இந்த வருடம் ஏப்ரல் ஒன்னில் யாருகிட்டயும் ஏமாறாம இருக்கனும், குறிப்பா சட்டையில மை படாமா பார்த்துக்கிடனும். இது என் குறிக்கோள்.
காரணம் இருக்கிறது. சென்ற வருடங்களில் நான் பட்ட பாடு அப்படி. என்னதான் பழைய சட்டை போட்டாலும். நம் மக்கள் முதுகில் குத்துவதில் வல்லவர்கள் முன்னாடி சிரிச்சுகிட்டே போவாங்க, பின்னடி திரும்புனாலும் சிரிப்பாங்க. ஆனா வீட்டுல வந்து பார்த்த முதுகெல்லாம் மையா இருக்கும்.
ஒரு முறை இவர்களை மூக்கூடைக்க மை கலரில் சட்டை போட்டு வெளியில் சுற்றினேன். வெற்றிக்களிப்பில் வீட்டுக்கு வந்து சட்டையை கழற்றினால் பச்சை மை கருமையாக படர்ந்திருந்து.
கழுவினால் போய்விடுகிறது ஏன் இந்த அலப்பறை என்பது காதில் விழுகிறது. அவர்கள் மை தயாரிக்கும் விதமே தனி. மையில் வாழைச்சாறை கலக்கினால். சட்டை கலர் போனாலும் போகும் மை போகாது.
எனவேதான் இந்த ஆண்டு இவ்வளவு வைராக்கியம். வீட்டுக்குள்ளேயே இருந்தால் பயந்தங்கோளி என்று பட்டம் பெற வாய்ப்பிருந்ததால் மிக அடர் கலரில் பழைய சட்டையை மாட்டிக்கொண்டு தெருவை கவனமாக சுற்றினேன். எதிர்படும் நண்பர்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு, வீடு வந்து சட்டையை கழட்டினேன். வெற்றி இன்று ஒரு கறை இல்லை.
சந்தோசத்துடன் திரைச்சிலை விலக்கி சமையலறைக்குள் செல்ல முயன்ற போது. டம் தடார்!
" அடப்பாவி பயலே கொதிக்கிற ஆனச் சட்டியில வந்து விழுந்துட்டியே. பிள்ளையை பிடிங்கம்மா" பெரியம்மா கத்துகிறார்கள்.
நெஞ்சு வயிற்றுப்பகுதியில் மீன் குழம்பு மணம் சுடச்சுட.
குளிர்ந்த நீரில் கழுவி மருந்து எடுத்து போடப்போனார்கள்.
"வேணாம் " அலறினேன். பின்னே எந்த மை படாமல் இன்று தப்பி வந்தேனோ அந்த மை உடம்பு பூராவும் தேய்த்தால் சும்மாவா இருக்க முடியும்?
" சும்மா கிட புண்ணு ஆறவேணாம. புள்ளைக்கு பொத்து போயிலோ கிடக்கு. நீ பார்த்து புடிச்சிட்டு போக கூடாதாக்கா" இது அம்மா.
" அவம்தாம்ளா வேகமா வந்து விழுந்துட்டான்" பெரியம்மா.
சிறிது நேரம் கழித்து அந்த வேதனையிலும் சிரித்துக்கொன்டிருந்தேன். அம்மாம்மா வந்து கேட்டார்கள்
"ஏம்மா வலிக்குதா".
வலிக்காம? நல்லாவே வலிக்குது.
" சரி எதுக்கு சிரிச்சே".
இல்லை இதுக்கு சட்டை முழுக்க மையா ஆனா நல்லாயிருந்துருக்குமேன்னு தோணுச்சு அதுதான்.
"என் ராசா ஒன்னும் ஆவாது நீ வீரன்லடா. "
இன்னொன்னுக்கும் சிரிச்சேன். நல்ல வேளை இப்ப பத்து வயசா இருக்கும் போது நெஞ்சுல,வயத்துல பட்டுச்சு. வளர்ந்த பிறகு பட்டா என்ன ஆயிருக்கும்.
" அடி படுவா. வக்கனைப்பேச்சுக்கு குறை இல்லை அப்படியே அவரு மாதிரியே. "
இப்போது எழுதும் போதும் வயிற்றை தடவிப்பார்த்து சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
,