
அண்ணன் கோவி கண்ணன் பதின்ம வயதின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு, என்னையும் தொடரச்சொல்லி அழைத்துள்ளார். அவருக்கு மகிழ்ச்சிகளும் நன்றிகளும்.
கொசுவர்த்தி சுருளை 18 வருடம் பின்னோக்கி சுற்றினால்...
சிங்கார வேலனில் நம்ம கமல் சென்னைக்கு கிளம்பும்போது பக்கத்து வீட்டு அம்மா, கருவாடு கூடையை தன் மகன்கிட்ட சேர்க்க சொல்லி கொடுப்பாங்க.
கூடவே ஒரு டயலாக்கும் " இந்த ஊருல யார் பேச்சையும் தட்டாத நல்ல புள்ள நீதான்"னு
அந்த மாதிரிதான் என் நிலமையும். சுற்றியுள்ள மக்கள் சொன்னால் தட்ட முடியாத அளவுக்கு அன்பை வைத்திருந்தார்கள்.
பதிமூன்றாம் வயதின் தொடக்கம் ஏழாம் வகுப்பின் ஆரம்பம். ஆசிரியர்களும் என் மீது பிரியமாகவே இருந்தார்கள். உடம்பு சரியில்லாமல் அடிக்கடி லீவு எடுப்பது போன்ற நல்ல பழக்கங்களும் உண்டு. ஆனால் என்னிடமிருந்த ஒரே கெட்ட பழக்கம் (?) கிரிக்கெட். அண்ணன்களுடன் கிரிக்கெட் விளையாடுவதில் அவ்வளவு விருப்பம்.
ஒரு முறை கிரிக்கெட் விளையாட லீவு எடுத்தது தெரிந்து போய் இமேஜ் டேமேஜ் ஆகியது.
வாத்தியார் கேட்ட ஒரே கேள்வி " அந்த வெள்ளைக்காரனுங்கதான் வெயிலுக்காக விளையாடினாங்க. நீ இருக்குற நிலமைக்கு இந்த வேகாத வெயில்ல விளையாடனுமா? போ ராசா, போய் படி" இதுக்கு அவர் நாலு அடி அடித்திருக்கலாம்.
அன்றிலிருந்து உடம்பு சரியில்லைனா கூட வீட்டிலிருந்து ஆள் வந்தா தான் விடுவாங்க.
இருபாலர் பள்ளியாகையால் வீட்டிலிருந்து நல்ல குளித்து விட்டு , தலை சீவி நீட்டா ட்ரெஸ் பண்ணிதான் கிளம்புவோம்.
எங்கள் (புனித அந்தோனியார் நடுநிலை) பள்ளியில் ஒவ்வொரு மாதமும் தேர்வு வைத்து ராங்க் கொடுப்பது வழக்கம். லட்சுமி சங்கர். 6ம் வகுப்பிலிருந்து எனக்கு போட்டியாக இருந்த ஒரே ஆள். நல்ல நண்பன்(இனிய எதிரி).அவன்தான் லீடர். எப்போதும் முதல் ராங்க் எடுப்பவன்.எனக்கு ரெண்டாமிடம்.ஏழாம் வகுப்பில் ஒரு முறை அவனை முந்தி முதல் இடத்துக்கு வந்த ஒரு மாதமும் பேசமால் இருந்தான். அவ்வளவு வைராக்கியம்.
எட்டாம் வகுப்பு தொடக்கத்தில் சங்கர் வேறு ஸ்கூல் மாறி சென்றதால், பள்ளி மாணவர் தலைவன் (SPL ) பொறுப்பை தலைமையாசிரியர் ஏற்க சொன்னார். அதிலுள்ள தலைவலி (ஒன்னுமில்லை ஃபிரியா இருக்க முடியாது) அறிந்து மறுத்துவிட்டேன்.
SPL ன் வேலை காலை அசெம்ப்ளியில் உறுதிமொழி எடுப்பது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது இப்படி பல...
பின்பு, நம்ம ஸ்டார்ஜன் மற்றும் பலரை அந்த பொறுப்பு சுற்றி, குரல் சரியாக செட்டாகாததால் பின்பு என்னிடமே ஒப்படைக்கப்பட்டது ( நான் நல்லா கத்துவேன்).
ஸ்கூலில் சவ் மிட்டாய் விற்கும் அக்காவைச்சுற்றி எப்பவும் கூட்டம் இருக்கும். நம்ம ஸ்டார்ஜன் தான் அதிகமா வாங்கி தின்பாரு. அதனால மேலதிக விவரங்களுக்கு காண்டக்ட் ஸ்டார்ஜன் ப்ளீஸ்.
எங்கள் அம்மாவின் அம்மா ஊருக்கு சென்றால் ஆற்றில் குளிக்க செல்வது வழக்கம்( வீட்டிலும் குளிப்பேங்க). சகோதரி மற்றும் உறவினர் பெண்களுடன் தான் நானும் தம்பிகளும் செல்வோம். அவங்களுக்கெல்லாம் நாங்கதான் பாதுகாப்புன்னு ஒரு நெனப்பு(எங்களுக்குத்தான்). ஆற்றுக்கு செல்லும் வரை சந்தோசமாக பேசிக்கொண்டே செல்வது, குளித்து வரும் வழியில் வெள்ளரி, பதநீர், வடை என்று எதாவது சாப்பிட்டுக்கொண்டே போவதை நினைத்தால் நாக்கில் நீர் சுரக்கிறது.
யாராவது ஃபாலோ பண்ணுற மாதிரியோ, பார்த்துகிட்டே இருக்குற மாதிரியோ தெரிஞ்சா. நாங்க களத்துல இறங்கி ஒரே முறைப்புதான். அப்புறம் எப்படி பின்னாடி வருவாங்க?
அது மழை நேரம். வாய்க்கால் (கால்வாய்) நிறைய நீர். நானும் தம்பியும் குளித்து கொண்டிருக்கும் போது அடித்துச்செல்லப்பட்டோம். அடுத்த படித்துறையில் குளித்து கொண்டிருந்த அக்காமார்கள் பிடித்து இழுத்து காப்பாற்றி விட்டார்கள்.
வீட்டில் ஒரே பாராட்டு, நீ தம்பியை பிடிக்கலைன்னா அவன் தனியா போயிருப்பான்னு. நான் சொன்னேன், என் கையைப்பிடிச்சது அவன். தண்ணி அவனை இழுத்ததால் என்னை அவன் இழுத்து விட்டான் என்று.
கோபப்பட்டு ஏதாவது கத்தினால் அம்மம்மா சொல்லுவா. "பொறுமைக்கடல்ப்பா நீ(அவ்வ்வ்), இப்படி கோபப்பட மாட்டியே. ஒருத்தரை மாடு மாதிரி இருக்கியேன்னா கோபப்படுவான். அதையே பசு மாதிரி இருக்கியேன்னா சந்தோசப்படுவான். சொல் ஒன்னுதாம்ப அது தர்ற அர்த்தத்தை பார்த்தியா.யார்ட்ட பேசினாலும் பண்பா பேசணும். பொறுமைக்கு அழிவேயில்லைப்பா" என்று.
ஒன்பது , பத்தாம் வகுப்பை நெல்லை சாப்டர் மேல்நிலை பள்ளியில் படித்தேன். பஸ்காரர்கள் மாணவர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்ததால் நாங்கள் ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து கோயில் வாசலில் பஸ் ஏறுவோம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் (1995) 423 மார்க் எடுத்திருந்தேன். கணக்கில் 100. சாக்லெட் வாங்கி கொண்டு, பழைய பள்ளிக்கு சென்றேன். மிக்க மகிழ்ந்தார்கள். அன்றைய அசெம்ப்ளியில் அறிவிப்பும் செய்தது பெருமையாக இருந்தது.
வகுப்பு வாரியாக ஆசிரியர்களுக்கு சாக்லெட் கொடுத்துக்கொண்டே வந்தேன். 6ம் வகுப்பு டீச்சர் நான் படிக்கும் காலத்திலேயே ரொம்ப கண்டிப்பானவர். அவரிடம் கொடுத்ததும் அவர் சொன்னார். " தம்பி மார்க் எடுத்தது சந்தோசம், எனக்கு சாக்லெட் வேணாம்பா. அப்புறம் இன்னொன்னு, யாருக்கு கொடுத்தாலும் சாக்லெட்டை நீ எடுத்து கொடுக்காதே , அவங்களிடம் நீட்டு தேவையானதை எடுத்துப்பாங்க. யாரும் அள்ளிற மாட்டாங்க. அதுதான் மரியாதை" என்று. அப்போது நினைத்தேன் கற்று கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று.
இந்த கால கட்டங்களில் பெண்களுடன் சேர்ந்து ஆற்றுக்கு செல்வதை நிறுத்திக்கொண்டேன் (அல்லது நிறுத்திவிட்டார்கள்). பெண்களுடனான பழக்கம் குறைந்து ஆண்களின் பழக்கம் அதிகமாகியது.
ம்ம்ம்ம்ம்ம்..... அந்த காலம் மாதிரி வராது :)

பின்பு நெல்லை IRT பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.
வாழ்க்கையில் சில சிறப்பு தருணங்கள் அமையும் என்பார்களே அது ரெண்டாமாண்டில் ராதை மேடத்தின் மூலமாக் அமைந்தது. அப்போதுதான் B.E.,முடித்து விட்டு ட்ரைனிங் லெக்ட்சரராக சேர்ந்திருந்தார். நாலைந்து வயது வித்தியாசம் இருக்கும். அக்காக்களின் சரசரியான தோற்றம்.
வந்த முதல் நாளே பேச்சின் மூலம் எங்களை கவர்ந்து விட்டார். பெயர் விபரம் கேட்டவர். பின்பு கேட்ட கேள்வி "உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்" ஆளாளுக்கு பலரைச்சொல்ல. கடைசியில் "உங்களுக்கு பிடிச்ச ஹீரோ நீங்கதான். உலகத்தில் உங்களை நீங்கள் விரும்புகிற அளவுக்கு வேறு யாரையும் விரும்புவதில்லை. உங்களை நீங்கள் அறிந்து கொண்டால் எல்லோரும் விரும்புவராக மாறலாம்" என்று அவர் சொன்னார்.
எத்தனை பெரிய உண்மை. அன்றிலிருந்து எங்களில் ஒருவராக, எங்கள் வழிகாட்டியாக நாங்கள் பார்க்கத்தொடங்கினோம். அறிவுரை ஏதும் சொல்லவில்லை ஆனால் வாழ்ந்தார்கள். (எளிதாக சொல்லவேண்டும் என்றால் 3 idiots அமீர்கான் மாதிரி)
இருபாலர் கல்லூரியில் ஒன்றாக படித்தாலும். ஆண்களும் பெண்களும் அவரர்க்கான உலகங்களில் தான் வாழ்ந்து கொண்டிருந்தோம். "விலகி இருந்தால் தான் பிரச்சனை வரும். இருவரும் சேர்ந்து பழகி நண்பார்களாகி விடுங்கள். எந்த தப்பான எண்ணமும் வராது" என்று தெளிவு படுத்தியவர். அதன் பிறகு இருபாலரும் அருகில் அமர்ந்தாலும் நட்பைத்தவிர வேறெந்த எண்ணமும் வந்ததில்லை.
இன்றும் எந்த ஒரு செயலிலும் அவர்களின் பாதிப்பு தெரிகிறது. அது தான் அவர் நோக்கத்தின் வெற்றி.
பெருங்கடலில் ஒரு துளி போல நான் இங்கு சிலவற்றை மட்டுமே சொல்லமுடிந்தது.
சொன்னதெல்லாம் உண்மை. சொல்லாததும் உண்மை.
பதிவின் நீளம் , உங்கள் நேரம் இரண்டையும் கருதி இத்துடன் முற்றும்.
இந்த பதின்ம நினைவுகளை தொடர நான் அன்புடன் அழைப்பது.
கண்ணா
ஜெகநாதன்
நாடோடி
ஷங்கி
செ.சரவணகுமார்
,