Sunday, May 23, 2010

விமான விபத்தும் அதன் பாதிப்பும்

பதிவர் சந்திப்பு இரண்டாம் பாகத்தை வெள்ளி இரவு எழுதி முடித்து விட்டு சனி காலை பதிவிட எண்ணிக்கொண்டு தூங்கி விட்டேன்.

வழக்கமாக அலாரம் வைத்துதான் படுப்பேன். காலையில் டிவி சத்தம் கேட்டு அதற்குள் மணியாகிவிட்டதா என்று விழித்து மணி பார்த்தேன் மணி எட்டு. (எட்டரைக்குத்தான் எழும்புவது வழக்கம்) ரூமிலிருக்கும் கன்னட நண்பர் பார்த்துக்கொண்டிருந்தார். நானும் பார்க்கும் போதே புரிந்து போனது ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று.

160 பயணிகள் 6 விமான ஊழியர்களுடன் துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் 159 பேர் பலி.

என்ற இடி விழும் செய்தியை சொன்ன போது மனசு துடித்துப்போனது.

வீட்டை விட்டு பிரிந்து சில மாதங்கள் வெளியூரில் வேலை பார்த்து ஊர் திரும்பும் போது எத்தனை ஆர்வமாயிருக்கும். அதுவே ஒரு சில வருடங்கள் கழித்து திரும்புவது எப்படியிருக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

விமானத்திலிருந்து ஊரை ஆவலுடன் பார்த்துக்கொண்டே இன்னும் சில நொடிகளில் விமானம் தரையைத்தொடப்போகிறது. அடுத்த ஐந்து நிமிடத்தில் தாய் மண்ணில் கால் வைக்கப்போகிறோம் என்று தானே அனைவரும் நினைத்திருப்பர். கரிக்கட்டையாகப்போகிறோம் என்பதை அறியாமல்.

இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் தன் தாயின் இறுதிச்சடங்குக்காக ஊர் திரும்பியவர். மற்றொருவர் அடுத்த மாதம் முதல் வாரம் நடக்கவிருக்கும் தனது திருமணத்துக்காக நாடு திரும்பியவர். இவர்களைப்போல ஒவ்வொருவருக்கும் நாடு திரும்புவதற்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும்.

ஏதாவது விபத்தில் ஒருவர் இறக்கும் போது இறப்பது அவர் மட்டுமல்ல அவர் கன‌வுகளும், அவரை சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையும்தான். இந்த நூற்றி ஐம்பத்து ஒன்பது பேரும் சில‌ நிமிடங்கள் மரணத்தின் வலியை அனுபவித்து விட்டு போய் விட்டார்கள். அவர்களது குடும்பங்கள் இனி அந்த வலியை ஒவ்வொரு நாளும் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கப்போவதை நினைத்தால் துக்கம் தொண்டையை அடைத்துக்கொள்கிறது. இறைவன் அவர்களுக்கு மன நிம்மதியை விரைவில் மீட்டுக்கொடுப்பானாக.

வாழ்வில் ரிஸ்க் எடுப்பதே நன்றாக வாழத்தான். ஆனால் பிறரின் வாழ்க்கையை வைத்து ரிஸ்க் எடுப்பதன் அத்தியாவசியம் என்ன? ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் குறுகிய ஓடுதளத்தை கொண்ட விமான நிலையத்தை ரிஸ்க் எடுத்து சர்வதேச விமான நிலையமாக மாற்ற‌ வேண்டிய அவசியம் என்ன?

நல்ல விஸ்தாரணமான இடவசதி, தரமான ஓடுதளம் கொண்ட எத்தனையோ விமான நிலையங்கள் இருக்கும் போது. குறுகிய ஓடுதளத்தில் மிகச்சரியாக துல்லியமாக விமானத்தை இறக்காவிட்டால் பெரும் விபத்து ஏற்படும் என்று விமானிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது?

இன்னும் சில செய்திகளில் போயிங் 737 ரக விமானங்களின் விபத்து விகிதம் மற்ற‌ விமான மாடல்களை விட அதிகம் என்று சொல்லும் போது. மற்ற‌ நாடுகளை போல் தரம் வாய்ந்த ஏர்பஸ் விமானங்களை வாங்க என்ன தயக்கம்? பணம்தான் பிரச்சனையென்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஏனெனில் எனக்கு தெரிந்து மற்ற‌ விமான சேவைகளை விட ஏர் இந்தியாவில் ஊர் திரும்ப 200 ரியால் அதிகம். டிக்கட்டுகளும் விரைவில் விற்று விடுகிற‌து.

ஆள்பவர்களே நீங்கள் எதில் வேண்டுமென்றாலும் ஊழல் செய்யுங்கள். எங்களுக்கு அது பழகிப்போய் விட்டது. ஆனால் மக்களின் உயிர் விசயத்தில் மட்டும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அது தரை வழிப்போக்குவரத்தாக இருந்தாலும், வான் வழிப் போக்குவரத்தாக, மருந்தாக இருந்தாலும் சரி. நடந்த பின் யார் மேல் குற்றம் சொல்லலாம் என்பதை விட்டு விட்டு. இனி இது போல் நடக்காமல் இருக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை எந்த சமரசமும் இல்லாமல் உறுதியுடன் எடுப்பதே உங்களை பதவியில் வைத்த எங்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறாகும்.

இலவசங்களுக்கும் , சலுகைகளுக்கும் நீங்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதியை போக்குவரத்து பாதுகாப்புக்கும் செலவழித்து, சர்வதேச தரம் என்று பேச்சிலும், போர்டிலும் தொங்காமல் நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி உண்மையான சர்வதேச தரத்துக்கு உயர்த்துமாறு உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம்.

நேற்று இரவு அந்த கன்னட நண்பர் சொன்னார். எனது ரூமில் ஏசி மாட்டியவரின் தங்கையும் மச்சானும் ஒரு குழந்தையுடன் துபாயில்தான் இருக்கிறார்கள். நேற்றைய விபத்தில் தங்கையும் குழந்தையும் சிக்கிக்கொண்டார்கள் என்று. : (

,

27 comments:

செ.சரவணக்குமார் said...

இந்தக் கொடூர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை நினைத்தால்தான் மிக வேதனையாக இருக்கிறது. பாதுகாப்பு குறித்த விழிப்புணர்ச்சி அரசாங்கத்திற்குத்தான் மிக அவசியம்.

இறுதிப்பத்தி உலுக்கி விட்டது அக்பர். கண்ணீர் அஞ்சலிகள்.

ஷாகுல் said...

இறைவன் தான் அவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்க வேண்டும்.

நேசமித்ரன் said...

கண்ணீர் அஞ்சலிகள்...!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஆள்பவர்களே நீங்கள் எதில் வேண்டுமென்றாலும் ஊழல் செய்யுங்கள். எங்களுக்கு அது பழகிப்போய் விட்டது.//

முதற்காரணம் ஊழல்தான், சரியான வார்த்தை.

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Ahamed irshad said...

ஆழ்ந்த அனுதாபங்கள்....

இராகவன் நைஜிரியா said...

ஆழ்ந்த அனுதாபங்கள்

நாடோடி said...

//உண்மையான சர்வதேச தரத்துக்கு உயர்த்துமாறு உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம்.///

உண‌ர்ந்தால் ச‌ரி..

அனைவ‌ருக்கும் என‌து அழ்ந்த‌ அனுதாபங்கள்..

Prathap Kumar S. said...

மிகவேதனையான சம்பவம்...

SUFFIX said...

வருத்தமான நிகழ்வு, இனியும் இது போன்ற சம்பவங்கள் நிகழாதிருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Prasanna said...

எனக்கும் முதலில் தோன்றிய கேள்வி -அவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு அந்த இடத்தில் விமான நிலையத்தை எதற்கு வைக்க வேண்டும் என்பதே..

அஞ்சலிகள :(

பத்மநாபன் said...

யாரை குறை சொல்வது இதில் ... நொடி பொழுதில் அத்தனை கனவுகளையும் தவிடு பொடி யாக்கிய நிகழ்வு மிகவும் மனம் நோக செய்தது .. மனக்கட்டுபாடும் , கட்டுகோப்பும் சற்றும் சிதறாமல் விமானிகளை வைத்திருக்க வேண்டியது , அந்தந்த நிறுவனங்களின் தலை யாய கடமை ஆகும் ..எங்கு விட்டார்கள் என்று தெரியவில்லை ... பாதுகாப்புக்கு ஒரு 1000 % சதவிகிதம் முன்னுரிமை கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற சோக நிகழ்வுகளை தவிர்க்கலாம் . மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஆறுதல் அளிக்கவேண்டும் ... உயிர் தப்பியவர்களுக்கு அரசும், விமான நிறுவனமும் உடனடியாக மன உடல் சிகிச்சைகளை அளிக்கவேண்டும் ..

vasu balaji said...

இறந்தவர்க்கு அஞ்சலிகள்.

பனித்துளி சங்கர் said...

இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் விபரங்கள் அடங்கிய ஒரு தகவல் கிடைத்தது அதில் பல குழந்தைகள் என்று அறிந்தபோது. ஒரு நிமிடம் இதயத்தில் இடி தாங்கியவனாய் கலங்கிப்போனேன்

தோழி said...

இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்...

மின்மினி RS said...

நினைக்க நினைக்க வருந்தும் சம்பவம்; இறந்தவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தை தருவான். அவர்களின் குடும்பங்களின் இன்னல்களை அல்லாஹ் போக்கிஅருள்வான்.. ஆமீன். எல்லோரும் பிராத்திப்போம்..

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் கண்ணீர் அஞ்சலிகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் கண்ணீர் அஞ்சலி..

settaikkaran said...

சர்வதேச விமானங்கள் வந்து இறங்குகிற ஒரு விமான நிலையத்தை அவ்வளவு எளிதில் அங்கீகரித்து விட மாட்டார்கள். இதற்கு அனுமதி அளித்திருப்பது உலகளாவிய ஒரு அமைப்பாகும். பாதுகாப்பைப் பொறுத்தவரையில் நூறு சதவிகிதம் உத்தரவாதம் இல்லாமல் இந்த விமான நிலையத்தை அனுமதித்திருக்க மாட்டார்கள். இதில் எந்த மெத்தனமோ அரசியலோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. டேபிள் டாப் விமான நிலையங்கள் உலகெங்கும் உள்ளன. விபத்தின் உண்மையான காரணம் வெளிவரும் வரையில் எதுவும் சொல்வதற்கில்லை! இது எனது தனிப்பட்ட கருத்து!

ஆனால், உயிரிழப்பு பெரும் சோகம்! ஆழ்ந்த அனுதாபங்கள்! ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை!

Asiya Omar said...

வேதனையோடு அதனை வெளிப்படுத்தி,விவாதித்தது அந்த கொடுமையின் உக்கிரத்தை உணர வைத்தது.எங்களுக்கு தெரிந்த அபுதாபியில் ஒரு கிராசரி ஓனர் (மங்லூரியன்)விபத்தில் மரணம்,அவர் குடும்பம் அபுதாபியிலாம்.அந்த பில்டிங்கே அதிரும் படி அழுகையும் கூப்பாடும் தாங்க முடியலை என்று தெரிந்தவர் கூறக்கேட்கவே வேதனை தாளவில்லை.

Jaleela Kamal said...

மிகவும் அதிர்ச்சியான சம்பவம்

நித்தி said...

மிகவும் வேதனையான விஷயம்...இங்கு பிரான்ஸ் தொலைகாட்சியில் தலைப்பு செய்தியாக முதலில் இந்த செய்தியைதான் காட்டினார்கள்.....மிகவும் துயரப்படவேண்டிய விஷயம்....குறுகிய ஓடுதளத்தில் தரையை தொடவேண்டிய இடத்தை விட்டு தள்ளி இறக்கியதால் விமானத்தை கட்டுப்பாடிற்குள் கொண்டுவரஇயலவில்லை என கூறினார்கள்.

இத்தனைக்கும் பைலட் அணுபவம் வாய்ந்தவர் தானாம்..10,000 மணி நேரம் ஓட்டிய அனுபவமும் 26 முறை இதே மங்களூரில் "take-off,Landing" செய்திருக்கிறாராம்.

மேலும் விபத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்ததாகவும் கூறினார்கள்...இந்தியாவில் உறவினரின் ஈம காரியத்திற்காக வந்தவர்களை விபத்து பலி வாங்கி விட்டது....

இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசும் ஏர் இந்தியா நிறுவனமும் உதவி செய்ய வேண்டும்...

ராஜ நடராஜன் said...

கீழே ஒற்றை வரியில் விமான விபத்தின் இறந்தவர்களுக்கு அனுதாபம் சொல்லிவிட்டு மேலே திரைப்படப் பாடல்களுக்கு நடன அசைவுகளுடன் தொலைக்காட்சி.

மனதின் வேதனையையும்,விபத்தின் வலியையும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

ஸாதிகா said...

மிகவும் வருந்ததக்க நிகழ்வு.

ஜெய்லானி said...

:-((((((((((((

Mohamed G said...

குறுகிய ஓடுதலம் எப்படி அனுமதி கொடுத்தார்கள். இது முளுக்க முளுக்க,விமானபோக்குவரத்து நிர்வாகத்தின் சீர்கேடு என்று தான் நினைக்க வேண்டும். ஆக அனைத்து இந்தியர்களின் எண்ணம் என்னவென்றால்,ஏர் இந்தியா நமக்கு நம்பிக்கை என்ற எண்ணம் இப்போது கேள்விக்குறியாக உள்ளது.எனக்கும் தான். பல கனவுகளுடன் வந்தவர்கள், இறைவன் அவர்களுக்கு மறுமையில் நல் வாழ்வு அருள்வானாக. நாம் அனைவரும் பிரார்தணை செய்வோமாக.

THE UFO said...

இந்த துயரமான சூழ்நிலையில் இதுவரை யாருமே பேசாத ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி அவசியம் சொல்ல வேண்டி உள்ள கட்டாயத்தில் உள்ளேன்.

ஏர் இந்தியா பற்றி அனைவருக்குமே தெரியும். இதுவரை அது அரியான நேரத்தில் கிளம்பியதும், வந்தடைந்ததும் மிக மிக அரிது. சரியான நேரத்தில் கிளம்பினாலும் சரியான நேரத்தில் சேர்வது மிக அரிது. பலமுறை "ஒரு நாள் தாமதமெல்லாம்" அதற்கு சர்வசாதாரணம். திடீரென்று ரூட் மாத்தி விடுவது, திடீர் ரத்து இதுவும் அடிக்கடி நடப்பதுதான். ஆறு மாதங்களுக்கு முன்னால் தமாமில் முப்பத்து எட்டு பேர் போர்டிங் பாஸ் வாங்கியவர்களுக்கு சென்னை விமாத்தில் விமானத்தில் சீட் இல்லை!!! காரணம் : வந்தது சின்ன விமானம். அவர்களை.. ஹும்.. மறுநாள் ஏற்றி விட்டார்கள்!!

பல முறை பல நாட்கள் விமானிகள் வேலை நிறுத்தம்... விமானத்தில் சில சமயம் எ/சி வேலை செய்யாமல் போய்விடும்... சரியான உபசரிப்பு கிடையாது... வயதான ஏர் ஹோஸ்டஸ் என்று எவ்வளவோ பேருக்கு ஏர் இந்தியாவின் மீது வெறுப்பு இருகிறது. இவை எல்லா வற்றையும் சகித்துக்கொள்ளலாம்.... சொல்லப்போனால் இவைஎல்லாமும் ஒன்றுமே இல்லை...

ஆனால்...

ஆனால்...

ஒன்றே ஒன்றை மட்டும் மன்னிக்கவே முடியாது... அதை சகித்துக்கொள்ளவே முடியாது... கை மீறி போய் விட்டது... யாராலுமே தடுக்க முடியாதா? அது விமானிகள் நினைத்தால் மட்டுமே முடியும்...

அது என்ன?

அது...

விமானிகள் குடித்து விட்டு போதையில் விமானத்தை ஓட்டுவது... (???!!!)
கொடுமை...
இதை யாரிடம் போய் சொல்லி அழுவது..?

இப்போது சொல்லுங்கள்:

"""அவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானிகள், 'இது சிறிய டேபிள் டாப் ரன்வே என்று தெரிந்தும்- பிரேக் கண்ரோல் கிடைக்காது என்று அறிந்தும்' பாதி ரன்வேயில் இறக்குவார்களா?"""

நம்பவில்லையா?

இந்த சுட்டியில் சென்று படியுங்கள்: http://thatstamil.oneindia.in/news/2009/10/20/india-drunk-pilot-delays-ai-fight-to-new-york.html
முக்கியமாய் செய்தியின் கடைசி வரி... தயவு செய்து சிரிக்காதீர்கள்... என் நெஞ்சு வெடித்து விடும்...

Anonymous said...

செய்தி பார்த்த உடன் நெஞ்சு வெடிச்சு விடும் போல் தோன்றியது ...அந்த சின்ன கொழைந்தையே பார்த்ததும் என்னால் அழுகையே அட்க்கமுடியலே ...இறந்து போன எல்லா ஆதமாகும் சாந்தி கிடைக்க கடவுளே வேண்டுகிறேன் ...

சிநேகிதன் அக்பர் said...

ஆறுதலை பகிர்ந்து கொண்ட அனைத்து உள்ள‌ங்களுக்கும் நன்றிகள்.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails