Sunday, January 1, 2012

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

இணைய நட்புகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இந்நன்னாளில் தங்களும், தங்கள் குடும்பமும், சுற்றத்தாரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்!!


Saturday, August 27, 2011

காத்திருத்தல் என்பது தவம் (தொடர்பதிவு)

சவுதியிலிருந்து ஊர் செல்லும் நண்பர் பிரகாஷுக்கு பொருட்கள் வாங்க தம்பி, மச்சினனுடன் அருகிலுள்ள நகருக்கு சென்றிருந்தோம். எல்லாம் வாங்கி முடித்தவுடன், சாப்பிட ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தோம். தம்பியும் , மச்சினனும் பிரியாணி ஆர்டர் செய்ய, பிரகாஷ் மட்டும் “ரசம் சோறு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுண்ணே இன்னிக்கு வெறுஞ்சோறும் ரசமும் சாப்பிடுவோம்” என்றார். சட்டென்று எனக்கு சென்னையில் என்னுடன் வேலை செய்த சங்கர் அண்ணனின் ஞாபகம் வந்தது.

அவனும் இப்படித்தான். ரசம் சோறுக்காக உயிரை விடும் ரகம். ஒரு முறை காசி தியேட்டர் பக்கத்திலுள்ள சரவணபவனில் சாப்பிட்டு விட்டு படம் பார்க்க முடிவு செய்து சென்றோம். அங்குள்ள சர்வரிடம் ரசம் சாதம் இருக்குமான்னு இவன் கேட்க, இல்ல சார் இராத்திரி டிபன் மட்டும்தான் என்று அவர் சொல்லியும் கேளாமல், மதியம் உள்ளதையாவது கொடுங்கன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டுத்தான் கிளம்பினான்.

இது போலவே இன்னும் சில நண்பர்கள் ரசம் சாதத்தை மிகப் பிரியத்துடன் உண்பதை பல முறை கண்டிருக்கிறேன். எனக்கும் எனது அம்மா வைக்கும் ரசம் மிகப்பிடிக்கும். நான் கல்லூரி படித்த மூன்று வருடங்களும் பெரும்பாலும் ரசம் சோறுதான். பழகப் பழக பாலே புளிக்கும் போது, புளி ஊற்றிய ரசம் மட்டும் புளிக்காதா என்ன?!... ஒரு கட்டத்திற்கு மேல் ரசத்தை அடிக்கடி சாப்பிட பிடிக்காமல் போய் விட்டது.

அதே மாதிரி சிறு வயதில் கத்திரிக்காய், வெண்டங்காய் கண்டாலே அதில் உள்ள புழுதான் கண்ணில் வந்து நிற்கும். அதனால் எப்போதும் அதில் கூட்டு வைத்தால் மறக்காமல் ஒரு துணைக்கறியும் எனக்காக வைக்கப்பட்டு இருக்கும். இப்படி ஒதுக்கி ஒதுக்கி சாப்பிட்டு பழகிய எனக்கு அதன் அருமை புரியும்படியாக ஒரு சந்தர்ப்பம் அமைந்த்து.

ஒரு ஷோரூமில் சம்பளம் இல்லாமல் அப்ரண்டிஸாக வேலை செய்து கொண்டிருந்த நேரம் அது. நானும் நண்பர் முருகனும் மதுரையில் ஒரு சர்வீஸுக்குச் சென்று விட்டு ஜங்ஷன் பஸ் நிலையம் திரும்பும் போது ஊருக்குச் செல்லும் கடைசி பஸ் போயிருந்த்து. இரவு பன்னிரெண்டு மணியிலிருந்து அதிகாலை மூன்றரை மணி வரை காத்திருக்கவேண்டிய சூழல்.

கடுமையான பசி. டீ சாப்பிடலாமென்றால் கூட பஸ் ஸ்டாண்டிற்குள் ஒரு கடை திறந்திருக்கவில்லை. அங்கு கிடந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பஸ்ஸுக்காக காத்திருக்கத் தொடங்கினோம்.

நண்பர் முருகனிடம் “முருகா கோவணத்தோட கூட இருக்கலாம் போல, பசியோட இருக்கமுடியலையே “ என்றேன் சிரித்துக்கொண்டே, முருகன் கடைவாய்ப்பல் தெரிய சிரித்து விட்டு ”போங்கஜீ பேசாம மதுரையிலேயே சாப்பிட்டுட்டு வந்திருக்கலாம், நீங்கதான் கெடுத்துட்டீங்க. பெருங்குடல் சிறுகுடலை திங்குது” என்றார்.

இப்படியாக பேசிக்கொண்டு நேரத்தை நகர்த்திக் கொண்டிருந்தோம். அன்று இரவு முழுவதும் பசியோடு பஸ் ஸ்டாண்ட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தது மறக்கமுடியாத நினைவு. அன்று தான் பசியின் உண்மையான முகத்தை அறிந்த நாள். அஞ்சு நிமிசம் லேட்டானால், "அம்மா பசிக்குது சீக்கிரம் சோத்தைப்போடு" என்று சொல்வதெல்லாம் சும்மா. உண்மையான பசியொன்று இருக்கிறது. அது வந்துவிட்டால் வெக்கம், மானம் எல்லாம் மறந்து யாரிடமாவது ஒரு வாய் சோறு கேட்கக் கூட தயங்கமாட்டோம் என்பதை அன்றுதான் உணர்ந்து கொண்டேன்.

பின்பும் இது போல சாப்பாடு கிடைக்காமல் பல சூழ்நிலைகளில் பசியோடு காத்திருந்து இருக்கிறேன். இந்த முறை சவுதி திரும்பும்போது ஏர்லங்கா விமானத்தில் பயணம். வீட்டிலிருந்து கிளம்பும்போது கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவுக்கு கொடுத்து விட்டு, ஐம்பது சவுதி ரியாலை மட்டும் வைத்துக்கொண்டேன். ”எல்லாத்தையும் கொடுத்துட்டியேப்பா உன் செலவுக்கு என்ன செய்வே” எனக் கேட்ட அம்மாவிடம், "இதுவே அதிகம் தாம்மா" என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். இதற்கு முன்பு பயணித்த இருமுறையும் எட்டு மணி நேரம் சவுதி விமானத்திற்காக இலங்கையில் காத்திருந்திருக்கிறேன். ரூமும், மதியச்சாப்பாடும் கொடுத்து விடுவார்கள்.

அதை நம்பி இந்த முறை இலங்கையில் போய் இறங்கிய உடன் கையில் இருந்த ஐம்பது ரியாலில் நாற்பது ரியாலுக்கு ஊருக்கு போன் பேசிவிட்டு அங்கிருந்த காத்திருக்கும் பகுதியில் உட்கார்ந்து கொண்டு லேப்டாப்பில் பிள்ளைகளின் வீடியோ கிளிப்பிங்க்சை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மதியம் ஒரு மணிக்கு போய் சாப்பாடு கூப்பன் கேட்டால் விமானம் 2 மணி நேரம் முன்னதாக கிளம்புவதால் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். காலையில் விமானத்தில் ஒரு சாண்ட்விச்சும், ஜூஸும் மட்டுமே சாப்பிட்டுவிட்டு பசியோடு காத்திருந்த எனக்கு அவர்கள் சொன்னதை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆற்றமையில் என்ன பேசினாலும் அவர்களிடமிருந்து பதில் இல்லை. மனம் வெறுத்துப்போய் மறுபடியும் வந்து உட்கார்ந்து விட்டேன்.பளபளக்கும் விமான நிலையத்தில் கையில் வெறும் பத்து ரியாலோடு சாப்பிட வழியில்லாமல் இருக்கும் என் இயலாமையை நினைத்து நொந்து கொண்டேன்.

எனது ஊருக்கு பக்கத்து ஊரிலிருந்து அந்த விமானத்தில் வந்திருந்த இருவர் சாப்பாடு கொண்டு வந்திருந்தனர். சப்பாடுங்களேன்ன்னு கேட்டார்களானால் தயங்காமல் வெக்கத்தை விட்டு, கொஞ்சம் கொடுங்கன்னு கேட்டு விட வேண்டியதுதான் என்று காத்திருந்தேன். அவ்வளவு பசி. எனது பார்வையிலேயே நோக்கத்தை புரிந்து கொண்டார்களோ என்னவோ தப்பித்தவறி கூட சாப்பிடுங்களேன்னு ஒரு வார்த்தை கேட்கவில்லை. அவமானத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் விரக்தியுடன் சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

பத்து ரியாலுக்கு ஒரு சின்ன பிஸ்கட் பாக்கெட்டும், வாட்டர் பாட்டிலும் கிடைத்த்து. ரெண்டு மூணு பிஸ்கட்டுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. தண்ணீரை மட்டும் அவ்வப்போது குடித்து வயிற்றை நிறைத்துக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக விமானம் ஏறி, கொடுத்த உணவை சாப்பிட்ட பின்புதான் பாதி உயிர் திரும்பிய மாதிரி இருந்த்து.

இப்படி ஒவ்வொரு முறையும் பசியோடு காத்திருக்கும் போதும் உணவின் மீதான மதிப்பு கூடிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. ஆரம்ப காலங்களில் அம்மா அடிக்கடி பழைய சோறு சாப்பிடுவதை பார்க்கும்போதெல்லாம். “ஏம்மா இதைப்போய் சாப்பிடுதே, அதுதான் சுடுசோறு இருக்குல்ல” என்று கேட்டால். “இல்லப்பா நேத்து கொஞ்சம் மிஞ்சி போச்சி, தூரப்போட மனசில்ல” என்பாள். இப்போதெல்லாம் அந்த பழக்கம் என்னுள்ளும் ஒட்டிக்கொண்ட்து. முடிந்த அளவு மீதம் ஆக்காமல் சாப்பிடுவது, மீந்தாலும் அதை ஃப்ரிஜ்ஜில் வைத்து மறுநாள் பயன்படுத்திக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் குப்பையில் போடும் போதும் இன்னொருவருக்கான உணவுவை நாம் வீணாக்குகிறோம் என்ற குற்ற உணர்வு ஏற்படுவதால், இப்போதெல்லாம் முடிந்தவரை வீணாக்குவதில்லை.

என் அம்மாம்மா எப்போது பிரார்த்திக்கும் போதும் “எம்புள்ளைகள் எங்கே போனாலும் பசி, பட்டினி இல்லாமல் பார்த்துக்கோ ஆண்டவா” என்று வேண்டிக்கொள்வாள். நல்ல காசு பணத்தை கொடு என்று வேண்டிக்கொள்ளாமல் இப்படி வேண்டிக்கொள்வதை வாழ்க்கை கற்றுக்கொடுத்து இருக்கிறது போலும்.

என்னதான் சம்பாதித்தாலும். ஒரு வேளை உணவு கிடைக்கவில்லை எனில் என்ன பாடு படுகிறோம். பல நாட்கள் உணவே கிடைக்காமல் எலும்பும் தோலுமாக கண்ணில் பஞ்சடைந்து போய் பசியுடன் காத்திருக்கும் மக்களை எண்ணும் போது உண்மையிலேயே கண்ணில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை.

ஒவ்வொரு முறை பசியோடு காத்திருக்கும் போதும் மனதில் ஏற்படும் வைரக்கியம் ஒன்றே ஒன்றுதான். பசித்திருப்பவர்களின் பசியைப் போக்குவதை தவிர வாழ்வில் சாதிக்க பெரிதாக ஒன்றும் இல்லை என்பதுதான் அது.

"காத்திருத்தல்" என்ற தலைப்பில் இந்த தொடர்பதிவை ஆரம்பித்த அண்ணன் மாதவராஜ் அவர்களுக்கும், எழுத அழைத்த நண்பர் செ.சரவணக்குமார் அவர்களுக்கும் நன்றிகள்.

இதை தொடர விரும்பும் நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று தொடர வேண்டுகிறேன்.


Thursday, June 16, 2011

திருநெல்வேலி அல்வா (தொடர்பதிவு)








நம்ம ஊரை பத்தி எழுதச் சொல்லி நம்ம ஸாதிகா அக்கா ஒரு தொடர்பதிவுக்கு அழைச்சிருந்தாங்க. நெல்லையில பதிவர் சந்திப்பு நடக்கப்போற இந்த நேரத்துல இதை எழுத வாய்ப்பு கிடைச்சது உண்மையிலேயே சந்தோசமா இருக்கு.




எங்கூரு கதை மொத்தத்தையும் இந்த கட்டுரைல சொல்லணும்கிறது தாமிரபரணி ஆத்த சொம்புக்குள்ள அடைச்சி வைக்கிற மாதிரி ஆயிடும். அதனால இப்போ சொல்ற எல்லாமே ட்ரைலரா நெனச்சுகிடுங்க. மெயின் பிச்சர ஒரு தொடரா பின்னாடி எழுதலாம்.

தாமிரபரணி! பேரக்கேட்டாலே சும்மா ஜில்லுன்னு இருக்குல்ல... அதாண்ணே எங்கூரோட முதுகெலும்பு. ஆனா அதுல மண்ணள்ளி.. இல்ல இல்ல, அதுல மண்ணெடுத்து ஆத்தையே முடமாக்கிகிட்டு இருக்காங்க பாவி பயலுவ. சரி இப்ப அந்த சோகம் எதுக்கு நாம ஊரச் சுத்தி பார்க்கலாம் வாங்க
.

, உங்களுக்கொரு விசயம் தெரியுமா? திருநெவேலி 2000 வருஷத்துக்கு முன்னாடியே தோன்றுன ஆத்தங்கரை நாகரீகம்ணே. ஊரை பத்தி பேசுறதுக்கு பதிலா ஆத்தபத்தி பேசினாலே மொத்த ஊரும் அதுக்குள்ள வந்துரும். ஆறு போற எடம் பூரா பச்ச பசேல்னுட்டு கண்ணுக்கெட்டுன தூரம் பூராவயல் வரப்பும், வாய்க்காலுமா இருக்கும் இப்போ அதுல பாதி எடத்த ப்ளாட் போட்டு விக்கிறாங்க அது வேற கத
.

நம்ம மணி அண்ணனோட ரோஜா படத்துல, மதுபாலாக்காசின்ன சின்ன ஆசைன்னுபாடிக்கிட்டே ஒரு அருவில குளிக்கும்ல‌,அதான் பாணதீர்த்த அருவி. பொதிகை மலையில இருந்து விழும் பாணதீர்த்த அருவி தரை தொட்டு தாமிரபரணியா மாறுத அழக பார்த்துகிட்டே இருக்கலாம்ல. அங்கன ஒரு டேம் இருக்கு வெள்ளக்காரன் கட்னது.டேம் உள்ள ஊரு பேரு
காரையார்.



இங்கதான், எப்பேர்பட்ட மஞ்சக்காமாலையையும் தன்னோட மூலிகை மருந்தால குணப்படுத்தும் 100 வயசான அன்னம்மாள் பாட்டி இருந்தாங்க(இப்ப இல்ல). நான் கல்கத்தால இருந்தப்ப மஞ்சகாமாலை வந்து, அதனால ஊர் வந்து இவங்ககிட்ட மருந்து சாப்பிட்டு, அவங்க சொன்ன மாதிரி ஆத்துல ஒரு முங்கு போட்டேன். ரெண்டுமாசமா தீராம இருந்த மஞ்சக்காமாலை மருந்து சாப்பிட்ட ஒரு வாரத்துல படிப்படியா கொறஞ்சிட்டுது. அதுதாம்ணே தாமிரபரணி மகிமை.

அப்டி மலையில இருந்து கீழ எறங்குற ஆறு முதல்ல தொடுற இடம் பாபநாசம். இந்த ஊருக்கு இடப்பக்கம் 30 கிமி தள்ளி குற்றாலம் இருக்கு வலப்பக்கம் 20 கிமி தள்ளி மணிமுத்தாறு இருக்கு, அது மேல மாஞ்சோலை எஸ்டேட் இருக்கு. ஊட்டி, கொடைக்கானல் போறவங்க மாஞ்சோலை எஸ்டேட்டுக்கு போகலாம் அவ்வளவு அழகான தேயிலை தோட்டங்கள் நிறைந்த ஊர். போற பாதை செம த்ரிலிங்க இருக்கும்.



மாஞ்சோலையில் நான்.

அதுல இருந்து அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, வீரவ நல்லூர், சேர்மாதேவி, கல்லூர், சுத்தமல்லி, கோபலசமுத்திரம், கருங்காடு, குன்னத்தூர், மேலப்பாளையம், குறுக்குத்துறை வழியா திருநெல்வேலி சந்திப்ப அடையுது. அங்கிருந்து சிந்துபூந்துறை, கருங்குளம், திருவைகுண்டம், ஆத்தூர் வழியா போய் புன்னக்காயலில் கடல்ல கலக்குது. நெல்லை தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் முடியுது நம்ம ஆறு.





ஆறு பக்கத்துல இருக்கும் போது மீன்கள பத்தி கேட்கவா வேணும்! கெண்டை, கெளுத்தி,விரால்,அயிரைன்னு நிறைய வகைகள் உயிரோட கிடைக்கும். இது போக வாய்க்கால்ல மட்டும் கிடைக்க கூடிய விலாங்கு, ஆரா மீன்கள் ரொம்ப ஸ்பெஷல்.



இதுல சுத்தமல்லி ஊர்ல இருந்து 5 கிமி தள்ளி இருக்குது பேட்டை.

கண்ணியத்திற்குரிய
காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் பிறந்த அந்த பேட்டை தான் எங்க சொந்த ஊர். 200 வருடங்கள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் பள்ளிலதான் எட்டாம் வகுப்பு வரையும், அதற்கப்புறம் நெல்லை சாப்டர் மேனிலைப்பள்ளியிலும் படிச்சேன்.

பேட்டையில காமராஜர் மேனிலைப்பள்ளி, ராணி அண்ணா பெண்கள் மேனிலைப்பள்ளி, மா.தி.தா இந்து கல்லூரி, அரசு .டி.,பக்கத்துல உள்ள பழைய பேட்டையில் மகளிர் கல்லூரி என முழுமையான படிப்பு வசதி உள்ள ஊர் பேட்டை. சுற்றியுள்ள கிராமங்கள்ல இருந்தெல்லாம் வந்து இங்கு நிறைய பேர் படிக்கிறாங்க
.

பேட்டைக்குள்ளேயே இருக்குற தொழிற்பேட்டையில, பல சிறிய தொழிற்சாலைகள் நடந்துகிட்டு இருக்கு, எல்லாத்துக்கும் மேலதென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை(பேட்டை மில்) இங்கே இருக்கும் போது நல்ல பணப்புழக்கமும் இருந்துச்சு
.

இங்கு ஊதுற சங்கு சத்தத்தை வச்சுத்தான் எங்கூர்ல மணியே சொல்வாங்க. இதுக்கு முந்தைய .தி.மு. ஆட்சியில அதுக்கும் சங்கு ஊதிட்டாங்க. அதுக்கு பின்னாடி வந்த ஆட்சியில திறக்கிறேனாங்க. இன்னிக்கு வரைக்கும் இல்ல
.

மா.தி,தா இந்து கல்லூரியோட பள்ளி நெல்லை சந்திப்புல இருக்கு.மகாகவி சுப்பிரமணிய
பாரதியார் படிச்ச பெருமையும் இந்த பள்ளிக்கு இருக்கு.

நெல்லை நகரோட ஒரே பொழுதுபோக்கு தியேட்டர்கள்தான் நீங்க இறங்குற எந்த பஸ் ஸ்டாப்பு பக்கத்துலயும் ஒரு தியேட்டர் இருக்கும். உண்மையைச் சொல்ல போனா தியேட்டரை கணக்கு பண்ணித்தான் பஸ் ஸ்டாப்பே இருக்கும்
.

அதுக்கு அடுத்ததா ஜங்ஷன் தாமிரபரணி ஆத்து பாலத்தை ஒட்டி மாவட்ட அறிவியல் மையம் அமைஞ்சிருக்கு. இங்கும் குழந்தைகளோட நிறைய பேர் போவாங்க. இங்குள்ள டிஜிட்டல் கோளரங்கம் பார்க்கவேண்டிய ஒன்னு
.

பேட்டையில இருந்து மூணு கிலோமீட்டர் தூரத்துலதான் நெல்லை டவுண், இங்கே இருக்கும் புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலை சுத்தி இருக்கிற நாலு ரதவீதியும் தான் நெல்லையோட தெற்கு உஸ்மான் சாலை. ஆரெம்கேவி, போத்தீஸ், நாவல்டி, சோனா அப்படின்னு இங்கே இல்லாத துணிக்கடைகளே இல்லை ( இப்ப ஆரெம்கேவியை வண்ணார்பேட்டைக்கு மாத்திட்டாங்க) அதுபோலவே அனைத்து தங்க நகைக்கடைகளும் இங்கதான் இருக்கு
.

கல்யாணம், காதுகுத்து, சடங்கு, வளைகாப்புன்னு எல்லா விசேஷத்துக்கும் சாமான் வாங்க சொந்த பந்தத்தையெல்லாம் கூட்டிட்டு படைபடையா இங்க தான் வந்து எறங்குவோம். ஒரு பட்டு எடுக்க ஊரையே கூட்டிட்டு போற பெருமையை நாங்க யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்ல
.

அப்புறம் துணிமணி, நகை நட்டெல்லாம் எடுத்துட்டு, எல்லாத்தையும் கூட்டிட்டு ஒரு ஹோட்டலுக்கு போய் டிபனோ அல்லது ஒரு டீயும் வடையுமோ வாங்கி கொடுக்கலைன்னு வைங்க. உங்க பேரு ஊரு பூரா நாறிப்போயிரும்
.

நெல்லை புரோட்டா சால்னாவுக்கும், சைவச் சாப்பாட்டுக்கும் ரொம்ப பேமஸ் கொறஞ்ச விலையில தரமான சாப்பாடு ஊரைச்சுத்தி கிடைக்கும். இவ்வளவு சொல்லிட்டு இருட்டுக்கடையை பத்தி சொல்லாமலா... நெல்லையப்பர் கோவிலுக்கு எதிர்த்தாப்லதான் இருட்டுக்கடை அல்வா இருக்கு. சாயந்திரம் 5 மணில இருந்து 10 மணி வரைக்கும்தான் வியாபராம் ச்ச்சே.. வியாபாரம். (பாருங்க அல்வாவப்பத்தி பேசுனா எழுத்தே வழுக்குது
).

இந்த கடைக்கு பேர் போர்டெல்லாம் கிடையாது. ஆனா ஊரைச்சுத்தி இருட்டுக்கடை அல்வான்னு போர்டு தொங்குற கடைகளெல்லாம் ஒரிஜினல் இருட்டுக்கடை கிடையாது. அதே போர்டு வைக்க முடிஞ்சவங்களுக்கு அல்வால அதே டேஸ்ட்ட வைக்க முடியலை
.



வெள்ளையடிக்கிற கடைதான் இருட்டுக்கடை


அது போல ஜங்ஷன்ல இருக்குறசாந்தி ஸ்வீட்ஸ்லாலா கடையும் அல்வாவுக்கும் மிக்சர் ,ஸ்வீட்ஸ்க்கும் ரொம்ப பேமஸ். மொய்க்க எடம் கொடுக்காத அளவுக்கு எந்நேரமும் கூட்டம் மொச்சிக்கிட்டு நிக்கும்.
ஊரெல்லாம் சாந்தி ஸ்வீட்ஸ்ன்னு பேர் வச்ச கடைகள் இருந்தாலும் இதுதான் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸ்.

அதுமாதிரி சாந்திக்கு ஸ்வீட்ஸ்க்கு எதிர்த்தாப்ல‌ இருக்குற லட்சுமி விலாஸ் லாலா கடையிலும், அரசன் ஸ்வீட்ஸிலும் தரமான அல்வா கிடைக்கும்.





நெல்லை நகரத்துக்கு இணையா ஆத்துக்கு அந்த புறம் இருக்கிற நகரம் பாளையங்கோட்டைதென்னகத்தின் ஆக்ஸ்போர்டுங்கிற பெருமைக்குரிய நகரம். இங்கதான் நம்ம சித்ராக்கா பிறந்தாங்கங்கிறது இன்னும் சிறப்பு.

இந்த ரெண்டு நகரத்தையும் இணைக்கிற ஆத்து பாலம் வெள்ளைக்காரங்க காலத்துல நமது சுலோச்சன முதலியார் அவங்களால கட்டப்பட்டது.

என்ன அதுக்குள்ள எங்க கெளம்பிட்டிங்க நெல்லையில நடக்கிற பதிவர் சந்திப்புக்கா? , அதுக்குத்தான் இன்னும் நாள் இருக்குல்ல... சரி போனா நான் சொன்ன இடங்களையும் மறக்காம பாத்துட்டு வந்து எழுதுங்க என்ன
.


தொடர்பதிவுக்கு அழைத்த ஸாதிகாக்கவுக்கு நன்றி. படங்கள் உதவி கூகிள் .

இதையும் விரும்புவீர்கள்.

Related Posts with Thumbnails