Monday, April 25, 2011

சவுதியில் ஒரு மழைக்காலம்!

சென்ற வாரம் எனது பகுதியில் நல்ல மழை. சவுதியில் மழை பெய்வதென்பது மிக அபூர்வமான விசயம். கடும் குளிரும் , சுடும் வெயிலும் மட்டுமே பருவகாலங்களாக கொண்ட சவுதியில் வருடத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்யும். அந்த மகிழ்ச்சி சென்ற வாரம் கிடைத்தது.

மழை ஒரு விருந்தாளி போல. மேம்போக்காக வந்து விட்டு சில மணித்துளிகளில் செல்லும் மழையை யார் விரும்புவர்? அது போலவே நச நச வென்று சில நாட்கள் தொடர்ச்சியாக பெய்யும் சாரல் மழையையும். ஆனால் அன்று பெய்த மழை அனைவருக்கும் பிடித்த விருந்தாளியாய் சில மணி நேரங்கள் தொடர்ச்சியாக பூமி குளிரும் வரை பெய்து அனைவரின் மனதையும் ஈரமாக்கிச் சென்றது.

அன்று மழை, ஊரையே குத்தகைக்கு எடுத்துக் கொண்டு கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தது. எல்லோரும் அவரவர் வசிப்பிடங்களில் முடிங்கிப்போயிருந்தனர். ஆனாலும் மழை நேரங்களில் யாருக்குமே கோபம் வருவதில்லை போலும். அந்த நேரங்களில் காணும் மனிதர்கள் யாவும் மிகவும் சாந்தமாக, அதுக்கும் முன் எப்போதும் இல்லாத அழகைக்கொண்டிருக்கிறார்கள். சுடு சொற்கள் பேசும் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கூட அன்று குளுமை கலந்தே வருகிறது. மழை புற வெப்பத்தை மட்டுல்ல மனதின் அக வெப்பத்தையும் தனித்து விடுகிறது போல‌.

கடையின் கண்ணாடி வழியே மழையை ரசித்துக்கொண்டிருந்த போதே ஊரிலிருந்து திரும்பும் போது சந்தித்த ஊர் மழை ஞாபகத்திற்கு வந்தது.ஊர் திரும்பும் இரவில் சில பொருட்கள் வாங்குவதற்காக ஜங்ஷனுக்கு செல்ல வேண்டியிருந்தது.மழை நேரத்தில் வெளியே போக வேண்டாம் என வீட்டினர் தடுத்தும் நான் கிளம்பி விட்டேன். ஊரிலிருப்பவர்களுக்கு எங்கு தெரியப்போகிறது அது பல மாதங்கள் வெயிலில் வாடப்போவதை நினைத்து எனக்கு ஏற்பட்ட தாகம் என்பது.

மழைக்கும் நமக்குமான நெருக்கம் யாரிடமும் சொல்லிவிட முடியாத ஒன்று. அப்படியொரு நெருக்கத்தை அன்று நான் அனுபவித்தேன். அதுவும் துணைக்கு யாரும் வராமல் மழை கூட நாம் செல்லும் போது இன்னும் அதிக நெருக்கத்தை உணரமுடியும். அதனுடன் பேச முடியும் . சண்டையிட முடியும். மழையின் துளிகளை கால்களால் பற்றிக்கொண்டே நடப்பதை உணரவும் முடியும்.

ஒரு வழியாக தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு பாஸ் ஸ்டாண்ட் திரும்பும் போது, மழை ஊரின் அழுக்குகளையெல்லாம் கரைத்து எடுத்து கொண்டு காலுக்கு அடியில் ஓடிக்கொண்டிருந்தது. ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டதால் ஒரே கூட்டம். ஒவ்வொருவரும் கடைசி பஸ் பிடித்து வீடு திரும்பும் அவசரத்தில் இருந்தார்கள். நானும் கூட்டத்தோடு ஒரு பஸ்ஸில் ஏறி ஜன்னல் ஓரமாக நின்று கொண்டு தெரு விளக்குகளின் சோடிய வெளிச்சத்தில் புத்தம் புதிதாக மாறியிருந்த ஊரின் அழகை ரசித்துக்கொண்டே வீடு திரும்பினேன். நாடும் திரும்பினேன்.

இப்போதும் மழை விட்டபாடில்லை எனக்கு கடை அடைக்கும் நேரம் ஆகிவிட்டது. எப்போதும் இரவு 11 மணிக்கு கடை அடைத்தவுடன் குப்பூஸ் (ரொட்டி மாதிரி) வாங்கிக்கொண்டு ரூமிற்கு சென்று குழம்பை சூடு வைத்து சாப்பிடுவது வழக்கம். நேரம் ஆகியதால் பசி வயிற்றைக்கிள்ளியது. தெரிந்தவர்கள் யாரும் காரில் வந்தால் வீட்டுக்கு சென்று விட காத்திருந்தபடியே ஊர் நினைவுகளில் மூழ்கினேன்.

மழை பெய்யும் இரவு நேரங்களில் வீட்டில் மதியம் வைத்த சோறு இருந்தாலும் அப்பா சுடுசோறுதான் ஆக்கச் சொல்லுவார். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் உண்மையான ருசியை மழை நேரங்களில் மட்டுமே முழுவதுமாக அறிய‌முடிவது நான் அடிக்கடி வியக்கும் விசயங்களில் ஒன்று. அதுவும் மழையில் உணவை சுடச் சுட சாப்பிடுவது போன்ற மகிழ்ச்சியும் திருப்தியும் வேறெதிலும் இல்லை.

பின்பு ஊடுருவும் குளிரினூடே கொடுக்கும் துணியை போர்த்திக்கொண்டு கதகதப்போடு படுத்துக்கொள்ளும் போதுதான் வீடு என்ற ஒன்றின் அருமை புரியும். அதுவரையில் நாம் கவனம் கொள்ளாமல் அலட்சியப்படுத்திருந்த வீடு நம்மை அதோடு சேர்த்து அரவணைத்து அதன் அவசியத்தை அன்று முழுவதும் உணர்த்திக்கொண்டே இருக்கும். கூடவே வீடில்லாமல் ரோட்டரங்களில் படுப்பவர்களின் நினைவும் வந்து போகும்.

நினைவலைகளில் இருந்து மீட்டெடுக்கும் விதமாக "ஸலாம்" சொல்லி உள்ளே வந்தார் தெரிந்த சவுதி ஒருவர். அவருடைய லேப்டாப்பை கொடுத்து விட்டு, வீட்டில் எனை விடச் சொல்லி கேட்டுக்கொண்டு, கடை சாத்தி அவர் வண்டியில் ஏறிக்கொண்டேன்.

போகும் போதே நம்மூர் பேச்சுவழக்கில் "மழை பெய்தால் இங்கு ரொம்ப கஷ்டம் இல்ல... பாருங்க ரோடெல்லாம் தண்ணி கட்டி , வண்டியெல்லாம் ஒரே சகதி" என்றேன் அதற்கு அவர் "ஹே.... அதெல்லாம் ஒன்னும் இல்லை. மழை இறைவனோட அருட்கொடை அது வரும் போது சந்தோசமா வரவேற்கணும். முகம் சுளிக்க கூடாது. வண்டி என்ன பெரிய வண்டி" என்றார்.

"இல்லை எங்க ஊரில் பெரு நகரங்களில் மழை வந்தால் தெருவெல்லாம் தண்ணீர் நிறைந்து அன்றாட வாழ்க்கை முடங்கிவிடும் அதான்" என்றதற்கு அவர் கேட்டார் "உங்க ஊரில்தான் வருஷாவருஷம் மழை வரும்னு தெரியும்ல அப்ப ஏன் அதுமாதிரியான இடத்தில் கட்டடங்களை கட்டினாங்க" என்றார். இதுக்கு மேல ஏரியில வீடு கட்டின விசயத்தை எப்படி சொல்ல என யோசித்துக்கொண்டிருக்கும் போதே நல்லவேளை வீடு வந்து விட்டது. இறங்கிக்கொண்டேன்.

ரூமில் சென்று சாப்பிட்டுவிட்டு ஏசி கவரில் விழும் மழைத்துளிகளின் ஓசையை கேட்டுக்கொண்டே உறங்கிப்போனேன். மழை காலத்து உறக்கம் பற்றிகேட்கவா வேண்டும் மிக ஆழ்ந்த அருமையான உறக்கம் அது.

மறுநாள் எழுந்து கடை திறக்கவந்தேன். நேற்று பெய்த மழையின் சுவடு ஆங்காங்கே தெரிந்தது. ரோடுகள் எப்போதும் போல விரைவில் காய்ந்து போயிருந்தன. கடை முன் வந்து பூட்டை தொடும் போது மழையின் குளிர் போகாமல் அதில் அப்பியிருந்தது. கெட்டியாக பிடித்துக்கொண்டு அதன் குளிரை கைகளின் வழியாக ஊடுருவ விட்டு சிறிது நேரம் திறக்காமல் நின்றிருந்தேன்.

32 comments:

asiya omar said...

நல்ல பகிர்வு சகோ,அருமையான எழுத்து நடை.நாங்களும் மழைக்காலத்தை அனுபவித்த சுகம்...நீண்ட நாள் கழித்து வந்த மழை போல உங்கள் பகிர்வும்..

ராம்ஜி_யாஹூ said...

மழை புகைப்படங்கள் எங்கே

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மழையில் நனைகையில் ஏற்படும் இனம்புரியாத ஒரு உணர்வு இந்த கட்டுரையை படிக்கும்போது. இந்த தருணத்தில் நான் உன்கூட இல்லையே என்ற ஏக்கம். சவுதியில் மழையை நாம் அனுபவித்த நாட்கள் நெஞ்சில் பசுமையாய். நல்ல பகிர்வு அக்பர்.

சேட்டைக்காரன் said...

//மழை ஒரு விருந்தாளி போல. மேம்போக்காக வந்து விட்டு சில மணித்துளிகளில் செல்லும் மழையை யார் விரும்புவர்? //

சரியாகச் சொன்னீங்கண்ணே, இங்கே சென்னையில் அப்படித்தான் மழை பெய்து இன்று உஷ்ணத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது.

//மழை புற வெப்பத்தை மட்டுல்ல மனதின் அக வெப்பத்தையும் தனித்து விடுகிறது போல‌.//

லயித்து, ரசித்து எழுதியிருக்கிறீர்கள். உங்களோடு ஒரு குடையில் மழையில் நடந்து போனது போல உணர முடியுது. சூப்பர்...!

வானம்பாடிகள் said...

மழையின் சுகம் சுமந்த எழுத்துகள்:)

Rathnavel said...

மழையே தனி சுகம் தான்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஹே.... அதெல்லாம் ஒன்னும் இல்லை. மழை இறைவனோட அருட்கொடை அது வரும் போது சந்தோசமா வரவேற்கணும். முகம் சுளிக்க கூடாது. //

என்ன ஒரு அற்புதமான வார்த்தைகள்

ஹேமா said...

அரேபிய நாடுகளில் மழை என்பது பெரிய விஷயம்போல !

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு அக்பர்

thiru said...

மழைக்கும் நமக்குமான நெருக்கம் யாரிடமும் சொல்லிவிட முடியாத ஒன்று. அப்படியொரு நெருக்கத்தை அன்று நான் அனுபவித்தேன். அதுவும் துணைக்கு யாரும் வராமல் மழை கூட நாம் செல்லும் போது இன்னும் அதிக நெருக்கத்தை உணரமுடியும். அதனுடன் பேச முடியும் . சண்டையிட முடியும். மழையின் துளிகளை கால்களால் பற்றிக்கொண்டே நடப்பதை உணரவும் முடியும்...

றொமப்வும் உண்மை அக்பர்.ஊர் விட்டு தூரத்தில் இருக்கும்போது இயற்க்கையும் ,நம் படுக்கை போன்ற விஷயங்களுக்கு கூட உயிர்ம் ,நம் துணை என்ற உணர்வும் வந்துவிடும். மிகவும் ரசித்தேன்.

அமுதா கிருஷ்ணா said...

அருமையான பதிவு

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஆசியா உமர்

நன்றி ராம்ஜி. புகைப்படம் ஏதும் எடுக்கவில்லை.

நன்றி மாப்பு ஸ்டார்ஜன். இன்ஷா அல்லாஹ் நீயும் சீக்கிரம் இங்கு வருவாய்.

ஹுஸைனம்மா said...

வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும்!! அதுபோல, மழை அபூர்வமான அங்குதான் மழை வரவேற்கப்படுகிறது.

ஆனால், இப்போதைய குளோபல் வார்மிங் காரணஙக்ளாலோ என்னவோ, அரபு நாடுகளிலும் மழை அடிக்கடி பெய்கிறது, சில சமயம் வெள்ளமாக வரும் அளவுக்குக் கூட!!

மஸ்கட், ஷார்ஜா, ஜித்தா மழை வெள்ளங்கள் மறக்கமுடியுமா??

அமைதிச்சாரல் said...

அபூர்வமா கிடைக்கும்போதுதான் மழையும் அழகா,ரசிக்கும்படி இருக்கு..

செ.சரவணக்குமார் said...

ரஹிமா வரைக்கும் சாரல் அடிக்குது. வாசிக்க குளு குளுன்னு இருக்குற எழுத்து.. அருமை அக்பர்.

யோவ்.. கேப் விடாம தொடர்ந்து எழுதுங்க. அப்புறம் மெய்ல் பண்ணமாட்டேன், நேர்ல வந்து திட்டுவேன்.

ஸாதிகா said...

//பெய்த மழையின் சுவடு ஆங்காங்கே தெரிந்தது. ரோடுகள் எப்போதும் போல விரைவில் காய்ந்து போயிருந்தன. கடை முன் வந்து பூட்டை தொடும் போது மழையின் குளிர் போகாமல் அதில் அப்பியிருந்தது. கெட்டியாக பிடித்துக்கொண்டு அதன் குளிரை கைகளின் வழியாக ஊடுருவ விட்டு சிறிது நேரம் திறக்காமல் நின்றிருந்தேன்.//ஒரு படைப்பாளிக்கே உரித்தான வர்ணனை ஜாலம்.

ரசித்து எழுதி இருக்கீங்க அக்பர்.

பாச மலர் / Paasa Malar said...

சவூதி மண்ணில் நம் மண்வாசம் சந்திக்க வாய்த்தது - சந்தோஷம்...
அழகான மழைதான் இது...

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேட்டை

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரத்னவேல் சார்

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல சுரேஷ்‌

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஹேமா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நேசன் அண்ணா

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா கிருஷ்ணா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமைதிச்சாரல்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணா. தொடர்ந்து எழுதுகிறேன் :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஸாதிகா

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாசமலர். நீங்களும் சவுதியில்தான் இருக்கிறீர்கள் போலும் :)

அன்புடன் அருணா said...

ம்...மழை!!மழை!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மழையில் நனைந்த மாதிரி ஒரு ஜில் பதிவு அக்பர்..:)

S.Menaga said...

சில்லுன்னு ஒரு அழகான பகிர்வு!!

பா.ராஜாராம் said...

அடேங்கப்பா!

மழை பெய்து கொண்டிருக்கும் போது நெகிழும் மனசு போல இளகி ஓடுதே எழுத்து. ரொம்ப நல்லா வந்திருக்கு அக்பர். :-)

எம் அப்துல் காதர் said...

// ஆனாலும் மழை நேரங்களில் யாருக்குமே கோபம் வருவதில்லை. சுடு சொற்கள் பேசும் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கூட அன்று குளுமை கலந்தே வருகிறது. மழை புற வெப்பத்தை மட்டுல்ல மனதின் அக வெப்பத்தையும் தனித்து விடுகிறது போல‌.//

ஆஹா அனுபவித்து எழுதிய உண்மை வார்த்தைகள் அக்பர். அந்த குளிர்ச்சி படிக்கும் போதே உடம்போடு ஒட்டிக்கொண்ட மாதிரி ஒரு சுக அனுபவ பகிர்வு!! தொடர்ந்து ஏன் எழுத மாட்டேங்குறீங்க!!

நாடோடி said...

நான் அங்க‌ இருந்த‌ப்பவும் ஒரு த‌ட‌வை ம‌ழை வ‌ந்த‌து அக்ப‌ர்.. அன்று முழுவ‌தும் நானும் க‌ண்ணாடி வ‌ழியாக‌ ம்ழையை ர‌சித்தேன்..

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேனக்கா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேனகா

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பா.ரா அண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல அப்துல்காதர்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டீபன்.

அன்புடன் மலிக்கா said...

மழைப்பதிவு மிக அருமை

சிநேகிதன் அக்பர் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails