சேக் மைதீன் ஊருக்கு சென்று இரண்டு மாதம் முடியப்போகிறது. இதோ நேற்றுதான் ஏர்போர்ட் சென்று அழைத்து வந்தது போல நினைவு அதற்குள் ஐந்து வருடம் முடிந்து விட்டது. ஒன்றாகவே சமைத்து, ஒன்றாக சாப்பிட்டு, ஒரே ரூமில் நண்பர்களுடன் உறங்கிய அந்த இனிய நாட்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.
நெல்லையில் போதுமான வருமானம் இல்லாததால் நான் சென்னை வந்து பணிபுரிந்து நான்காண்டுகள் கடந்த நிலையில் தம்பி சவுதி இருந்து விசா அனுப்பினான்.அதில் சவுதி வந்து கம்ப்யூட்டர் ஷோரூமில் பணியில் சேர்ந்தேன்.
வந்து ரெண்டு வருஷம் கழிஞ்ச பிறகு ஊருக்கு போக ஓனரிடம் கேட்டால் ஆள் கிடைக்கட்டும் பிறகு போகலாம் என்றார். இவரு ஆள் பார்த்து நாம என்னிக்கு போறது என்ற நினைப்புல இருந்தப்ப தான் எனக்கு ஒரு யோசனை தோணிச்சு. "பேசாம நம்ம ஆளு ஒருத்தனை கொண்டு வந்தா என்ன? ஊருக்கு போயிட்டு வந்த பிறகும் ஒத்தாசையா இருப்பான்ல " என எண்ணி ஓனரிடம் விசா கேட்டேன். அவரும் எடுத்துத்தந்தார்.
கூடப்படிச்சவனை கூப்பிட்டால் அவன் வரமுடியாத சூழல். எனக்கு சேக் மைதீன் ஞாபகம் வந்தது. ஆனால் அவன் பி எஸ் சி கெமிஸ்ட்ரி இங்க வந்து எப்படி சமாளிப்பான்? என குழப்பமாக இருந்தது. அதனாலென்ன ஒரு மூணு மாசம் ஹார்டுவேர் டிரைனிங் ஊர்ல எடுத்துட்டா போவுது என எண்ணி ரிஸ்க் எடுக்க தயாரானேன். மாப்ளையையும் சும்மா சொல்லக்கூடாது அவனும் சரின்னு சொல்லி படிக்க ஆரம்பிச்சான்.
ஒரு வழியா மூணுமாசம் கழிச்சு சவுதி வந்து சேர்ந்தான். வந்த ரெண்டு நாள்ல அவனிடம் ஊரில் என்ன சொல்லிக்கொடுத்தாங்கன்னு கேட்டு நானும் சில புதிய விசயங்களை சொன்னேன். ஏன்னா ஓனர் கேட்கும் போது எதுவும் தப்பா சொல்லிடக்கூடாதுல்ல. எல்லா கேள்விக்கும் டாண் டாண்னு பதில் சொன்னான். நானும் ரூமில் கிடந்த கம்ப்யூட்டரை பிரித்து காட்டி எப்படி மாட்டுவது என்பது முதற்கொண்டு, என்னென்ன பார்ட்ஸ் மார்க்கெட்டில் இருக்கிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தேன். ரெண்டே நாளில் ஹார்டுவேர் கற்ற பெருமை பெற்றான் சேக் மைதீன்.
மறுநாள் ஓனர் முன் ஆஜர் படுத்தினேன். அவர் வேறொன்னும் கேட்கலை பாஸ்! டிவைஸ் மேனஜருக்கு எப்படி போகனும்னு கேட்டார். நம்மாளும் ரொம்ப ஈசியா "மை கம்ப்யூட்டரை ரைட் கிளிக் பண்ணி ப்ராப்பர்டீஸ் போய் அதுல ஹார்டுவேர் டேப்பை கிளிக் பண்ணி டிவைஸ் மேனேஜர் பட்டனை தட்டணும்" அப்படின்னான். எனக்கு மனசுக்குள்ளே சந்தோசம் "நண்பேண்டா" என நினைத்துக்கொண்டு நிற்கும் போது அடுத்த ஏவுகணையை வீசினார் ஓனர் " எங்கே போய் காட்டு " . நம்மாளும் தைரியமா மௌஸை பிடிச்சு மை கம்ம்ப்யூட்டர் பக்கம் நகர்த்தினான் நகர்த்தினான் நகர்த்திக்கொண்டே இருக்கான். அவன் நடுவுக்கு இழுத்தால் மௌஸ் கரைக்கு ஒதுங்குது. எனக்கு பயங்கர ஷாக்.
ஓனர் ஒற்றை வரியில் சொன்னார் "இவனுக்கு கம்ப்யூட்டர் தெரியாது". வந்த புதுசில்லையா அதனால கொஞ்சம் நெர்வசா இருக்கான் இன்னும் ஒரு வாரத்தில் சரியாகிடுவான் என கொஞ்சம் நாளை நீட்டினேன். அவரும் பார்க்கலாம் என சொல்லிட்டு போயிட்டார் . நான் சேக்கிடம் கேட்டேன். ஆமா ஊர்ல எல்லாம் படிச்சேன்னு சொன்னிய? ஆமா மக்கா எல்லாம் படிச்சேன் எதைக்கேட்டாலும் சொல்லுவேன். ஆனா கம்ப்யூட்டரை ஆபரேட் பண்ண கத்து தரலை எல்லாம் தியரிதான்னு குண்டைத்தூக்கி போட்டான்.
இந்த இடத்தில் சேக் மைதீனைப் பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். சேக் மைதீன் எனக்கு நண்பன் மட்டுமல்ல உறவினரும் கூட. எங்கள் குடும்பத்துல நாங்கதான் முதல் தலைமுறையா பட்டப்படிப்பு வரைக்கும் முடித்தவர்கள். எல்லோரும் படிப்புல சாதனை பண்ணுவாங்க நாங்க படிச்சதே சாதனைதான்! இன்னும் சொல்லப்போனால் ஓரளவு நல்லா படிச்சதுனாலதான் போனப்போகுது ஆசைப்படுறாங்க படிச்சிட்டு போகட்டும்னு வீட்ல விட்டாங்க. சின்ன வயசிலேயே பல சோதனை சமாளித்து பழகியிருந்ததால் இதையும் இன்னொரு சவாலாக எண்ணி சந்திக்க முடிவு செய்தோம்.
அந்த இடைப்பட்ட ஒரு வாரத்தில் சேக் இன்னும் கொஞ்சம் தேறியிருந்தது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எப்படியும் சாதித்துக்காட்டுவது என்ற நம்பிக்கையில் செயல்பட்டான்.அவன் மேல் எனக்கு அதைவிட நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் அவனிடம் நான் கண்டிப்புடனே இருந்தேன். பின்னே பயம் இருந்தால்தானே எதையும் கற்றுக்கொள்ள முடியும்.
ஒரு வழியாக இரு மாதங்கள் கழிந்தபோது ஓரளவுக்கு கஷ்டமரை சமாளிக்க தெரிந்திருந்தான் அரபியும் ஓரளவு கற்றிருந்தான். இங்கு ஒரு முக்கியமான விசயம் சொல்லியாக வேண்டும். இங்கு வருபவர்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை மொழிதான். குறைந்தது ஆறுமாசம் ஆகும் மொழி கற்க.சேக் மைதீன் கல்லூரியிலேயே அரபி எழுத வாசிக்க கற்றிருந்ததால் அவனுக்கு பேசக்கற்றுக்கொள்வது கொஞ்சம் எளிதாக இருந்தது.
ஒரு வழியாக நானும் ஊர் போய் வந்தேன். அவன் இப்போது முழுவதுமாக தேறியிருந்தான். அதன் பின் எல்லாமே எளிதாகிப்போனது. ரெண்டு வருடம் தனியாக வேலை பார்த்து சலித்து போயிருந்த எனக்கு ஊர் திரும்பிய பின் சேக் மைதீனுடன் சேர்ந்து வேலை பார்ப்பது இனிமையாகவும் உற்சாகமாகவும் இருந்தது.
எனது தம்பி எனக்கு விசா அனுப்பியதாக சொன்னேனல்லவா அவனும் மற்றொரு தம்பியும் எங்களுக்கு அருகில் உள்ள ஊரில்தான் வேலை செய்தார்கள். குடும்பத்தை பிரிந்திருக்கும் எங்களுக்கு வாரா வாரம் வெள்ளியன்று ஒன்று கூடுவதுதான் ஒரு பெரிய ஆறுதலாகவும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் இருந்தது. எங்களிடத்தில் சேக் மைதீன் எப்போதுமே பிரியமாக இருப்பான். அதுவும் என் தம்பிகளிடத்தில் கூடுதல் பாசம்.
இங்கணம் சவுதி வாழ்க்கை கழிந்து கொண்டிருந்த நிலையில்தான் எங்கள் கடையில் ப்ராட்பாண்ட் கனெக்ஷன் வந்தது. ஆரம்பத்தில் தமிழ் செய்திகளை மட்டும் படித்துக்கொண்டிருந்த எங்களுக்கு தமிழ்மணம் அறிமுகம் ஆனது. குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே கொடுக்கும் இணைய இதழ்களுக்கு மத்தியில் வலைப்பூக்களில் வரும் பகிங்கிரமான கருத்துக்களும் வெளிப்படையான விவாதங்களும் எங்களை மிகவும் கவர்ந்தன.
ஆரம்பத்தில் பின்னூட்ட பதிவராக இருந்த நாங்கள் முரளிக்கண்ணன் கோவிக்கண்ணன் ஆகிய இரு அண்ணன்கள் தந்த ஊக்கத்தால் பதிவெழுதி பார்க்கும் முடிவுக்கு வந்தோம். சேக் மைதீன் ஸ்டார்ஜன் ஆனான். நான் சிநேகிதன் ஆனேன். (வரலாறு ரொம்ப முக்கியம்!)
அதன் பிறகு நவாஸுதீன், பா.ரா. அண்ணன், செ.சரவணகுமார், நாடோடி ஸ்டீபன், எம்.அப்துல்காதர், இளம் தூயவன், ராஜவம்சம் என சவுதியில் எங்கள் நட்பு வட்டம் பெருகியது. அது போல் வலையுலகிலும் நட்பு பெருகியது.
இந்த காலகட்டத்தில் சேக் மைதீன் இணையத்தில் கலக்கத் துவங்கியிருந்தான். இணையத்தில் மட்டுமல்ல வேலையிலும் சிறந்து விளங்கினான். அதன் பிறகு அவனும் நானும் மாறி மாறி ஊர் சென்று வந்தோம் எந்த பிரச்சனையும் இல்லாமல். இப்படியாக நான்காண்டுகள் கழிந்தன.
ஆனால் அதன் பின் வேறொரு புதிய பிரச்சனை உருவாகியிருந்தது. எங்கள் ஏரியாவைச் சுற்றி புதிது புதிதாக பெரிய ஷாப்பிங் மால்கள் வந்துகொண்டிருந்ததால் எங்களுக்கு வேலை குறைய ஆரம்பித்திருந்தது. சர்வீஸில் வருமானம் வந்தாலும். அவர்கள் போடும் ஆஃபரில் எங்கள் சேல்ஸ் படுத்துக்கொள்ள துவங்கியிருந்தது. எப்படியோ தாக்கு பிடித்து கடை நடத்தினாலும் ஓனரால் இரண்டு பேரை வைத்து சமாளிக்க முடியாத நிலை.
சேக் மைதீனும் குடும்பஸ்தனாகி விட்டான். தற்போதைய வருமானம் போதாத சூழல். ஓனரிடம் கூடுதலாக கேட்டால் இப்போதுள்ளதை கொடுக்கவே ரொம்ப கஷ்டம் இதுக்கு மேல் எப்படி கூட்ட முடியும் என மறுத்துவிட்டார் .
நாங்கள் இருவரும் நண்பர்களுடன் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். இந்த வேலையிலிருந்து விலகி ஊருக்கு சென்று புதிய விசாவிலோ அல்லது ஊரிலேயே நல்ல வேலை கிடைத்தாலோ அதில் சேர்ந்துகொள்வது என்று முடிவெடுத்தோம். அதன்படி தற்போது சேக் ஊருக்கு சென்றிருக்கிறான்.
ஐந்து வருட அனுபவத்துடன் அரபியும் சரளமாக தெரிவதால் இங்கு புதிய வேலை கிடைப்பது அத்தனை கடினம் கிடையாது. எவ்வளவோ சவால்களை சந்தித்தவனுக்கு இது மற்றுமொரு சவால் அவ்வளவே.
இன்ப துன்பங்களில் ஒன்றாக இருந்தவன் இப்போது பிரிந்து ஊருக்கு சென்றது மனதுக்கு மிக கஷ்டமாக இருந்தாலும் முன்னேற்றத்தின் பொருட்டு பிரிவென்பது தவிர்க்க முடியாத ஒன்று என மனதை தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இப்படியொரு வாழ்வை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் இந்த நேரத்தில் வருங்காலமும் இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துகள் சேக் மைதீன்.
Monday, March 21, 2011
Tuesday, March 8, 2011
பா.ரா இல்லத் திருமணத்தில் பதிவர்கள்:ஆல்பம்.













வாசு : அதுக்கு முதல்ல எழுதனும் தம்பி...




சிவாஜி சங்கர் : அண்ணே அது திறந்துதான் இருக்கு. முதல்ல நீங்க கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க...

பா.ரா : த அப்ஸர்வர் இஸ் அப்ஸர்வ்டு.
Subscribe to:
Posts (Atom)