நீங்களும் நானும் எளிய தமிழில் தொடர்பு கொள்ள இந்த எழுத்துருக்களை கண்டுபிடித்தது யாரென்று நாம் நினைத்துப்பார்த்து நன்றி செலுத்தியிருக்கிறோமா?

அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக விடமாட்டோம்தானே. ஏனெனில் காலையில் எழுந்து இரவு படுக்கச்செல்லும் வரை நடக்கும் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட மற்றவர்களுக்கு நன்றி சொல்லி பழக்கப்பட்டவர்கள் நாம். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் விடுவோமா?

கிடைத்திருக்கிறது. ஆம் இந்த தமிழ் எழுத்துருக்களுக்காக பிரதிபலன்பாராமல் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவழித்து கண்டுபிடித்து நமக்கு அளித்த "தேனீ" உமர் தம்பி அவர்களுக்கு நாம் நமது நன்றிகளை செலுத்துவோம்.

தமிழ் எழுத்துருக்கள் (Thenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அதற்கு பண‌த்தையோ எதிர் பார்க்காமல் சேவையாற்றியவர்கள் உமர்தம்பி அவர்கள்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் அதை நம் பதிவர்கள் அனைவரும் ஒத்த கருத்துடன் பதிவுகள் மூலமாக எல்லோரிடமும் பரப்புவதே நாம் அவருக்கும் அவர் பணிக்கும் செய்கின்ற நன்றிக்கடனாகும்.

மேலும் அவர்களைப்பற்றி அறிய‌ இதை வாசியுங்கள்.

,

Tuesday, April 27, 2010

காய்க்காத மரத்தின் விலை ஒரு லட்சம்

சவுதி அரேபியா பெட்ரோல் வளம் நிறைந்த மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிடத்தக்க ஒரு நாடு.

இங்குள்ள சவுதிகள் ( நாம் இந்தியர்கள் என்பது போல் அவர்கள் சவுதிகள் ) பெருமையாக சொல்லிக்கொள்வார்கள், உன் காலுக்கு அடியில் தோண்டினால் தண்ணீர் வராது பெட்ரோல்தான் வரும் என்று.

அந்த வளம்தான் அவர்களை பணக்கார நாடுகளின் வரிசையில் இன்றும் வைத்திருக்கிறது. நமக்கு வேலை வாய்ப்பையும் அளித்திருக்கிறது.

ஆனால் இவ்வளவு வசதியிருந்தும் அவர்கள் ஏங்குவது எதற்கு தெரியுமா? இயற்கைக்கு.

ஆம் இங்கு நம் நாட்டை போல் பச்சை பசேலென புல்வெளிகளோ, அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளோ எதுவுமே கிடையாது. பேரிச்சம் மரங்களும் ஒரு சில ஏரியாவில்தான் நன்கு வளர்கின்றன.

வருடத்திற்கு 5 நாட்கள் அல்லது பத்து நாட்கள் மழை பெய்யும் அதுவும் ஒரு சில வருடங்கள் பெய்யாது. மழை நேரங்களில் யாரிடமாவது என்ன இப்படி ஒரே நசநசன்னு சொல்லிவிட்டால் போதும் அவர்களுக்கு கோபம் வந்து விடும். அப்படி சொல்லக் கூடாது, மழை இறைவனின் அருட்கொடை இன்னும் நிறைய பெய்யட்டும். அதுதான் நல்லது என்பார்கள்.

இங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 6 ரூபாய் ஆனால் ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரின் விலை 24 ரூபாய். வீட்டிற்கு வந்து சப்ளை செய்பவர்களிடம் வேண்டுமானால் விலை குறைவாக இருக்கும்.

அவர்களுக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும். காரணம் இங்குள்ள இயற்கை வளங்கள். மூணாறு பற்றியும் ஊட்டி பற்றியும் நிறைய சவுதிகள் பெருமையாக பேச கேட்டிருக்கிறேன்.

போலவே சவுதி அரசும் செயற்கையாக இயற்கையை உருவாக்கி வருகிறது இது போல‌


இந்த கார்டன் அமைக்க ஆன செலவு மட்டும் 5 கோடி (தோராயமாக)இருக்கும். அனைத்தும் செயற்கை புல்வெளிகள். தினமும் இரு வேளை நீர் தெளிக்க பைப் வசதிகள் என்று மிக அழகாக திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

இதை திறந்து 2 மாதமாகிறது. தினமும் மாலையில் இருந்து இரவு 12 மணிவரை கூட்டம் கூட்டமாக ஏசி வீட்டை விட்டு இங்கு வந்து இளைப்பாறுகிறார்கள்.

மேலும் ரோட்டிற்கு நடுவே இது போல மரங்களை நட்டு தினமும் லாரிகள் மூலம் நீர் பாய்ச்சுகிறார்கள்.
ஏதாவது தருணத்தில் விபத்து ஏற்பட்டு இந்த மரங்கள் ஒடிந்தால் ஒரு மரத்திற்கு ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் வீதம் அவரிடம் அபராதம் விதிக்கப்படும்.

காய்க்காத, நிழல்தராத அந்த மரத்திற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்திலிருந்து தெரிந்திருக்கும் இயற்கைக்கு எவ்வளவு ஏங்குகிறார்கள் என்று.

ஆனால் நாம்?

இருக்கிற இயற்கை வளங்களை அழித்து கான்க்ரீட் காடுகளாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினர் மரங்கள் வளர்க்காவிட்டாலும் மரங்களை அழித்து நான் பார்த்ததில்லை. ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் இயற்கை வளங்கள் அதிகமாக சுரண்டப்படுகிறது.

இந்த பூமிக்கு நம்மாலான சிறிய உதவி அல்லது கடமை. வாழ் நாளில் ஒரு மரமாவது நட்டு, பெரிதாக வளரும் வரை அதை பராமரிப்பதுதான்.

என்னதான் சொர்க்கத்தில் இருந்தாலும். அதை சொர்க்கம் என்று உணராதவரை ஒரு பயனும் இல்லை.

,

Sunday, April 25, 2010

யூத்ஃபுல் விகடனில் எனது கவிதை

வெளிநாட்டு வாசியின் லீவு நாட்கள் என்ற எனது கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது. அந்த கவிதை இதோ.

வெளிநாட்டுவாசியின் லீவு நாட்கள்.

கத்தை கத்தையாக

பணம் அழித்தவன்


கை
யில் எஞ்சி இருக்கும்

சில்லறை காசுகளின்


மு
க்கியத்துவத்தை

பெற்று விடுகின்றன


ஊர் வந்
தவனின்

இறுதி விடுமுறை நாட்கள்.


என்னை அனுப்ப சொல்லி உற்சாகப்படுத்திய நண்பர் சரவணனுக்கும், முகவரி தந்து அனுப்ப சொன்ன பா.ரா. அண்ணனுக்கும், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் ஸ்டார்ஜன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Saturday, April 17, 2010

வெளிநாட்டுவாசியின் புலம்பல்கள்

இரு நாட்கள் முன்பு பா.ரா அண்ணனிடம் இருந்து போன். என்ன அக்பர் எப்படியிருக்கீங்க, சரவணன் எப்ப வாரார் என்று கேட்டார். அண்ணனின் எழுத்துகளை போலவே பேச்சிலும் தனித்தன்மை உண்டு.

எனக்கு சின்ன சந்தேகம் இது அவரின் குரல் நடை (எழுத்து நடை மாதிரி:)) இல்லையே என்று நினைத்துக்கொண்டே, நேற்றே வருவதா சொன்னாரு போனுக்கு அடிச்சா எடுக்க மாட்டேங்குது என்றேன்.

இப்போ யாருட்ட பேசிட்டு இருக்கீங்களாம்ன்னாரு அட! இது நம்ம சரவணன்!! எப்படியிருக்கீங்க சரவணன் ஊரில் அனைவரும் நலமா என்று ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டோம். இந்த வாரத்தில் சந்திப்பதாக கூறினார். பின்பு பா.ரா அண்ணனிடம் சிறிது நேரம் பேசினேன்.

நண்பரை சந்திக்கும் மகிழ்ச்சியை சொல்லி அறிய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இந்த வெள்ளியன்று ஐந்து மணி பஸ்ஸில் வருவதாக செல்லினார். சரியாக ஆறு மணிக்கு இறங்கியவரை அழைக்க பஸ் நிலையம் சென்றேன்.சிறிது தூரத்தில் வாசலில் ஒருவர் அவரைப்போலவே சற்று குண்டாக நின்று கொண்டிருந்தார்.

ஊருக்கு சென்ற சரவணனுக்கு உடம்பு வைத்துவிட்டதா என்று நினைத்துக்கொண்டே வாசலுக்கு அருகில் சென்றேன் அவர் இல்லை. போனடித்தேன். அக்பர் நான் உள்ளேதான் இருக்கேன் உங்களை பார்த்துட்டேன். அங்கே நில்லுங்க நான் வெளியில் வாரேன்னார்.

ஸ்லைடிங்க் டோர் ஓப்பனாக ஹீரோ என்ட்ரி. கட்டித்தழுவ முடியவில்லை கையில் டீ கப்புடன் இருந்ததால்.ஓரத்தில் டீ கப்பை கைவிட்டு என் கைகுலுக்கினார். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு கடைக்கு வந்தோம்.

சரவணன் ஒரு புத்தக தகவல் களஞ்சியம். எப்போதோ படித்த புத்தகத்தின் பேரைச் சொன்னாலே போதும். அதை எழுதியவர். எந்த சூழ்நிலையில் எழுதினார். அதற்கு முன்னும் பின்னும் என்ன புத்தகங்கள் எழுதியுள்ளார் என்பதை சொல்லுமளவுக்கு ஞாபக சக்தி. கூடவே புத்தக நேசிப்பும் வெளிப்பட்டு விடுகிறது.

சரவணன், ஸ்டார்ஜன் , நான் மூவரும் பேசிக்கொண்டேயிருந்தோம் நேரம் போவது தெரியாமல். காலை 6 மணிக்கு பணிக்கு செல்லவிருந்ததால் விடை பெற்றார். மீண்டும் காத்திருக்கிறோம் மற்றுமொரு வெள்ளிக்காக.

பா.ரா அண்ணனின் பணிச்சூழல் காரணமாக சந்திப்பது தள்ளிக்கொண்டே போகிறது. அதுவும் ஒரு நாள் நிறைவேறும்.

===========================

போன வாரத்தில் பின் தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது மனதை நெகிழ வைத்தது. பின் தொடரும் நண்பர்களுக்கும் , தொடர்ந்து என்னை வாசித்து உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

============================

ஒரு கவிதை.

வெளிநாடுவாசியின் லீவு நாட்கள்.

கத்தை கத்தையாக

பணம் அழித்தவன்

கையில் எஞ்சி இருக்கும்

சில்லறை காசுகளின்

முக்கியத்துவத்தை

பெற்று விடுகின்றன

ஊர் வந்தவனின்

இறுதி விடுமுறை நாட்கள்.

,

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails