Saturday, August 27, 2011

காத்திருத்தல் என்பது தவம் (தொடர்பதிவு)

சவுதியிலிருந்து ஊர் செல்லும் நண்பர் பிரகாஷுக்கு பொருட்கள் வாங்க தம்பி, மச்சினனுடன் அருகிலுள்ள நகருக்கு சென்றிருந்தோம். எல்லாம் வாங்கி முடித்தவுடன், சாப்பிட ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தோம். தம்பியும் , மச்சினனும் பிரியாணி ஆர்டர் செய்ய, பிரகாஷ் மட்டும் “ரசம் சோறு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுண்ணே இன்னிக்கு வெறுஞ்சோறும் ரசமும் சாப்பிடுவோம்” என்றார். சட்டென்று எனக்கு சென்னையில் என்னுடன் வேலை செய்த சங்கர் அண்ணனின் ஞாபகம் வந்தது.

அவனும் இப்படித்தான். ரசம் சோறுக்காக உயிரை விடும் ரகம். ஒரு முறை காசி தியேட்டர் பக்கத்திலுள்ள சரவணபவனில் சாப்பிட்டு விட்டு படம் பார்க்க முடிவு செய்து சென்றோம். அங்குள்ள சர்வரிடம் ரசம் சாதம் இருக்குமான்னு இவன் கேட்க, இல்ல சார் இராத்திரி டிபன் மட்டும்தான் என்று அவர் சொல்லியும் கேளாமல், மதியம் உள்ளதையாவது கொடுங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டுத்தான் கிளம்பினான்.

இது போலவே இன்னும் சில நண்பர்கள் ரசம் சாதத்தை மிகப் பிரியத்துடன் உண்பதை பல முறை கண்டிருக்கிறேன். எனக்கும் எனது அம்மா வைக்கும் ரசம் மிகப்பிடிக்கும். நான் கல்லூரி படித்த மூன்று வருடங்களும் பெரும்பாலும் ரசம் சோறுதான். பழகப் பழக பாலே புளிக்கும் போது, புளி ஊற்றிய ரசம் மட்டும் புளிக்காதா என்ன?!... ஒரு கட்டத்திற்கு மேல் ரசத்தை அடிக்கடி சாப்பிட பிடிக்காமல் போய் விட்டது.

அதே மாதிரி சிறு வயதில் கத்திரிக்காய், வெண்டங்காய் கண்டாலே அதில் உள்ள புழுதான் கண்ணில் வந்து நிற்கும். அதனால் எப்போதும் அதில் கூட்டு வைத்தால் மறக்காமல் ஒரு துணைக்கறியும் எனக்காக வைக்கப்பட்டு இருக்கும். இப்படி ஒதுக்கி ஒதுக்கி சாப்பிட்டு பழகிய எனக்கு அதன் அருமை புரியும்படியாக ஒரு சந்தர்ப்பம் அமைந்த்து.

ஒரு ஷோரூமில் சம்பளம் இல்லாமல் அப்ரண்டிஸாக வேலை செய்து கொண்டிருந்த நேரம் அது. நானும் நண்பர் முருகனும் மதுரையில் ஒரு சர்வீஸுக்குச் சென்று விட்டு ஜங்ஷன் பஸ் நிலையம் திரும்பும் போது ஊருக்குச் செல்லும் கடைசி பஸ் போயிருந்த்து. இரவு பன்னிரெண்டு மணியிலிருந்து அதிகாலை மூன்றரை மணி வரை காத்திருக்கவேண்டிய சூழல்.

கடுமையான பசி. டீ சாப்பிடலாமென்றால் கூட பஸ் ஸ்டாண்டிற்குள் ஒரு கடை திறந்திருக்கவில்லை. அங்கு கிடந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பஸ்ஸுக்காக காத்திருக்கத் தொடங்கினோம்.

நண்பர் முருகனிடம் “முருகா கோவணத்தோட கூட இருக்கலாம் போல, பசியோட இருக்கமுடியலையே “ என்றேன் சிரித்துக்கொண்டே, முருகன் கடைவாய்ப்பல் தெரிய சிரித்து விட்டு ”போங்கஜீ பேசாம மதுரையிலேயே சாப்பிட்டுட்டு வந்திருக்கலாம், நீங்கதான் கெடுத்துட்டீங்க. பெருங்குடல் சிறுகுடலை திங்குது” என்றார்.

இப்படியாக பேசிக்கொண்டு நேரத்தை நகர்த்திக் கொண்டிருந்தோம். அன்று இரவு முழுவதும் பசியோடு பஸ் ஸ்டாண்ட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தது மறக்கமுடியாத நினைவு. அன்று தான் பசியின் உண்மையான முகத்தை அறிந்த நாள். அஞ்சு நிமிசம் லேட்டானால், "அம்மா பசிக்குது சீக்கிரம் சோத்தைப்போடு" என்று சொல்வதெல்லாம் சும்மா. உண்மையான பசியொன்று இருக்கிறது. அது வந்துவிட்டால் வெக்கம், மானம் எல்லாம் மறந்து யாரிடமாவது ஒரு வாய் சோறு கேட்கக் கூட தயங்கமாட்டோம் என்பதை அன்றுதான் உணர்ந்து கொண்டேன்.

பின்பும் இது போல சாப்பாடு கிடைக்காமல் பல சூழ்நிலைகளில் பசியோடு காத்திருந்து இருக்கிறேன். இந்த முறை சவுதி திரும்பும்போது ஏர்லங்கா விமானத்தில் பயணம். வீட்டிலிருந்து கிளம்பும்போது கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவுக்கு கொடுத்து விட்டு, ஐம்பது சவுதி ரியாலை மட்டும் வைத்துக்கொண்டேன். ”எல்லாத்தையும் கொடுத்துட்டியேப்பா உன் செலவுக்கு என்ன செய்வே” எனக் கேட்ட அம்மாவிடம், "இதுவே அதிகம் தாம்மா" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். இதற்கு முன்பு பயணித்த இருமுறையும் எட்டு மணி நேரம் சவுதி விமானத்திற்காக இலங்கையில் காத்திருந்திருக்கிறேன். ரூமும், மதியச்சாப்பாடும் கொடுத்து விடுவார்கள்.

அதை நம்பி இந்த முறை இலங்கையில் போய் இறங்கிய உடன் கையில் இருந்த ஐம்பது ரியாலில் நாற்பது ரியாலுக்கு ஊருக்கு போன் பேசிவிட்டு அங்கிருந்த காத்திருக்கும் பகுதியில் உட்கார்ந்து கொண்டு லேப்டாப்பில் பிள்ளைகளின் வீடியோ கிளிப்பிங்க்சை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மதியம் ஒரு மணிக்கு போய் சாப்பாடு கூப்பன் கேட்டால் விமானம் 2 மணி நேரம் முன்னதாக கிளம்புவதால் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். காலையில் விமானத்தில் ஒரு சாண்ட்விச்சும், ஜூஸும் மட்டுமே சாப்பிட்டுவிட்டு பசியோடு காத்திருந்த எனக்கு அவர்கள் சொன்னதை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆற்றமையில் என்ன பேசினாலும் அவர்களிடமிருந்து பதில் இல்லை. மனம் வெறுத்துப்போய் மறுபடியும் வந்து உட்கார்ந்து விட்டேன்.பளபளக்கும் விமான நிலையத்தில் கையில் வெறும் பத்து ரியாலோடு சாப்பிட வழியில்லாமல் இருக்கும் என் இயலாமையை நினைத்து நொந்து கொண்டேன்.

எனது ஊருக்கு பக்கத்து ஊரிலிருந்து அந்த விமானத்தில் வந்திருந்த இருவர் சாப்பாடு கொண்டு வந்திருந்தனர். சப்பாடுங்களேன்ன்னு கேட்டார்களானால் தயங்காமல் வெக்கத்தை விட்டு, கொஞ்சம் கொடுங்கன்னு கேட்டு விட வேண்டியதுதான் என்று காத்திருந்தேன். அவ்வளவு பசி. எனது பார்வையிலேயே நோக்கத்தை புரிந்து கொண்டார்களோ என்னவோ தப்பித்தவறி கூட சாப்பிடுங்களேன்னு ஒரு வார்த்தை கேட்கவில்லை. அவமானத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் விரக்தியுடன் சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

பத்து ரியாலுக்கு ஒரு சின்ன பிஸ்கட் பாக்கெட்டும், வாட்டர் பாட்டிலும் கிடைத்த்து. ரெண்டு மூணு பிஸ்கட்டுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. தண்ணீரை மட்டும் அவ்வப்போது குடித்து வயிற்றை நிறைத்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக விமானம் ஏறி, கொடுத்த உணவை சாப்பிட்ட பின்புதான் பாதி உயிர் திரும்பிய மாதிரி இருந்த்து.

இப்படி ஒவ்வொரு முறையும் பசியோடு காத்திருக்கும் போதும் உணவின் மீதான மதிப்பு கூடிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. ஆரம்ப காலங்களில் அம்மா அடிக்கடி பழைய சோறு சாப்பிடுவதை பார்க்கும்போதெல்லாம். “ஏம்மா இதைப்போய் சாப்பிடுதே, அதுதான் சுடுசோறு இருக்குல்ல” என்று கேட்டால். “இல்லப்பா நேத்து கொஞ்சம் மிஞ்சி போச்சி, தூரப்போட மனசில்ல” என்பாள். இப்போதெல்லாம் அந்த பழக்கம் என்னுள்ளும் ஒட்டிக்கொண்ட்து. முடிந்த அளவு மீதம் ஆக்காமல் சாப்பிடுவது, மீந்தாலும் அதை ஃப்ரிஜ்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்திக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் குப்பையில் போடும் போதும் இன்னொருவருக்கான உணவுவை நாம் வீணாக்குகிறோம் என்ற குற்ற உணர்வு ஏற்படுவதால், இப்போதெல்லாம் முடிந்தவரை வீணாக்குவதில்லை.

என் அம்மாம்மா எப்போது பிரார்த்திக்கும் போதும் “எம்புள்ளைகள் எங்கே போனாலும் பசி, பட்டினி இல்லாமல் பார்த்துக்கோ ஆண்டவா” என்று வேண்டிக்கொள்வாள். நல்ல காசு பணத்தை கொடு என்று வேண்டிக்கொள்ளாமல் இப்படி வேண்டிக்கொள்வதை வாழ்க்கை கற்றுக்கொடுத்து இருக்கிறது போலும்.

என்னதான் சம்பாதித்தாலும். ஒரு வேளை உணவு கிடைக்கவில்லை எனில் என்ன பாடு படுகிறோம். பல நாட்கள் உணவே கிடைக்காமல் எலும்பும் தோலுமாக கண்ணில் பஞ்சடைந்து போய் பசியுடன் காத்திருக்கும் மக்களை எண்ணும் போது உண்மையிலேயே கண்ணில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை.

ஒவ்வொரு முறை பசியோடு காத்திருக்கும் போதும் மனதில் ஏற்படும் வைரக்கியம் ஒன்றே ஒன்றுதான். பசித்திருப்பவர்களின் பசியைப் போக்குவதை தவிர வாழ்வில் சாதிக்க பெரிதாக ஒன்றும் இல்லை என்பதுதான் அது.

"காத்திருத்தல்" என்ற தலைப்பில் இந்த தொடர்பதிவை ஆரம்பித்த அண்ணன் மாதவராஜ் அவர்களுக்கும், எழுத அழைத்த நண்பர் செ.சரவணக்குமார் அவர்களுக்கும் நன்றிகள்.

இதை தொடர விரும்பும் நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று தொடர வேண்டுகிறேன்.


38 comments:

Rathnavel said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ.அக்பர்,
கையில் போதுமான பணம் இருந்தும் சூழ்நிலை காரணமாக சாப்பிட எதுவுமே கிடைக்காமல் சுமார் இருபது மணிநேரம் நானும் ஒருமுறை பசியோடு அலைந்து இருக்கிறேன்..! தங்கள் உணர்வுகளை வார்த்தைகளாக வடித்துள்ளீர்கள். மிக அருமை சகோ.

செ.சரவணக்குமார் said...

மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் அக்பர். மனமார்ந்த பாராட்டுக்கள்.

அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி.

ParthaSarathy Jay said...

அக்பர்,
பசியோடு தான் இதை படிக்க வேண்டி இருக்கிறது...

கையில் காசிருந்தும் கடைகள் திறக்க காத்திருக்கிறேன்...

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

பசியின் கொடுமையை எழுத்தின் மூலம் அழகாக சொல்லி இருககீர்கள் சகோ.பாராட்டுக்கள்.

நீண்ட நாட்களுக்குப் பின் பதிவு.

நேசமித்ரன் said...

நல்லாருக்கு மக்கா !

இராமசாமி said...

நல்லா எழுதிருக்கீங்கண்ணே.. எப்படி இருக்கீக....

ரிஷபன் said...

ஒவ்வொரு முறை பசியோடு காத்திருக்கும் போதும் மனதில் ஏற்படும் வைரக்கியம் ஒன்றே ஒன்றுதான். பசித்திருப்பவர்களின் பசியைப் போக்குவதை தவிர வாழ்வில் சாதிக்க பெரிதாக ஒன்றும் இல்லை என்பதுதான் அது.

பசித்தவனுக்கு சோறு போட்டு பார்க்கிற சுகமே தனிதான்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உணர்வுகள் என்றுமே உண்ணதமானவை

NIZAMUDEEN said...

மனம் நெகிழ வைக்கின்ற அனுபவங்கள்.

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரத்னவேல் சார்.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சரவணா

உங்க அழைப்புக்கு மிக்க நன்றி.

அடுத்த பதிவு எப்போ. வெயிட்டிங்.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சகோ ஆஷிக்,

நம்மில் பலருக்கு இது போன்ற அனுபவம் நிறையவே கிடைத்திருக்கும். பசிதான் சகோ நம்மை இயக்குது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பார்த்த சாரதி,

//அக்பர்,
பசியோடு தான் இதை படிக்க வேண்டி இருக்கிறது...

கையில் காசிருந்தும் கடைகள் திறக்க காத்திருக்கிறேன்...//

கஷ்டம்தான்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க சகோ ஆயிஷா அபுல்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க நேசண்ணே,

வருகைக்கும் ஊக்கப்படுத்துவதற்கும் மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க இராமசாமி அண்ணே,

நல்லாயிருக்கோம். நீங்க நலமா, ரொம்ப பிஸி போல இருக்கு :)

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ரிஷபன்

//பசித்தவனுக்கு சோறு போட்டு பார்க்கிற சுகமே தனிதான்.//

உண்மைதான்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க தல சுரேஷ்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க நிஜாம்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஓலை said...

So nice. Naanum rasam soru thaan.

Nalla ezhthiyirukkeenga nanbare!

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஓலை

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Riyas said...

பதிவு நல்லாயிருக்கு அகபர்

ஈத் முபாரக

அமுதா கிருஷ்ணா said...

உங்கள் ஏர்போர்ட் அனுபவம் மிக பாவமாய் இருந்தது. நன்கு எழுதி இருக்கின்றீர்கள்.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ரியாஸ்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சிநேகிதன் அக்பர் said...

வாங்க அமுதா கிருஷ்ணா

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

க.பாலாசி said...

பசி கற்றுக்கொடுக்கும் பாடம் வாழ்நாளுக்கும் மறக்கமுடியாது அக்பர்.. நான் உணர்ந்திருக்கிறேன்.. வறுமையின் மூலம் ஒருநாள்.. போலவே ரசம் சாதத்துக்கும், அப்பளத்திற்கும் நானும் ஓர் அடிமைதான்.. ஒருகடி அப்பளம் ஒருபிடி சோறு...இந்த ரகம்...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...

சிநேகிதன் அக்பர் said...

வாங்க பாலாசி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மாதேவி said...

பெருநாள் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

பசிக் கொடுமை பெரிசுதான். ஆனா, அதையும் தாங்கிக்கப் பழகிக்கிறோமே!!

(வந்து, இந்தச் சூழ்நிலைகளில் பெண்களா இருந்தா என்னச் செஞ்சிருப்பாங்கன்னு யோசிச்சேன்.. பெண்கள் சமயோசிதமா, இந்த மாதிரிப் பயணங்களில் தேவைப்படும்னு ஒரு பிஸ்கட் பாக்கெட்டாவது கைப்பையில வச்சிருப்பாங்க!! ஹி..ஹி..)

சிநேகிதன் அக்பர் said...

வாங்க மாதேவி

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

வாங்க ஹுஸைனம்மா

நீங்க சொல்றது சரிதான் :)

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவி.கண்ணன் said...

அருமையான பதிவு.

// ஒவ்வொரு முறையும் குப்பையில் போடும் போதும் இன்னொருவருக்கான உணவுவை நாம் வீணாக்குகிறோம் என்ற குற்ற உணர்வு ஏற்படுவதால், இப்போதெல்லாம் முடிந்தவரை வீணாக்குவதில்லை. //

நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். நாக்கைப் போட்டு நக்காதா குறையாகத்தான் என் சாப்பாட்டுத் தட்டுகள் சாப்பிட்ட பிறகு இருக்கும்.

asiya omar said...

அருமையான தலைப்பு அக்பர்,காத்திருத்தல் என்பது தவம் என்ற தலைப்பில் உங்களின் கண்ணோட்டம் (பசியைப் பற்றி)மனதை தொடுகிறது.

சீனுவாசன்.கு said...

அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

எம் அப்துல் காதர் said...

அண்ணே!! ரெண்டு மூணு தடவை (செல்லில்)இந்த பதிவைப் பற்றி ரொம்ப சிலாகித்துச் சொன்னீர்கள். ஆபீசில் ப்ளாக் திறக்க கட்டுப்பாடு வந்து விட்டதாலும், வீட்டில் போய் எழுத நேரமில்லாததாலும் இவ்வளவு தாமதம் அண்ணே!

அண்ணே அண்ணே என்று சொல் றேனே என்று திரும்பி பார்க்காதீங்க!! எழுத்தில் நீங்க எனக்கு அண்ணன் தான். உங்கள் மனதை திறந்து காட்டிய நெகிழ்வான பதிவு. ஏற்கனவே சரவணன் அழைத்தாலும், நானும் இதை தொடர்வேன் தல!

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails